Prosopis spicigera; வன்னி மரம்; Prosopis cineraria
பல கோயில்களில் தலவிருட்சமாக இருக்கக் கூடிய சக்தி வாய்ந்த மரங்களில் ஒன்றானது வன்னிமரம். இந்த வன்னி மரத்தை பல கோயில்களில் நாம் பார்க்க முடியும், குறிப்பாக திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலிலும் (2000 வருடம் பழமை வாய்ந்த மரம்) தல விருட்சமாக இருக்கக்கூடிய மரம்.
முப்பதிற்கும் மேற்பட்ட பாடல் பெற்ற ஸ்தலங்களிலும் இந்த வன்னி மரம் தல விருட்சமாக உள்ளது. இது ஒரு கற்பதரு மரம். வில்வத்திற்கு அடுத்தபடியாக மிகுதியான கோயில்களில் தலமரமாகயும் இந்த வன்னி மரமே உள்ளது.
இந்த வன்னி மரம் பலவிதமான மருத்துவ குணங்களையும் அற்புதமான சக்தியையும் கொண்டிருக்கக்கூடிய ஒரு சிறந்த மரம். ஆன்மீக ரீதியாக பல தகவல்களை கொண்டிருக்கக்கூடிய மரமாகவும் இந்த வன்னி மரம் உள்ளது. கும்ப ராசிக்கும் அவிட்ட நட்சத்திரத்திற்குமான மரம் இது. சைவ குரவர் திருஞானசம்பந்தர் தேவாரத்தில் இந்த மரத்தை குறிபிட்டுள்ளார்.
பொதுவாக பாலைவனங்களில் கூட இந்த மரங்களை நாம் அதிகம் பார்க்க முடியும். தமிழகத்தில் மட்டும் இல்லாமல் பல ஆசிய நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்த மரத்தை அதிகமாகவே உள்ளது. வறண்ட நிலங்களில் மழையின் அளவு மிகக் குறைவாக இருக்கக் கூடிய இடங்களிலும் சாதாரணமாக வளரக்கூடிய ஒரு அருமையான மரம் இது.
வன்னி பெயர்கள்
நெருப்பு, பேரும்மை, தகனம், சமி என பல பெயர்களை கொண்டிருக்கக்கூடிய மரமாகவும் இந்த வன்னிமரம் உள்ளது. இது ஒரு சிறு மர அமைப்பை கொண்டிருக்கிறது. இதன் அடிமரம் பொதுவாக கருப்பு நிறத்தில் காணக்கூடியதாக உள்ளது, அதே போல் இந்த அடிமரம் சற்று மேல்மரத்தை விட சற்று கனமாகவும் இருக்கும்.
மேல் நோக்கி வளர்ந்து கிளைகளை விட்டு பின் சிறிது சிறிதாக பல கிளைகளைக் கொண்டு இருக்கக்கூடிய ஒரு மர வகை இது. நன்கு வளர்ந்த மரங்களை பார்த்தால் கொடி போல இருக்கும். கிளைகள் கொடி போல கீழே தொங்க கூடியதாகவும் இருக்கும். வன்னி மர இலைகள் சிறிய இலைகளாகவும், எதிர் எதிர் சிறகு வடிவ கூட்டிலைகளாகவும் இருக்கும். இது ஒரு முள்ளுள்ள மரமாகும்.
இதனுடைய பூக்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதனுடைய கனிகள் புளி போல் சதைப்பற்றுள்ள நீள் உருளை வடிவில் இருக்கும். வன்னி மரத்தின் இலை, பட்டை, காய் என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது. வாதம், பித்தம், கபம் போன்ற நோய்களுக்கு ஒரு அற்புதமான மருந்து இந்த வன்னி மரம்.
சாயப் பொருட்களை தயாரிக்க இந்த வன்னி விதைகள் பயன்படுகிறது. இயற்கையான மஞ்சள் நிற சாயத்தை இதிலிருந்து நாம் பெற முடியும்.
தலைசுற்றல், சொறி, பல் நோய்கள், வீக்கம், விஷம், காய்ச்சல், வாத ஜனனி, பெண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல ஒரு மருந்தாக இருக்கக் கூடியது. இரத்தத்தை சுத்திகரிக்கும் சிறந்த தன்மை கொண்ட மரம்.
பயன்கள்
- வன்னி மரத்து முதிர்ந்த காய்யின் தோலெடுத்து குடிநீராக தயாரித்து பருக உள் வெப்பத்தை அது நீக்கும்.
- இந்த வன்னி மரத்து காய்களை நீரில் கொதிக்கவைத்து வாய்கொப்பளிக்க வாயில் வரும் தொந்தரவுகள், பல் வலி, ஈறுகளில் வரும் தொந்தரவுகள் வீக்கம் தீரும்.
- நரம்பு தளர்ச்சிக்கு வன்னி இலைகள் பயன்படும்.
- விசக்கடிகளுக்கு வன்னி மரத்து பட்டையை அரைத்து தேய்க்க குறையும்.
- அஜீரணம், தசை வலி, கட்டிகள், புண் ஆகியவற்றிற்கும் வன்னிப் பட்டை சிறந்தது.
பட்டை
வன்னி மரத்தின் இலை, காய், பட்டை என அனைத்துமே வாத, பித்த, கப நோய்களும், சருமத்தில் வரக்கூடிய பிரச்சனைகளுக்கும் சிறந்தது. இவற்றை பால் கலந்து அரைத்து வடிகட்டி மிக சிறிதளவு அன்றாடம் பருகி வர இந்த பிரச்சனைகளிலிருந்து விரைவாக வெளிவர முடியும்.
அது மட்டுமல்லாமல் பெண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதலில் இருந்து விரைவாக வெளிவர உதவக் கூடியதாக உள்ளது. இந்த மரத்தின் பட்டையையும் பொடியாக தயாரித்து வைத்துக்கொண்டு அன்றாடம் காலை, மாலை ஒரு சிட்டிகை அளவு உண்டுவர இந்த பிரச்சனைகளில் இருந்தும் விரைவாக வெளிவர முடியும்.
கசாயம்
கசயமாகவும் இந்த வன்னி மரப்பட்டையை நீரில் சுண்டக்காய்ச்சி பருகி வர வாத, பித்த, கப, சரும பிரச்சனைகளில் இருந்து வெளிவர முடியும். அது மட்டுமல்லாமல் சளி, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளையும் இந்த வன்னி மர பட்டை கசாயம் தீர்க்கும்.
வன்னித் தைலம்
விளக்கெண்ணை விட்டு இந்த வன்னி மரத்தின் பட்டையை பக்குவமாக காய்ச்சி வடிகட்டி எடுத்தால் வன்னித் தைலத்தை நாம் பெறமுடியும். இந்த தைலத்த்தில் சிறிதளவு ஐந்து நாட்கள் மட்டும் உட்கொண்டாலே போதும் எப்பேர்பட்ட மலச்சிக்கலும், வெள்ளை படுதலும் தீரும்.