சிறுநீர் நிறம் சொல்லும் அறிகுறிகள்

உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளில் ஒன்று சிறுநீர். பல பொருட்களைக் கொண்ட சிறுநீரைக் கொண்டு சோதனைக் கூடத்தில் பரிசோதித்து, நமது உடல் நிலையை மருத்துவர்கள் அறிகிறார்கள். சர்க்கரை இருந்தால், நீரிழிவு நோய் என்றும், புரதம் இருந்தால் சிறுநீரகக் கோளாறு என்றும், பித்தம் இருப்பின் கல்லீரல் வேலை செய்யவில்லை என்றும் சீழ் இருந்தால், சிறுநீர்ப்பாதை கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றதென்றும் ஓரளவு புரிந்து கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு ஒரு சராசரி மனிதர் ஒரு குறிப்பிட்ட சிறுநீர் கழிய வேண்டும், அதிலும் ஆரோக்கியமான மனிதரின் சிறுநீர் இந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்று ஆங்கில மருத்துவமும் நமது வீட்டிலிருக்கும் பெரியவர்களும் கூறக் கேட்டிருப்போம்.

சிறுநீரின் அளவு, நிறம் ஆகியவை அன்றாடம் நாம் நீர் அருந்தல், மனநிலை, உணவு, உழைப்பு, உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள் மற்றும் தட்பவெப்ப போன்ற நிலைக்கேற்ப சற்று முன் பின் இருக்கலாம். ஆனால், தொடர்ந்து இதில் மிகுந்த மாறுபாடு இருப்பின் அதற்கான மருத்துவத்தை பார்ப்பது நல்லது. இதனை அறிந்துக் கொள்ள சிறுநீரின் நிறம் பெரிதும் உதவும்.

வைக்கோல் நிறம்

வைக்கோல் நிறத்தில் சிறுநீர் இருந்தால் நல்ல உடல் நிலை உள்ளது என தெரிந்துக் கொள்ளலாம்.

வெளிறிய நிறம்

சிறுநீர் வெளிறி இருந்தால் அளவுக்கு மிகுந்த நீரை பருகுகிறோம் என அறியலாம்.

தவிட்டு நிறம் அல்லது சிவப்பு நிறம்

தவிட்டு நிறம் அல்லது சிவப்பு நிறத்தில் சிறுநீர் இருந்தால் சிறுநீரில் இரத்தம் கலந்துள்ளது என தெரிந்துக் கொள்ளலாம். சிறுநீரக கற்கள் அல்லது கட்டிகளையும் குறிக்கும். தற்காலிகமாக நிறம் மாறி யிருந்தால் அது உணவுகளிளாலும் ஏற்பட்டிருக்கும். பீட்ரூட் அதிகம் உணவில் எடுத்துக்கொண்டாலும் நிறம் அன்று மாறியிருக்கும்.

நிறமற்று அல்லது மிக மங்கலான சிறுநீர்

நிறமற்று அல்லது மிக மங்கலாக சிறுநீரின் நிறமிருக்க நீரிழிவு நோய் அறிகுறிகள் உள்ளது என அறியலாம்.

புகை நிறம்

சிறுநீர் புகை நிறத்தில் இருந்தால் சிறு அளவு இரத்தம் என தெரிந்துக் கொள்ளலாம்.

ஆரஞ்சு நிறம்

ஆரஞ்சு நிறத்தில் சிறுநீர் இருந்தால் மஞ்சட்காமாலை/ காய்ச்சல்/ கடும் உழைப்பு ஏற்பட்டுள்ளது என அறியலாம். நீர் பற்றாக்குறையாலும் சிறுநீர் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

ஆழ்ந்த மஞ்சள் நிறம்

சிறுநீரில் ஆழ்ந்த மஞ்சள் நிறத்திலிருக்க கல்லீரல் கோளாறு என அறியலாம். வைட்டமின் சத்துக்கள் உடலில் சேராமல் வெளியேறுகிறது என புரிந்துக் கொள்ளலாம்.

பால் நிறம்

பால் நிற சிறுநீர் கொழுப்பு, சீழ், குடற்பால் ஆகியவற்றை குறிக்கும்.

நீல நிற சிறுநீர்

சிறுநீரின் நிறம் நீலம் அடைந்திருந்தால் டைபாய்டு/மெதலீன் நஞ்சு உள்ளது என காட்டுகிறது.

பச்சை நிறம்

சிறுநீர் பச்சை நிறத்திலிருக்க அதிக பித்தம்/ கார்பாலிக் அமிலம் அல்லது தார் உள்ளது என அறியலாம். உணவிலிருக்கும் நச்சுக்களையும் காட்டுகிறது.

கருப்பு நிறம்

கருப்பு நிற சிறுநீர் கல்லீரல் கோளாறு / அதிக அளவு தார் பொருட்கள் நுழைந்துள்ளதை குறிக்கிறது.

இந்த அடையாளங்கள் நம் உடல் கூறும் அறிகுறிகளே. இவை தற்காலிகமானதாகவும் பல நேரங்களில் நமது வாழ்வியல் மாற்றங்களால் ஏற்படுவதுண்டு. அதனால் இதனைக் கண்டு அஞ்சாமல், எச்சரிக்கையாகக்கருதி மருத்துவம் பார்ப்பதும் வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்வதையும் மேற்கொள்ளலாம்.

(10 votes)