கொன்றை வகையைச் சேர்ந்த மரம் இந்த வாத நாராயணன் மரம். இது மூலிகை மட்டுமல்லாமல் கீரை வகையை சேர்ந்ததுமாகும். புளிய மரத்தைப் போல ஒரே காம்பில் பல இலைகள் அமைந்திருக்கும். கொத்துக் கொத்தாக மொட்டு விட்டு சிவப்பு நிறமான அழகான பூக்கள் பூக்கும். இதன் காய் கொன்றை மரம் காய் போலவே இருக்கும்.
வாதம், வாய்வு சம்பந்தமான கோளாறுகளுக்கு
வாதநாராயண இலைகளை கொண்டு வந்து இலையை மட்டும் உருவி ஒரு சட்டியில் போட்டு ஒன்றரை டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி பாதியளவு கஷாயத்தை காலையிலும், பாதியளவு கஷாயத்தை மாலையிலும் பருகிவர வாதம் சம்பந்தமான கோளாறுகள், வாய்வு சம்பந்தமான கோளாறுகள் யாவும் தீரும். ஆனால் இரண்டு மூன்று முறை பேதியாகும். இந்த மலத்துடன் துர்நீர் யாவும் வெளியாகிவிடும்.
வாய்வு பிடிப்பு நீங்க
உடலில் எங்காவது வாய்வுப் பிடிப்பு ஏற்பட்டு வலி இருந்தால் வாதநாராயணன் இலையை ஆய்ந்து ஒரு சட்டியில் போட்டு வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி ஒரு துணியில் கொட்டி சூடாக இருக்கும் பொழுதே வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் வாய்வுப் பிடிப்பு குணமாகும்.
பாரிச வாய்வு
பாரிச வாய்வு காரணமாக எங்காவது பிடிப்பு ஏற்பட்டிருந்தால் அது குணமாக வாதநாராயணன் இலையை கொண்டு வந்து ஆய்ந்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைத்து அந்த இலையை அரைத்து ஒரு துணியில் வைத்து மூட்டை போல கட்டி வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் பாரிச வாய்வு சம்பந்தமான பிடிப்புகள் பூரணமாக குணமாகும். குறைந்தது 10 முறையாவது ஒத்தடம் கொடுக்க வேண்டும்.