உட்கட்டாசனம் / Chair Pose Yoga

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொடுக்கும் ஒரு சிறந்த ஆசனம் உட்கட்டாசனம். இதன் பெயரிலிருந்தே இந்த ஆசனம் எவ்வாறு இருக்கும் என புரிந்திருக்கும். ‘உட்கட்’ என்றால் நாற்காலி போல உடலை அமைத்துக் கொள்வது என்பதாகும். இதனை ஆங்கிலத்தில் ‘Chair Pose’ என்றும் அழைப்பதுண்டு.

உடலின் கீழ்ப்பகுதிக்கு பலத்தைக் கொடுக்க கூடிய ஒரு அற்புதமான ஆசனம் இது. முதுகு தண்டுவடம், கெண்டைக்கால், பாதங்கள், தசைகள், தொடை பகுதிக்கு நேரடியாக வலுவூட்டும் ஆசனம். மேலும் நெஞ்சு பகுதி, தோள்பட்டைக்கும் பலத்தை அளிக்கக்கூடிய ஒரு ஆசனம் இது. இருதயம், மார்பு, வயிற்று இடை போன்ற உடல் உறுப்புகளை சீராக்கக் கூடிய தன்மை கொண்டது இந்த ஆசனம்.

உட்கட்டாசனம் செய்முறை

தரை விரிப்பில் நேராக நின்று இரு பாதங்களையும் ஒரு அடி இடைவெளி விட்டு பாதங்களை இணையாத வண்ணம் பக்கவாட்டில் முதலில் வைத்துக் கொள்ளவேண்டும். முழங்கால், இடுப்பு பகுதியை மடக்கி தோள்பட்டைக்கு இணையாகவும் உள்ளங்கை கீழ் நோக்கி இருக்குமாறும் நேராக நீட்டி நாற்காலி போல உடலை அமைக்க வேண்டும். ஒரே நேரத்தில் பாதம், கணுக்கால், முழங்கால், இடுப்பு, தோள் பட்டை என அனைத்து பாகங்களும் மடக்கி நீட்டுவதால் எல்லா தசைகளும் சீரான ஒரு ரத்த ஓட்டத்தைப் பெற உதவும்.

இந்த உட்கட்டாசனத்தை நாளொன்றிற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் போதும். ஒருமுறைக்கு 15 வினாடிகள் என ஒவ்வொரு முறையும் செய்வது மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்த பலனை அளிக்கக்கூடியதாக இருக்கும். தாளாசனத்திற்கு மாற்று ஆசனம் இந்த உட்கட்டாசனம் என்று கூட இதனை நாம் சொல்லலாம்.

உடல் பருமனை குறைக்கும்

உடல் கொழுப்பை குறைக்கக் கூடிய ஆசனம் இந்த உட்கட்டாசனம். உடல் பருமனாக இருப்பவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்வதால் விரைவாக தேவையில்லாத கொழுப்புகள் நீங்கும். தொடைப் பகுதியில் இருக்கும் அதிக தசையும் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்வதால் நீங்கும். நல்ல ஒரு உடல் கட்டமைப்பையும் அளிக்கும்.

ஆத்திரட்டிஸ், மூட்டுவலி

ஆத்திரட்டிஸ், மூட்டுவலி போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த ஒரு ஆசனம் இது. தொடர்ந்து இந்த ஆசனத்தைச் செய்யும் பொழுது மூட்டு வலியிலிருந்து வெளிவர உதவும். முதுகுத்தண்டில் வரக்கூடிய பிரச்சனைகளையும் இந்த ஆசனம் சீராக்கும். மேலும் உடலின் ரத்த ஓட்டத்தையும் சீராக்குவதால் பல விதமான பிரச்சனைகளுக்கும் உடல் வலிகளுக்கும் சிறந்த ஒரு ஆசனமாக இது உள்ளது. வெரிகோஸ் வெயின் முடிச்சுகளையும் போக்கும்.

இடுப்பு சதை, தொப்பை நீங்கும்

இடுப்பில் இருக்கக்கூடிய தேவையில்லாத சதையையும், வயிற்றுப்பகுதியில் இருக்கும் சதையையும் குறைக்க உதவும் ஆசனம் இந்த உட்கட்டாசனம். இடுப்பு சதை, வயிற்று சதை மட்டுமில்லாமல் தொடை சதை, கை சதை மற்றும் உடலில் இருக்கும் தேவையில்லாத சதைகளை நீக்கி உடல் எடையை குறைக்க உதவும் ஒரு அற்புதமான ஆசனம்.

மன வலிமையை அதிகரிக்கும்

பெரியவர்கள் சிம்மாசனத்தில் அமர்வது போல் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். உடல் மற்றும் மன வலிமையை அளிக்கும். மனோதிடத்தை உயர உயர்த்த உதவும் ஆசனமாகவும் இது இருக்கும்.

(7 votes)