Pergularia daemia; வேலிப்பருத்தி; உத்தாமணி
வேலி ஓரங்களில் அதிகமாக பார்க்கக் கூடிய ஒருவகை ஏறு கொடி தான் இந்த வேலிப்பருத்தி. இதய வடிவ இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும் ஒரு மூலிகை கொடி இது. பசுமை நிற மலர்கள் கொத்தாக காணப்படக்கூடியது.
இதனுடைய காய் கனிகள் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கும். வெடித்து சிதற கூடிய இரண்டு வெடிகனி ஒரு முனையில் சேர்ந்திருக்கும். காய்கனிகளின் மேற்பகுதி சாம்பல் நிறத்தில் வலிமையற்ற முட்களுடன் இருக்கும். இதன் உள்ளிருக்கும் முட்டை வடிவமான விதைகள் பட்டு போன்ற பஞ்சிழைகளுடன் அடைக்கப்பட்டிருக்கும். சாதாரணமாக பஞ்சின் கீழ் விதைகள் ஆங்காங்கே பறப்பதைப் பார்த்திருப்போம். அவை பெரும்பாலும் இந்த வேலிப்பருத்தியின் விதைகள் தான். இவை பாலுள்ள பிசுபிசுப்பான ஏறு கொடி. எந்த இடத்தை கல்லினாலும் பால் வடியும்.
வேறு பெயர்கள்
உத்தாமணி, வேலிப்பருத்தி, உத்தம கன்னிகை, உத்தமாகாணி என பல்வேறு பெயர்கள் இதற்கு உண்டு. இதன் இலை, வேர் ஆகியன மருத்துவ பயன்பாட்டுக்கு உகந்தது. இதனுடைய மெல்லிய வலிமையற்ற முட்கள் கொண்ட காய்களை சமையலிலும் பயன்படுத்தலாம். இதனுடைய சுவை கைப்பு சுவை, கசப்பு தன்மை அதிகம் கொண்டிருக்கக் கூடியது. வெப்பத் தன்மையைக் கொண்டது.
இதன் இலைகளில் உடலுக்கு தேவைப்படும் ஒருவிதமான ஆல்கலாய்டு சத்துக்கள் அதிகம் உள்ளது. இதன் வேரில் கசப்பு குளுக்கோசைட் உள்ளது. இந்த வேலிப்பருத்தி கோழையகற்றியாகவும், பூச்சிக் கொல்லியாகவும், வாந்தியுண்டக்கியாகவும் செயல்படக்கூடியது. மேலும் முறை நோயை நீக்கவும், இசிவு போக்குதலுக்கும் உதவுகிறது.
வயிற்றுப்புழுக்கள் வெளியேற
கிராமங்களில் இன்றும் இந்த வேலிப்பருத்தி இலையை கொண்டு குழந்தைகளின் வயிற்றில் இருக்கும் பூச்சியை ஒழிக்க பயன்படுத்தும் பழக்கமுண்டு. வேலிப்பருத்தி இலை குடிநீரை ஒரு சங்களவு குழந்தைகளுக்குப் புகட்ட வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.
வேலிப்பருத்தி வேரை உலர்த்தி பொடி செய்து இரண்டு கிராம் வீதம் பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க வாய்வு தொல்லைகள் நீங்கி நன்கு பேதியாகும். கிருமிகள், பூச்சிகள் இறந்து வெளியேறும்.
வாத நோயக்கு
வாத நோயினால் உண்டாகும் குடைச்சல், குத்தல், நடுக்கம், வீக்கம், வலி, அஜீரணம், கப நோயினால் உண்டாகும் சுவாசகாசம் எனப்படும் இரைப்பு, இருமல், கோழை ஆகியவற்றை குணமாக்கக் கூடிய ஒரு அற்புதமான மருந்தாகும் இந்த வேலிப்பருத்தி.
‘வாதம் போக்கும் உத்தாமணி’
வேலிப்பருத்தி இலைச்சாறு பெருங்காயம், சுக்கு பொடி சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டில் பற்று போட வாதவலிகள், வீக்கங்கள் நீங்கும். தொடக்க நிலையிலிருக்கும் யானைக்கால் நோய்க்கு இவ்வாறு தொடர்ந்து செய்வதால் சிறந்த பலனை பெறலாம்.
வீக்கங்கள்
வேலிப்பருத்தி இலை சாறுடன் சுண்ணாம்பு கலந்து கால் வீக்கங்களுக்கு பற்றாகப் போட விரைவில் வீக்கங்கள் குறையும்.
தடிப்பு, அரிப்பு நீங்க
தடிப்பு, அரிப்பு, காணாக்கடி போன்றவற்றிற்கு வேலிப்பருத்தி இலைச் சாறை தடவி வர விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
வழுக்கை நீங்க
வேலிப்பருத்தி இலை சாறுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வழுக்கை உள்ள இடங்களில் அன்றாடம் தொடர்ந்து தேய்க்க வழுக்கை நீங்கி முடி வளரும்.
பெண்களுக்கு வரும் பதிப்புகளுக்கு
பெண்களின் கருப்பையின் பாதிப்பால் ஏற்படும் இடுப்பு வலிக்கு வேலிப்பருத்தி இலை சாறுடன் தேன் கலந்து பருக நல்ல பலன் கிடைக்கும்.
சளியுடன் கூடிய கபம் குணமாக
கபம் குணமாக – வேலிப்பருத்தி இலையுடன், பொடுதலை, நுணா, நொச்சி இலைகளை வகைக்கு ஒரு கைப்பிடி எடுத்து வதக்கி பிழிந்து சாறு எடுத்து 5 மில்லி சாறு குடிக்க சளியுடன் கூடிய கபம் குணமாகும்.
வேலிப்பருத்தி வேர்
பல தொந்தரவுகளுக்கு – வேலிப்பருத்தி வேரைப் பாலில் அரைத்துக் 5 கிராம் அளவு நன்கு கலக்கி வடிகட்டி தினமும் காலையில் மட்டும் 3 நாட்கள் குடித்து வர வாயு கரப்பான், கிரந்தி, விஷக்கடி, வாய்வு நீங்கும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் சகல வியாதிகளும் நீங்க
வேலிப்பருத்தி இலை சாறில் 7 முறை மிளகை ஊற வைத்து, உலர்த்தி தூள் செய்து அரை சிட்டிகை அளவு மருந்தாக எடுத்து பால் அல்லது தேனில் குழந்தைகளுக்குக் கொடுக்க செரியாமை, வாந்தி, மாந்த இழுப்பு, கை கால் சில்லிட்டுப் போதல், சுரம் என குழந்தைகளுக்கு ஏற்படும் சகல வியாதிகளுக்கும் கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.