வீட்டுத்தோட்டம் என்பது நமக்கு தேவையான விளைபொருட்களை நமது வீட்டிலேயே விளையவைத்து பெறுவதாகும். காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், பூக்கள், பழங்கள் என பலவற்றையும் உள்ளடக்கியது தான் வீட்டுத்தோட்டம்.
இருபது வருடங்களுக்கு முன் மரம் செடிகளுக்கு என்று வீட்டைச்சுற்றி மண் தரைகளை விட்டு வீட்டினைக் கட்டி அவற்றில் வசித்தனர். சுற்றி உள்ள இடம் மட்டுமல்ல மாடிகளும் தோட்டமமைக்க உதவின. சின்னச் சின்ன செடிகள், பூக்கள் என அனைத்தும் மாடிகளை ரம்மியமான இடமாக உருவாக்கிக்கொடுத்தன. அதிலும் வீட்டு முற்றத்தில் சந்தன முல்லை, நித்திமல்லி போன்றவை வளர்ந்து அதன் கொடிகள் மேல்மாடிகளிலும் பரவி மாலைப்பொழுதே பூக்கள் பூத்துகுலுங்க நறுமணத்துடன் இதமான ஒரு இரவுப் பொழுதை அளித்தது. இதனை அனுபவிக்க உண்மையில் கொடுத்துவைத்திருக்கத்தான் வேண்டும்.
இவ்வாறு மாலையும் இரவும் புதுத்தெம்பை அளிக்க மனஅழுத்தமும், இரத்தக்கொதிப்பும் அனுபவிப்பவரைக் கண்டாலே நடுநடுங்கி ஓடிவிடும். வேறு ஒரு வைத்தியமும் தேவையில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.
இன்றோ நிலைமை தலைகீழ்.. வசிப்பதற்கே இடமில்லை. அதிலும் நகரங்களில் அடுக்குமாடிக்குடியிருப்புகள். நாகரீகம் என்ற பெயரில் அடுப்படி கூட இல்லாத வீடுகளும் ஆரோக்கியமான உணவில்லாமல் ஆங்காங்கே மருத்துவமனைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்க ஆசைபட்டால்கூட தோட்டமமைக்க கூட இடமில்லை என்ற புலம்பலும் அதிகரிக்கிறது.
இனி இவ்வாறான புலம்பலும் கவலைகளும் தேவையில்லை. இருக்கும் இடத்திலேயே இடத்திற்கு தகுந்தவாறு நமக்கான சிறிய முதல் பெரிய அளவிலான தோட்டத்தினை உருவாக்குவோம். நம்மை சுற்றியுள்ள பலருக்கு முன்னுதாரணமாகவும், தூண்டுகோலாகவும் திகழலாம்.
வீட்டை சுற்றியுள்ள இடத்திலும், மாடிகளிலும் மட்டுமின்றி அடுக்குமாடி வீடுகளில் இருக்கும் வராண்டா, பால்கனி மற்றும் படிக்கட்டுகள், சன்னல்கள் என எல்லா இடங்களிலும் அந்தந்த இடத்திற்கு ஏற்றவாறு செடிகளை வளர்க்கலாம்.
மாடித்தோட்டம், மேட்டுப்பாத்தி, செங்குத்தான தோட்டம், வட்டப்பாத்தி, தொட்டித்தோட்டம், சதுர அடி தோட்டம், பெர்மாகல்ச்சர், தரைத் தோட்டம் இப்படி ஏகப்பட்ட தோட்டமுறைகள் உள்ளது.
மாடித்தோட்டம், மேட்டுப்பாத்தி, செங்குத்தான தோட்டம், வட்டப்பாத்தி, தொட்டித்தோட்டம், சதுர அடி தோட்டம், பெர்மாகல்ச்சர், தரைத் தோட்டம் இப்படி ஏகப்பட்ட தோட்டமுறைகள் உள்ளது.
அதாவது தோட்ட முறைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
- முதலாவது நிலத்தில் தோட்டமமைப்பது.
- அடுத்தது மாடிகளில் தோட்டமமைப்பது மற்றும்
- வீட்டில் இருக்கும் படிகள், சன்னல் போன்றவற்றில் தோட்டமமைப்பது.
