வாய்விளங்கம் – நம் மூலிகை அறிவோம்

Embelia Ribes; Wind Berry; வாய்விளங்கம்

பலரும் பயன்படுத்தும் ஒரு மூலிகை வாய்விளங்கம். வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழிக்க கூடியதாகவும், பசியை தூண்டக் கூடியதாகவும், குடலில் இருக்கும் தீமை செய்யும் கிருமிகளை அழித்து வெளியேற்றக் கூடிய தன்மையும் கொண்ட ஒரு அற்புதமான மூலிகை இந்த வாய்விளங்கம். வர்னனை, வாயு விளங்கம், கேரளம், வாய்விளங்கம் என பல பெயர்களை ஒரு மூலிகைக்கு உண்டு.

வாய்விளங்கம் ஒரு கொடி வகை தாவரம். இந்தியாவின் வடக்கில் இருக்கும் இமய மலைத் தொடர்ச்சியிலும் அதனைத் தொடரும் ஆசிய நாடுகளின் மலைத்தொடர்களில் வளரக்கூடிய ஒரு வகை பெருங்கொடி தாவரம் இந்த வாய்விளங்கம். மழைக்காடுகளில் காணப்படும். இதனுடைய இலை, வேர்ப்பட்டை, விதை, காய் ஆகியன மருத்துவ பயன்பாட்டுக்கு உகந்தது. இதனுடைய இலைகள் மாற்றடுக்கில் நீள்வட்ட வடிவத்தில் இருக்கக்கூடியது. இந்த வாய்விளங்கத்தின் கனிகள் காய்கள் உருண்டையாக இருக்கும்

இதனுடைய காய் சிறு உருண்டை வடிவத்தில் இருக்கக்கூடியது. இந்த காய்கள் உலர்ந்த பின் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் பழம் நல்ல ஒரு சுவையாக இருக்கக் கூடியது. இதன் காயும், விதையும் மருத்துவத்திற்கு பயன்படக்கூடியது. இதனுடைய பூக்கள் வெள்ளை நிறத்திலும் மஞ்சள் நிறத்திலும் இருக்கக்கூடியது. இதன் காய்கள் பொதுவாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடியது.

வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழிப்பது மட்டுமில்லாமல் வயிற்று வலி, வாய்வு, விஷக்கடிகள், நூற்புழு, சரும நோய்கள், மூலம், மலச்சிக்கல் போன்ற பல தொந்தரவுகளுக்கு சிறந்த ஒரு மூலிகை இந்த வாய்விளங்கம். உடலை தேற்ற கூடியதாகவும் உடலுக்கு நல்ல வலுவை அளிக்கும் மூலிகையாகவும் உள்ளது.

வயிற்று புழு, பூச்சிகள் அழிந்து வெளியேற

வாய்விளங்கத்தை பொடியாக்கி அதன் பொடியை தேனில் குழைத்து ஒருநாள் மட்டும் இரண்டு, மூன்று வேளைகள் எடுத்துக்கொண்டு மறுநாள் விளக்கெண்ணை அல்லது பேதி மருந்து உண்பதால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து வெளியேறும்.

ஜீரண மண்டல தொந்தரவுகள்

மூலம், வயிற்றுவலி, மலச்சிக்கல், அஜீரணம், வயிற்றுப்பொருமல் அஜீரணத்தால் வரக்கூடிய பிரச்சனைகள் போன்றவற்றிற்கு இந்த வாய்விளங்கம் பொடியை சிறிது எடுத்து பாலில் கலந்து பருக விரைவில் நீங்கும். சிறுவர்களுக்கும் இதனை அளிக்கலாம். பசியை ஏற்படுத்தும்.

தொண்டை கரகரப்பு

வாய்விளங்கம் இலைச்சாறுடன் இஞ்சி சாறு கலந்து வாய் கொப்பளிக்க தொண்டையில் வரக்கூடிய புண், வாய்புண், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் தீரும்.

பற்களுக்கு சிறந்தது

வாய்விளங்கத்தை பொடித்து அந்த பொடியைக் கொண்டு பல் தேய்த்து வர பல்லில் இருக்கக்கூடிய சொத்தை, பல் வலி போன்ற பிரச்சனைகளும் நீங்கும். பற்களுக்கு உறுதியை அளிக்கும்.

சரும நோய்களுக்கு / விசக்கடிகள்

தோலில் ஏற்படும் பல விதமான பிரச்சனைகளுக்கும் ஒரு அற்புதமான மருந்து இந்த வாய்விளங்கம். உடலில் இருக்கும் நுண்கிருமிகளை வெளியேற்றக் கூடிய தன்மை கொண்ட இந்த வாய்விளங்கத்தை நீர் விட்டு நன்கு அரைத்து சருமத்தில் இருக்கக்கூடிய படை, சொறி போன்ற தோல் நோய்களுக்கும் விஷக்கடிகளுக்கும் பூசி வர விரைவில் நல்ல ஒரு குணம் தெரியும்.

தலைவலி

தலைவலி உள்ளவர்களுக்கு இந்த வாய்விளங்கத்தை நன்றாக அரைத்து வெண்ணெயில் குழைத்து தலையில் பற்றுப் போட விரைவாக தலைவலி தீரும்.

(3 votes)