மூன்று கோணங்களில் நமது உடலை நிறுத்தும் ஆசனம் திரிகோணாசனம். ‘திரி’ என்பது மூன்று எனப்படும், ‘கோண’ என்பதும் கோணங்களையும், ஆசனம் என்பது உடல் இருக்கும் நிலையையும் குறிக்கும். இவ்வாறு உடல் மூன்று வடிவ கோணத்தில் இருப்பதால் இந்த ஆசனத்திற்கு திரிகோணாசனம் என பெயர்.
உடலில் ஏற்படும் வாத, பித்த, கபத்தை சமநிலைப் படுத்த உதவும் சிறந்த ஆசனம். உச்சந்தலை முதல் உள்ளங்காலில் இருக்கும் தசைகள், நரம்புகள் இந்த ஆசனத்தை செய்வதால் பலப்படும். முடுகு தண்டு, கால், கழுத்து மற்றும் முதுகு வலிக்கு சிறந்த ஆசனம். கல்லீரல், கணையம், சிறுநீரகம், குடல் போன்ற உள்ளுறுப்புகள் பலப்படும். இந்த உறுப்புகளுக்கு சீரான இரத்த ஓட்டம் கிடைக்கும்.
திரிகோணாசனம் செய்முறை
தரைவிரிப்பில் முதலில் நேராக நின்று கால்களை இரண்டு மூன்று ஆடி அகளத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தோளுக்கு நேராக உயர்த்தவும். பின் வலது பக்க இடுப்பை பக்கவாட்டில் வளைத்து வலது கைகளால் வலது பாதத்தின் அருகில் தரையைத் தொடவேண்டும். இடது பக்க கை வளையாமல் மேல் நோக்கி இருக்க வேண்டும். தலை மேல் தூக்கியுள்ள இடது கையைப் பார்த்தவாறு இருக்க வேண்டும். பத்து வினாடிகள் நிதானமாக மூச்சை உள்வாங்கி இவ்வாறு நின்று பின் நிதானமாக நேராக நிற்கவேண்டும். அதைத் தொடர்ந்து இடது பக்கமும் செய்யவேண்டும். இவ்வாறு மெதுவாக ஆரம்பத்தில் மூன்று முறை இரண்டு பக்கமும் செய்து பழக்கப்படுத்திய பின் பத்து நிமிடங்களுக்கு இவ்வாறு செய்யவேண்டும்.
மலச்சிக்கல் தீரும்
வயிற்றுப் பகுதியில் இருக்கும் உறுப்புகளுக்கு சீரான இரத்த ஓட்டம் கிடைப்பதால் செரிமான கோளாறுகள் அகலும், மலச்சிக்கல் தீரும்.
உடல் பருமன் குறையும்
உடலில் இருக்கும் அதிகப்படியான சதை இந்த ஆசனத்தை செய்வதால் விரைவாக கரைந்துவிடும். தொடை, இடுப்பு, கைகளில் இருக்கும் சதைகள் கரைந்து உடல் வலிமைப் பெரும்.
மாதவிடாய் தொந்தரவுகளுக்கு
கருப்பை கட்டிகள், மாதவிடாய் கோளாறுகளுக்கு மிக சிறந்த ஆசனம்.
முதுகுவலி மறையும்
அதிகநேரம் அமர்ந்த அல்லது இருசக்கர வாகன பயணம் மேற்கொள்பவர்களுக்கு வரும் இடுப்பு வலி, முதுகு வலிக்கு சிறந்த ஆசனம். தொடர்ந்து செய்வதால் வலிகள், தசைப் பிடிப்புகள் மற்றும் நரம்பு சார்ந்த தொந்தரவுகள் மறையும்.