வீரத்தை பறைசாற்றும் வகையில் செய்யக் கூடிய ஆசனம் என்பதால் வீரபத்ராசனம் என்றும் வீராசனம் என்றும் இந்த ஆசனத்தை அழைப்பதுண்டு. உடலுக்கு நல்ல கம்பீரமான தோற்றத்தையும் சிறந்த உடல் வலுவையும் அளிக்கும் ஆசனம். விளையாட்டு வீரர்கள் மற்றும் போர் வீரர்கள் இந்த ஆசனத்தை செய்வதால் நல்ல கட்டுமஸ்தான உடலை அடையலாம்.
வீரபத்ராசனம் செய்முறை
தரை விரிப்பில் நேராக நின்று இடது காலை முன்பக்கமாக இரண்டு அடி தள்ளி வைக்க வேண்டும். பின் மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கைகளையும் முன்புறமாக மேலே எடுத்துச் செல்ல வேண்டும். அதே நேரத்தில் முன்புறம் உள்ள காலை மடக்கியவாறு இரண்டு கைகளையும் மேலே தூக்கியவாறு இணைக்க வேண்டும். பார்வை இலேசாக மேல்நோக்கி இருக்க, முதுகெலும்பு நன்றாகப் பின்புறமாக வளைந்திருக்க வேண்டும். சில வினாடிக்குப் பின் மூச்சை வெளியே விட்டவாறு கைகளைக் கீழே இறக்கியவாறு காலைகளை நேராக வைக்க வேண்டும்.இவ்வாறு மறு காலையும் முன் வைத்து செய்யவேண்டும். ஆரம்பத்தில் சில நிமிடங்கள் செய்து பின் அதிக முறை இவ்வாறு செய்ய உடல் வலுவடையும்.
வீரபத்ராசனம் பலன்கள்
நுரையீரல் பலமடையும், முதுகெலும்பு வலி தொந்தரவுகள் மறையும், இடுப்பு வலி, மூட்டு வலி, முதுகு வலி நீங்கும். தேவையில்லாத தொடை சதை, அடிவயிற்று சதை, தொப்பை கரையும், கால்கள் வலுபெறும். உடலுக்கு நல்ல சுறுசுறுப்பை அளித்து, நீண்ட நேர உழைப்புத் திறனை அதிகரிக்கும்.
வீரபத்ராசனம் யார் செய்யலாம்
ஆண், பெண் என அனைவருக்கும் ஏற்ற ஆசனம். உடல் வலுவையும் கட்டுமஸ்தான உடலையும் பெற விரும்புபவர்களுக்கு சிறந்த ஆசனம். ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறந்தது. போட்டிக்கு செல்பவர்களுக்கு சிறந்தது.
வீரபத்ராசனம் யார் செய்யக் கூடாது
வீரபத்ராசனம் இருதய பாதிப்பு உள்ளவர்களும், அறுவை சிகிச்சை செய்தவர்களும் செய்யக் கூடாது. சிறுவர்களுக்கு அவசியமில்லை.