நொறுங்கத் திண்றால் நூறு வயது என்கிறது மெய் ஞானம். வேதியல் விஞ்ஞானமோ வேதாளம் ஏறிய அளவிற்கு வளர்ந்துள்ளது. ஆனால் துக்குநூண்டு தொந்தரவான குடல் புண் (ulcer) இன்று பூதாகரம் எடுத்து மிகப்பெரிய சமுதாயத்தையே ஆட்டிப்படைக்கிறது .
இரசாயனம் கலந்த உணவு, பூச்சிகொல்லிகள் கலந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகள், பாஸ்ட் புட் உணவுகள், காபி, டீ, காரம், புளிப்பு, வறுத்த பதார்த்தம், ஊறுகாய், உணர்வு மாற்றம், கவலையான மனநிலை என இவற்றிற்கு பல காரணங்கள் இருந்தாலும், இவை மட்டும் தானா இதற்கு காரணம்?
வயிறு காலியாக இருக்க இருக்க இந்த தொந்தரவு தொடர்ந்து கொண்டே இருக்கும் என்ற தவறான பயமுறுத்தலும் அறிவுரைகளும் கூட தான் இதற்கு மிக முக்கிய காரணம்.
ஆம், காலியாக இருக்க இருக்க இந்த தொந்தரவு அதிகரிக்கும் என்று கூறி அதிகப்படியான உணவை செரிமானமின்றி அடுத்தடுத்து உட்கொள்வது தான் இந்த தொந்தரவிற்கே காரணம். வயிற்றை காலியாகப் போடக்கூடாது என்பதற்காக லபக் லபக் என்று வாய்க்கு வேலை கொடுக்காமல் உள்ளே தள்ளுவது தான் இந்த குடல் புண்ணுக்கு (Ulcer) முக்கிய காரணம்.
நம் உடலில் செரிமானம் என்பது முதலில் வாயில் தொடங்கி பெருங்குடல் வரை நடைபெறுகிறது. எதை எப்படிப் போட்டாலும் வாயில் தான் கிரைண்டரும் (பற்கள்) ஜீரணிக்க தேவையான முதல் ஜீரண நீரும் (எச்சில்) உள்ளது. இவை இரண்டையும் மறந்து உள்ளே உணவை தள்ளினால், உள்ளே சென்ற உணவில் மற்ற அமிலங்களும், ஜீரண நீரும் சேர்ந்து சீரான ஜீரணத்தை செய்யாது வயிற்றை தான் ஓட்டை போடும். குறிப்பாக எச்சில் கலக்காத அமிலங்களும் அதிகரித்து வயிற்றை புண்ணாக்கும்.
நம் வீட்டுப் பெண்களின் பிரமாதமான சமையலுக்கு காரணம் எந்த அளவு, எந்த பொருட்களை எவ்வாறு அரைப்பது, எப்பொழுது எதனுடன் எதை சேர்ப்பது என்ற கலையை துல்லியமாக தெரிந்து வைத்திருப்பது மட்டுமில்லாமல் அதனை பயன்படுத்துவதுமே.
அதாவது, எந்த குழம்புக்கு எவ்வளவு கொரகொரப்பாக அல்லது எவ்வளவு நைசாக மசாலா அரைப்பது, அதை எண்ணெயில் வெங்காயம் தக்காளிக்கு முன்னா அல்லது பின்னா சேர்த்து வதக்குவது என்பதே சமையல் கலை. அதனை சரியான முறையில் தயாரித்தால் வேறு பக்குவமே தேவையில்லை சுவையான உணவை ருசிக்க. இதற்கு நம் பாட்டியும் அம்மாவும் பக்குவம் என்று பெயர் வைத்தனர்.
எதனோடு, எது, எவ்வளவு சேர்ந்தால் சுவையான உணவு கிடைக்குமோ அதைப்போல நல்ல உணவு சீரான முறையில் வாயில் கூழாக்கப்பட்டு வாயில் உள்ள முதல் ஜீரண நீரான எச்சிலுடன் கலந்து வயிற்றில் செல்ல அங்கு அமிலங்களும் மற்ற சுரப்பு நீர்களும் சேர தங்கு தடையின்றி உணவு ஜீரணித்து உடலுக்கு தேவையான சக்தியையும் ஆக்கப்பூர்வமான ஆற்றலையும் கொடுக்கும். அமிலங்களால் வயிற்றுக்கு எந்த பாதிப்பும் வராது. இதைத்தான் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர்.
உணவை எவ்வாறு உட்கொள்வது என்பது மட்டுமல்லாது அப்பொழுது உட்கொள்வது நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும் என்றும் நமக்கு மெய்ஞானமும் விஞ்ஞானமும் கற்றுக்கொடுக்கிறது.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி யுணின்”
என்கிறது தமிழ் மறை.