தொட்டிகள்
தொட்டிகளை வைத்து இந்த மூன்று இடங்களிலும் சுலபமாக தோட்டம் அமைத்து விடலாம். தொட்டிகள் என்பது மண் தொட்டிகள் மட்டுமல்ல சிமெண்ட் தொட்டிகள் அல்லது பிளாஸ்டிக் தொட்டிகள் போன்றவை.
நிலத்தில் தோட்டமமைப்பது
நிலத்தில் தோட்டமமைப்பதற்கு நிலத்திலிருக்கும் மண்ணினை பக்குவப்படுத்துவதும் அதன் பின் நேரடியாகவோ அல்லது மேட்டுப் பாத்தி, வட்டப்பாத்தி, சதுர அடி தோட்டம், பெர்மாகல்ச்சர், தரைத் தோட்டம் போன்றவற்றையெல்லாம் எளிதாக அமைக்கலாம்.
மாடித் தோட்டம்
மாடிகளில் தோட்டமைமைப்பதற்கு மண் தொட்டிகள், பாலித்தீன் பைகள், சிமெண்ட் தொட்டி, பிளாஸ்டிக் டப்பாக்கள், பிளாஸ்டிக் டிரம்கள், மர டப்பாக்கள், மரப்பெட்டிகள், உடைந்த வாளிகள், டின், தேவையில்லாத டிரம்கள், அரிசி மூட்டை பைகள், உடைந்த தண்ணீர் கான்கள், தண்ணீர் பாட்டில்கள் என எதைவேண்டுமானாலும் பயன்படுத்தி தோட்டமமைக்கலாம்.
வீட்டிலிருக்கும் சாதாரண கொட்டாங்குச்சி, பிளாஸ்டிக் கப் தொடங்கி தேவையில்லாத தண்ணீர் கேன், உடைந்த பேசின், பழைய டயர் என அனைத்தையும் செடிகளை வளர்க்க பயன்படுத்தலாம். இடத்திற்கு தகுந்தாற்போலும், செடிகளின் வேர்களுக்கு தகுந்த மாதிரியும் தொட்டிகளின் அகலமும் ஆழமும் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு கீரைகளை வளர்க்க வேண்டுமானால் ஆழம் குறைவாகவே இருக்கலாம். அதே நேரத்தில் முள்ளங்கி போன்ற வேர்களில் வளரக்கூடியவைகளுக்கு ஆழம் அதிகமாகவும் அகலம் குறைவாகவும் இருக்கும் தொட்டியை தேர்வு செய்யலாம்.
இவை இரண்டும் இல்லாது மற்ற இடங்களில் செடிகளையும், கொடிகளையும் வளர்த்து தோட்டமமைப்பதற்கு இடத்திற்கு தகுந்தாற்போலும், சூரியஒளிக்கு தகுந்தாற்போலும் சிறிய அல்லது சதுர வடிவ பிளாஸ்டிக், பைபர் தொட்டிகளை தேர்வு செய்து எளிதில் வளர்க்கலாம்.
அடுக்கு மாடிகளில் இருக்கும் வராண்டா, பால்கனி, படிகள் போன்றவற்றில் செடிகளை வளர்க்க தொட்டிகளில் இருந்து வெளிவரும் நீரினை முறையாக வெளியேற்றுவதோ அல்லது சொட்டுநீர் மூலமாகவோ முறையாக அமைப்பது அவசியம். பால்கனிக்கு வெளியே இரும்பு கம்பிகள் அமைத்து அதில் செடிகளை வளர்க்கும் பொழுதும் இதனை முறையாக கவனிக்க வேண்டும்.
