சுவையான சத்தான மாலை நேர இடைப் பலகாரம் (மதிய உணவிற்கும், இரவு டின்னருக்கும் இடையில் உண்ணும் செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரம்). செட்டிநாடு உணவுகளில் எளிமையாக வீட்டில் தயாரிக்கப்படும் ஒரு அற்புத சிற்றுண்டி இது. இதன் சுவையே தனி சுவை. பாரம்பரிய அரிசி ஒட்டுக் கிச்சிலி ஊற வைத்து பின் வாணலியில் தாளித்து, வேக விட்டு பின் ஆவியில் வேக வைப்பதால் சத்துக்கள் அதிக அளவில் நிறைந்திருக்கும்.

தேவையான பொருட்கள்
- 1 கப் பச்சரிசி அரிசி (நான் ஒட்டுக் கிச்சிலி பச்சரிசியை இதற்கு பயன்படுத்துகிறேன். எந்த பச்சரிசியை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.)
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் சீரகம்
- 4 வர மிளகாய்
- சிறிது கறிவேப்பிலை
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- 2 கப் தண்ணீர்
- ¼ கப் தேங்காய் துருவல்
- தேவையான அளவு உப்பு
- 4 ஸ்பூன் நல்லெண்ணெய்
செய்முறை
- பாரம்பரிய ஒட்டுக்கிச்சிலி பச்சரிசியை அரிசியை இரண்டு மணி நேரம் நன்கு அலசி ஊறவைக்கவேண்டும்.
- இரண்டு மணி நேரத்திற்குப் பின் அரிசியை சிறிது நீர்விட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.
- பின் ஒரு அடி கனமான வாணலியில் நல்லெண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- இவை நன்கு பொரிந்தவுடன் இரண்டு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- தண்ணீர் நன்கு கொதிக்க தொடங்கியதும் சிறு தீயில் அடுப்பை வைத்துவிட்டு கொதிக்கும் நீரில் அரைத்த அரிசியைச் கட்டிப்படாமல் கிளறிக்கொண்டே சிறிது சிறிதாக சேர்க்கவும்.
- அரிசி நன்கு வெந்து கெட்டியாகும் வரை குறைந்த தீயிலேயே கிளறவும்.
- அரிசி நன்கு வெந்து தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அணைத்து தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறி சிறிது ஆற வைக்க வேண்டும்.
- சிறிது ஆறியவுடன் கையில் உருண்டையாக அல்லது கையில் பிடித்து இட்லி தட்டுகளில் 10 முதல் 15 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு கொழுக்கட்டை பாரம்பரிய ஒட்டுக்கிச்சிலி அரிசியில் தயார்.
- தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்.