வசம்பு – நம் மூலிகை அறிவோம்

Acrous Calamus; Sweet Flag; வசம்பு

குழந்தை இருக்கும் வீட்டில் வசம்பு தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் என்று கூட சொல்லலாம். பிறந்த குழந்தை இருக்கக்கூடிய வீடுகளில் அதிகமாக பயன்படுத்தக்கூடிய ஒரு மூலிகை இந்த வசம்பு. அதனால் பிள்ளை மருந்து என்று இதற்கு ஒரு பெயரும் உண்டு. பிள்ளைகளுக்கு அதிகமாக பயன்படக்கூடிய ஒரு மருத்துவப் பொருள்.

வசம்பு வேறு பெயர்கள்

உக்கிரம், வசை, வசம், வேணி, பிள்ளை மருந்து, சுடவான், உரைப்பான், பேர் சொல்லா மருந்து என பல பெயர்களும் இந்த வசம்புக்கு உள்ளது. சிறந்த ஒரு கிருமி நாசினியாகவும் பசியை தூண்டக் கூடியதாகவும், அதிகப்படியான வாய்வை அகற்றக்கூடியதாகவும் வசம்பு உள்ளது.

இந்த வசம்பின் பெயரைச் சொல்லாமலேயே பயன்படுத்தக்கூடிய பழக்கம் இன்றும் கிராமப்புறங்களில் அதிகமாகவே உள்ளது. அதனாலேயே உரைப்பான், பேர் சொல்லா மருந்து என வசம்பை குறிப்பதுண்டு.

வசம்பு செடி

அதிகமான கிளைகளுடன் படர்ந்து வளரக்கூடிய ஒரு செடி வகை தாவரம் இந்த வசம்பு. இதனுடைய மணமுள்ள வேர்தண்டுகள் நீண்டு அதிகம் படர்ந்து வளரும் தன்மை கொண்டிருக்கக்கூடியது.

பூக்கள், மொட்டுகள், இலை ஆகியவை மடல்களில் உட்புறமாக தோன்றக்கூடிய அமைப்பையும் வசம்பு பெற்றிருக்கிறது. பூக்கள் சிறிதாகவும் நீளமாகவும் இருக்கக் கூடியது. பழங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். வசம்பின் சாம்பல் படிந்திருக்கும் வேர்தண்டுகள் நமது பெருவிரல் கணம் இருக்கக்கூடியதாக இருக்கும். இதுவே மருத்துவத்திற்கு அதிகமாக பயன்படக் கூடியதாக உள்ளது.

குழந்தைகளுக்கு வசம்பு

பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு இந்த வசம்பை கைகளில் வளையல் போல் கட்டி விடுவது இன்றும் பயன்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு பழக்கமாக தமிழகத்தில் உள்ளது. குழந்தைகளுக்கு வரக்கூடிய பல விதமான பிரச்சனைகளுக்கு இந்த வசம்பை சுட்டு கரியாக்கி அதனுடைய கரியை பயன்படுத்துவதும் உண்டு. குழந்தைகளுக்கு இந்த வசம்பை கையில் வளையல் போல் கட்டி விடுவதால் கிருமிகளால் வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கலாம், பசியை தூண்டக் கூடியதாகவும் இருக்கும். நல்ல ஒரு செரிமானத்தை அளிக்கக்கூடிய ஒரு சிறந்த மூலிகையாகவும் வசம்பு உள்ளது.

வசம்பு பயன்கள்

ரத்த பித்தம், வாய்நாற்றம், விஷயங்களால் வரக்கூடிய புண்கள், இருமல், அஜீரணம், வாத பித்தம், யானைக்கால், கபநோய்கள், நாடாப்புழு, வயிற்றுவலி, மாந்தம், பெருமல் போன்ற தொந்தரவுகளுக்கும் சிறந்த ஒரு மருந்தாக இந்த வசம்பு பயன்படக் கூடியதாக உள்ளது.

தொண்டைக்கம்மல், இருமல்

தொண்டைக்கம்மல், இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு வசம்பின் சிறு துண்டை வாயிலிட்டுச் உமிழ்நீர் கொண்டு சுவைக்க உமிழ்நீர் பெருக்கும், தொண்டைக்கம்மல் நீங்கும். இருமல் அதிகம் இருக்கக்கூடிய சமயங்களில் ஒரு சிறு துண்டு வசம்பை வாயில் அடக்கி வைக்க நல்ல ஒரு பலனை பெறலாம்.

வசம்பு தூள்

அஜீரணம், சொறி, சிரங்கு, உடலில் ஏற்படும் பலவிதமான காய்ச்சல், வயிற்றுப் பொருமல், வாய்வு சார்ந்த பிரச்சனைகள், திக்குவாய், உடல் பலமின்மை, வயிற்றுப்போக்கு போன்ற தொந்தரவுகளுக்கு வசம்பு தூளுடன் தேனைக் குழைத்து காலையில் ஒரு நாற்பது நாட்கள் உண்டு வர நீங்கும்.

வசம்பு சாம்பல்

வசம்பை சுட்டு ஒரு சிட்டிகை அளவு அந்த வசம்பு கரி பொடியை எடுத்து தாய் பாலில் கலந்து சிறுகுழந்தைகளுக்கு கொடுக்க ஓயாது காரணமில்லாமல் அழுகும் குழந்தைகளின் அழுகை நிற்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் போன்ற தொந்தரவுகள் நீங்கும். பொதுவாக காரணமில்லாமல் குழந்தை அழுகும் பொழுது இன்றும் கிராமப்புறங்களில் இந்த கை வைத்திய முறைய செய்வதுண்டு. உரை மருந்தாகவும் இதனை கொடுப்பதால் உரைப்பான் என அழைப்பதுண்டு.

சுட்டு கிடைக்கும் வசம்பு சாம்பல் தூளை தேனில் குழைத்து உட்கொள்ள வாயு, சளி, வாந்தி போன்ற பிரச்சனைகள் நீங்கும், பசியை ஏற்படுத்தும்.

வசம்பு மை

இந்த வசம்பு கரியைக் கொண்டு குழந்தைகளுக்கு மை பொட்டு வைக்க குழந்தைகள் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.

கீல்வாதம்

நாட்பட்ட கீல்வாத நோய்களுக்கும் வசம்பு பற்று பயன்படுகிறது.

வசம்பு மருந்து பொடி

சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய் தோலுடன் வசம்பு, இன்னும் சில மூலிகை சரக்குகளையும் சம அளவு சேர்த்து பொடித்து சிறிதளவு உட்கொள்ள அஜீரணம், வாத நோய், மயக்கம், மாந்தம், வயிற்றுப் பொருமல், மாந்தக் கழிச்சல், காக்காவலிப்பு, வயிற்றுவலி ஆகியவை நீங்கும்.

(1 vote)