மாடிகளில் தொட்டிகள் மட்டுமல்லாது பிளாஸ்டிக் விரிப்புகளை விரித்து மண்ணினை பரப்பியும் செடிகளை வளர்க்கலாம். தொட்டிகளிலோ அல்லது மண்ணை பரப்பியோ மாடிகளில் செடிகளை வளர்த்தால் அதற்கு மாடிதோட்டம் என்று பெயர். அதுவே வீட்டினை சுற்றியோ, மாடியிலோ அல்லது வீட்டிற்கு பின்னாலோ செடிகளை வளர்த்தால் அதனை வீட்டுத்தோட்டம் என்பார்கள். காய்கறி, கீரை போன்ற சமைக்கத்தேவையான சமையலறை காய்களை பயிரிட்டால் அதற்கு கிச்சன் கார்டன், காய்கறித்தோட்டம் என்பார்கள். அதுவே நகரங்களில் உள்ள வீடுகளில் காய்கறித் தோட்டமமைத்தால் அதனை அர்பன் கார்டன் என்பார்கள். ஒரு குடும்பத்திற்கு தேவையான காய்களை நமது வீட்டிலேயே தோட்டமமைத்து அறுவடை செய்து பயன்படுத்தினால் அதற்கு குடும்பத்தோட்டம் அல்லது ஃபாமிலி கார்டன் அதுவே குறிப்பிட்ட அடிக்கு அடி கட்டம்கட்டி மண்ணை நிரப்பி காய்கறிகளை விளையவைத்தால் அதற்கு சதுர அடி தோட்டம் என்பார்கள். இப்படி காய்களை நமது வீட்டிலேயே தோட்டமமைத்து வளர்க்க அதற்கு ஏகப்பட்ட பெயர்கள் உண்டு.
இவற்றையெல்லாம் வைத்து குழப்பிக்கொள்ளாமல் மண்ணை வளமானதாக செய்து நமது விதைகளை ஊன்றி நமக்கு தேவையான காய்களைப் பெறுவோம்.
மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி
மேட்டுப்பாத்தி, வட்டப்பாத்தி என்பதெல்லாம் மண்ணை மேடாக்கும் முறை. அதாவது பக்கவாட்டில் இருக்கும் மண்ணை ஒன்றாக சேர்த்து மேடாக்குவது. அதனை நேர்கோட்டில் அமைப்பது மேட்டுப்பாத்தி அதுவே வட்டமாக சாவித்துளைப்போல் வட்டவட்டமாக அமைப்பது வட்டப்பாத்தி (key hole garden). இந்த முறையால் மழைநீரை எளிதாக தக்கவைத்து அவற்றை நிலத்திற்குள் செல்ல வழிவகை செய்யலாம்.
செங்குத்தான தோட்டம்
இன்று மிகப்பிரபலமாக இருக்கும் ஒருவகை தோட்டமுறை செங்குத்தான தோட்டம். இருக்கவே இடமில்லை என்ற நிலையில் எங்கு தோட்டமமைப்பது என்பவர்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் தோட்ட முறைதான் இந்த செங்குத்தான தோட்டமுறை (Vertical garden).
கோபுரம் போன்று அடுக்கடுக்காக செடிகளை வளர்ப்பது. ஒன்று சுவறுகளில் இரும்புக் கம்பி அல்லது மரக்கட்டைகளை வைத்து அடுக்கடுக்காக பிரித்து அவற்றில் காய்கறி, கீரை செடிகளை வளர்க்கலாம். மற்றொன்று ஒரு பெரிய பிளாஸ்டிக் ட்ரம்மில் அங்கங்கே துளையிட்டு செடிகளை வளர்க்கலாம். இதற்கு பெரிய இடம் தேவையில்லை நான்கடிக்கு நான்கடியில் ஒரு குடும்பத்திற்கு காய்களையே வளர்க்கலாம்.
இனி வரும் காலத்திற்கு ஏற்றது இந்த செங்குத்தான தோட்டமுறை, அதிலும் நமது வீட்டு மாடிகளில் இயற்கை முறையில் இவற்றை வளர்க்க சிறிய இடத்தில் ஒரு குடும்பத்திற்கு மட்டுமல்ல பல குடும்பத்திற்கே தேவையான காய்களையும், கீரைகளையும் விளையவைக்கலாம்.
பெர்மாகல்ச்சர் – நிரந்தர வேளாண்மை முறை
நவீன காலத்திற்கும், நிரந்தரமானதாகவும் இருக்கும் ஒருவகை தோட்ட முறை தான் பெர்மாகல்ச்சர் எனப்படும் நிரந்தர வேளாண்மை முறை. அதாவது நிரந்தரமான கலாச்சார முறை. வேளாண்மை என்பது ஒரு தொழில் அல்ல நமது வாழ்வியலுக்கு அவசியமான ஒரு கலாச்சார முறை.