வாகை மரம் – நம் மூலிகை அறிவோம்

Albizia lebbeck; வாகை

மன்னர்கள் வெற்றி வாகை சூடினார்கள் என்பதில் வாரும் வாகை என்பது வாகை மலரைக் குறிக்கும் சொல். சங்க காலத்தில் போர் வீரர்கள் வெற்றியின் அடையாளமாக இருந்த மரங்களின் ஒன்று வாகை மரம். தமிழகத்தில் சாலை ஓரங்கள், வேலி ஓரங்களில் மட்டுமில்லாமல் காடுகளிலும் மானாவாரியாக பல இடங்களிலும் வளரக்கூடிய மரம்.

கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாகவும், மண்ணிற்கு சிறந்த உரமாகவும் இருக்கக் கூடிய இந்த வாகை மரம் உயரமாக வளரக்கூடியது. இதனுடைய இலைகள் சிறகுபோல் கூட்டாக இருக்கும். இதனுடைய காய்கள் பெரிதாகவும் தட்டையாகவும் உலர்ந்த பின் வெண்மையாகவும் இருக்கும். சில கோயில்களில் தலமரமாகவும் உள்ளது.

வாகை மரத்தின் வேர், பிசின், பட்டை, பூ ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. இதன் பூக்கள் கட்டிகள், வீக்கத்தை குறைப்பதுடன் நஞ்சை முறிக்கும் தன்மையையும் கொண்டது. வாகை மரத்தின் பிசின் மற்றும் பட்டை சதை நரம்புகளை சுருங்கச் செய்யும் தன்மைக் கொண்டது. மேலும் இதன் பட்டை உடலில் ஏற்படும் வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் கொண்டது. இரத்த மூலத்திற்கும் சிறந்தது. பிசினை பக்குவமாக தயாரித்து எடுப்பதால் உடல் பொலிவு அதிகரிக்கும், உடலில் ஏற்படும் புண் மறையும்.

இரத்த மூலம்

வாகைப் பட்டையை நன்கு காயவைத்து அதனை பொடித்து சிலநாட்கள் அன்றாடம் காலை மாலை என இரண்டு முறை சிறிதளவு எடுத்துவர பிரமேகம், வெப்பக் கழிச்சல், இரத்த மூலம் மறையும். பித்த நோய்களும் மறையும்.

பல் நோய்களுக்கு

வாகைப் பட்டை பல் நோய்களுக்கு சிறந்த நிவாரணத்தை அளிக்கும். இதனை நெருப்பில் கரியாக்கி பின் இடித்து பொடியாக்கி பல் தேய்த்து வர பல் வலி, பல்லாட்டம், ஈறு வீக்கம் நீங்கும்.

பாம்பு கடி

பாம்பு கடி விஷத்தால் ஏற்படும் நஞ்சை முறிக்க வாகை மர சிறிதளவு வாகை பூவை அரைத்து வெந்நீரில் கலந்து கொடுக்க நச்சு இறங்கும். இதனை கடி வாயிலும் கட்டலாம்.

(2 votes)