காய்ச்சல், இருமல், சளி என ஒவ்வொரு தொந்தரவும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருந்ததாலும் பல சமயங்களில் வறட்டு இருமல் வேறு எந்த தொந்தரவும் இல்லாமல் நம்மை வாட்டி எடுக்கும். அதிலும் இரவு நேரங்களில் வறட்டு இருமலால் பலர் பாதிக்கப்படுவதுண்டு. இவை தொடர்வதால் உடலின் வெப்பநிலை அதிகரிப்பதும், சிலநேரங்களில் காய்ச்சல் வருவது, மூச்சு திணறல் ஏற்படுவது, தொண்டை வலி, இரத்த அழுத்தம், நுரையீரல் தொந்தரவுகள் என அடுத்தடுத்து நம்மை உருக்குலைய வைக்கும்.
நாள்பட்ட, மாதக்கணக்கில் இருக்கும் வறட்டு இருமலுக்கு சரியான மருத்துவமுறையை மேற்கொள்வது சிறந்தது என்றாலும் அவ்வப்பொழுது வரும் தொந்தரவிற்கு வீட்டிலேயே சில பாட்டி வைத்திய முறையை பின்பற்றலாம்.
வறட்டு இருமலுக்கான சில எளிய வீட்டு வைத்திய முறைகள்
- தேன் மிக சிறந்த கிருமிநாசினி மட்டுமல்லாமல் வறட்டு இருமலையும், தொண்டையில் ஏற்படும் பாதிப்புகளையும் போக்க வல்லது. வறட்டு இருமல் ஏற்படும் சமயம் சிறிது தேனை கையில் விட்டு அதனை நாக்கினால் நக்கி உண்ண விரைவில் பலன் கிடைக்கும்.
- வீட்டில் இருக்கும் மிளகு மற்றும் பொரிகடலையை இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு மூன்று வேளையும் இதனை ஒரு ஸ்பூன் அளவு உண்ண விரைவில் வறட்டு இருமல் மறையும்.
- ஆடாதோடை இலை சாறுடன் தேன் கலந்து சிறிதளவு உட்கொள்ள எப்பேர்பட்ட வறட்டு இருமலும் அகலும்.
- வெந்தயக் கீரையில் அதிகளவில் உணவில் சேர்த்துவர இந்த தொந்தரவு மறையும்.
- முற்றிய வெண்டைக்காய் சூப் அல்லது வெண்டக்காய் ஊறல் நீர் இந்த பதிப்பை அகற்றும்.
- அன்றாடம் உணவில் நான்கைந்து சின்ன வெங்காயத்தை பச்சையாக உண்ண நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பததோடு வறட்டு இருமலும் மெல்ல மறையும்.
- மஞ்சளை பச்சையாகவோ, பாலுடனோ அல்லது மிளகு மஞ்சள் தேநீரகவோ அன்றாடம் பருக இந்த தொந்தரவு காணாமலேயே போகும்.
- இஞ்சியை காலை வேளை உணவுடன் உட்கொள்வது உடலை பாதுகாத்து வறட்டு இருமலை நீக்கும்.
- அதிகமாக வறட்டு இருமல் இருக்கும் பொழுது ஒரு கிராம்பை வாயில் அடக்கிவைக்க இருமல் மறையும்.
- அன்றாடம் மஞ்சள், இஞ்சி, தேன் கலந்த எலுமிச்சை சாறு பருக விரைவில் நல்ல பலனை கிடைக்கும்.