இதனை எளிதாக அன்றாடம் நம் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சியில் புரிந்து கொள்ளலாம். காலையில் பல வீடுகளில் எழுந்தவுடன் பால் காய்ச்சும் பழக்கம் உண்டு. முதலில் தேவையான பாலை காய்ச்சுவோம். சிறிது நேரம் அதாவது 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் பால் காய்ச்ச வேண்டுமென்றால் 30 நிமிடம் முன் காய்ச்சிய சிறிது பால் இருக்கும் பாத்திரத்திலோ அல்லது அதே பாத்திரத்திலோ பால் காய்ச்சுவோமா? என்றால் இல்லை. புதிதாக பத்திரம் எடுத்தே அதில் பாலை காய்ச்சுவோம். காரணம் இரண்டு பாலையும் (30 நிமிடம் புதிது தான் என்றாலும்) ஒன்றாக சேர்த்தால் அல்லது ஒரே பாத்திரமாக இருந்தால் பால் கெட்டு திரிந்து போகும்.
சாதாரண பாலைக் காய்ச்சவே, அதுவும் 30 நிமிட இடைவேளையில் என்பதிலேயே இவ்வளவு வேதியல் மாற்றமும் விஞ்ஞானமும் என்றால் உடலில் எவ்வளவு உள்ளது. நன்கு கடிக்கப் படாத எச்சில் கலக்கப்படாத உண்ட உணவு வயிற்றில் இருக்க மீண்டும் 1-2 மணி நேரத்தில் எதாவது நொறுக்கு தீனியோ அல்லது சிறு பெரு உணவோ உட்கொண்டால் வயிற்றில் உள்ள உணவு எவ்வாறு ஜீரணிக்கும் அல்லது ஜீரண நீர் / அமிலங்கள் எவ்வாறு உணவுடன் சேரும்.
மசாலாவை நன்கு அரைத்து சேர்த்தால் சுவை கூடும் என்று தெரிந்த நமக்கு நன்கு பற்களால் கடித்து உடல் ஜீரண நீரான எச்சிலுடன் கலந்த உணவை வயிற்றினுள் அனுப்ப வேண்டும் என்று ஏன் தெரியவில்லை?
வாயிலிருந்து நன்கு கூழக்கப்பட்ட உணவு எச்சிலுடன் (புண்ணை ஆற்றும் ஆற்றல் பெற்றது) கலந்திருந்தால் மட்டுமே வயிற்றிலுள்ள அமிலங்களும், ஜீரண சுரப்பு நீர்களும் சீராக சுரந்து வயிற்றிற்கு வந்த உணவுடன் கலக்கும்.
இன்றைய உணவுகள் பல நார்ச்சத்து இல்லாது மாவுச்சத்து மட்டுமே கொண்ட உணவுகள். அவ்வாறு நார்ச்சத்து இல்லாது அதிக மாவுச்சத்து கொண்டு நன்கு கலக்கப்படாத உணவுகள் வயிற்றில் சென்றாலும் அவை அமிலங்களுடன் கலந்து மற்ற ஜீரண நீருக்காக காத்திருக்கும், ஜீரணமும் தடைப்படும்.
வெளியில் சிலமணி நேரம் உணவு இருந்தால் எவ்வாறு கெட்டு புளித்து போகுமோ அதைப்போலவே வயிற்றிலும் அவை புளித்து கெட ஆரம்பிக்கும். வயிறு உப்புசம், கெட்ட ஏப்பம், புளித்த ஏப்பம் போன்றவற்றுடன் நன்கு கடிக்கப்படாத அமிலங்களுடன் சேர்ந்த உணவுகள் வயிற்றின் சுவர்களை அரித்து புண்ணாகாமல் என்னசெய்யும்? இதனால் பசி உணர்வும், பசி இன்மையும் பொய்யாக தோன்றுகிறது.
விஞ்ஞானமும் நவீன கலாச்சாரமும் வளர்ந்துள்ள இன்று உடலின் வேதியியல் அமைப்பு நமக்கு தெரியவில்லையே? பசிக்காமல் உணவில் அவசரத்தைக் காட்ட வயிற்றில் கிரண்டரும் எச்சிலும் இல்லை என்பதை மறந்தால் ஏன் வராது குடல் புண். குடல் புண் மட்டும் அல்ல இன்று நம் உணவில் இரசாயனங்களும், மரபிற்கு புரியாத உணவுகளும் சேர சேர வயிற்று புற்றுநோய் அழையா விருந்தாளியாக வந்துவிடும்.
பசித்து நன்கு கடித்து எல்லா சுரப்பிகளும் சீராக சுரந்துள்ள நிலையில் நம் மரபணுவிற்கும் நம் உடலுக்கும் ஏற்ற நார்ச்சத்துள்ள சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி, அடுப்பில் சூடேற்றாத தேங்காய் போன்ற கொட்டைபருப்பு உணவுகள், பழங்கள், பச்சை காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள் போன்ற உணவுகளை சேர்க்க குடல் புண் என்ற தொந்தரவு இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.
நன்கு மென்று எச்சிலுடன் உண்ண பல தொந்தரவுகள் நீங்கும். குறிப்பாக வயிறு குடல் சம்பந்தமான தொந்தரவுகள் நீங்கும்.