பிரபஞ்சத்தின் சூட்சுமத்தையும், பிறப்பின் இரகசியத்தையும் வெளிப்படையாக தெரிவிக்கும் ஓர் பிரம்மாண்டமான திருவிழாவே நவராத்திரி திருவிழா. நிரந்தரமில்லாத மாயையான இந்த பிறப்பின் ரகசியத்தையும், பிறப்பின் அடிப்படையையும் நினைவுபடுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் விழாவே இந்த ஒன்பது நாள் விழா.
நவராத்திரி உணவுகள் சில
பொதுவாக நவராத்திரி ஒன்பது நாட்களும் காலையிலும் மாலையிலும் நைவேத்தியம் செய்து பிரசாதமாக பகிர்ந்தளிக்க கடைபிடிக்கும் சிலவற்றை பார்க்கலாம்.
- ஞாயிற்றுக்கிழமை காலை கல்கண்டு பாத் மாலையில் காராமணி சுண்டல்.
- திங்கட்கிழமை காலை சாம்பார் சாதம் மாலையில் பயத்தம் பருப்பு சுண்டல்.
- செவ்வாய் கிழமை காலை எலுமிச்சை சாதம் மாலையில் மொச்சை சுண்டல்.
- புதன்கிழமை காலை பால் பொங்கல் மாலை வேர்க்கடலை சுண்டல்.
- வியாழக்கிழமை காலை தயிர் சாதம் மாலை பச்சை பயறு சுண்டல்.
- வெள்ளிக்கிழமை காலை சர்க்கரைப் பொங்கல் மாலை புட்டு.
- சனிக்கிழமை எள்ளோரை (எள்ளு சாதம்) மற்றும் ஏதேனும் ஒரு சுண்டல் செய்யலாம்.
- சரஸ்வதி பூஜை அன்று கொண்டைக்கடலை சுண்டல் செய்வது என விதவிதமாக செய்யலாம்.
இவை மட்டுமல்லாமல் நம் விருப்பத்திற்கு ஏற்ப சீரக சாதம், தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல், கொண்டைக்கடலை சுண்டல், பருப்பு பாயாசம், மற்ற தானிய சுண்டல் வகைகள், பாரம்பரிய தானிய சுண்டல் வகைகளையும் செய்யலாம். கீழிருக்கும் பதிவில் விதவிதமான சுண்டல் எவ்வாறு செய்வது என பார்க்கலாம். மேலும் பாரம்பரிய சுண்டல் சிலவற்றையும் நவராத்திரியின் சிறப்பு, பூர்வீகம், பெருமை, கொண்டாடும் நோக்கம் என பலவற்றையும் தெரிந்து கொள்வோம்.
ஒன்பது நாள் விழா
வாழ்வியலுக்கு காரணமான இயற்கையின் இரகசியத்தை பாமரனும் புரிந்து கொள்ள ஏற்றவாறு உருவாக்கப்பட்ட தத்துவங்கள் பல இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாகும். வாழ்வாதாரத்தின் அடிப்படையான உணவிற்காக கொண்டாடப்படும் விழாக்களில் சிறந்தது தைப்பொங்கல். அவ்வாறு வாழ்வின், உயிரினங்களின் அடிப்படையாக கொண்டாடப்படும் விழா இந்த ஒன்பது நாள் விழா.
பிரபஞ்சம் முதல் அனைத்து பொருட்களும் இயங்க சக்தி என்ற ஆற்றல் தேவை. சக்தி என்றவுடன் பெண் சக்தியான ஆன்ம ஆற்றல், படைப்பாற்றல், இயக்க ஆற்றல் என வகைப்படுத்தி அவற்றை அடையும் வழியும் இந்த ஒன்பது நாள் விழாவில் கூறப்பட்டுள்ளது. சக்திக்கே சக்தி அளிக்கும் பெண்களில் திருவிழா. அழகாக வீட்டை அலங்கரித்து அக்கம் பக்கம், உறவு, நட்பு என அனைவருடனும் சேர்ந்து கொண்டாடி மகிழும் நவராத்திரி பண்டிகை, பெண்களுக்கு ஈடு இணையற்ற திருநாள். புரட்டாசி மாதத்தில் வரக் கூடிய நவராத்திரி விழா, பெண்களுக்கே உரித்தான, சக்தி வழிபாட்டுக்கு உரியதாக இதனாலேயே கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி விழா
சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சமயம் சந்திரனும், சூரியனும் சேரும் சமயத்திலும் நவராத்திரி விழா தொடங்குகிறது. கன்னி என்றாலே பெண் என்பார்கள். சூரியன், புதன் கிரகத்தின் ஒளிக்கதிர்களின் தன்மை பூமிக்கு அறிவு சார்ந்த தெளிவையும் ஞானம், செல்வம், வீரத்தையும் அளிப்பதனால் புரட்டாசி மாதத்திற்கு பெருமை சேர்க்கும் விழா நவராத்திரி விழாவாகும். நவ என்றால் 9. ஒன்பது இரவுகள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
ஏன் நவராத்திரி?
தட்சிணாயணம் என்னும் இந்த காலத்தில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணமாகும் காலம் என கருத்துண்டு. அதாவது சூரியன் நகரவில்லை, பூமி தனது நீள் வட்டப் பாதையின் முனைகளுக்கு சென்று திரும்பும் காலம். பூமி சூரியனின் பயணத்தைப் பொறுத்தே உலகில் வெப்பமும், குளிர்ச்சியும் ஏற்படுகிறது. ஆகா இந்த தட்சிணாயணம் (தென்திசை) காலமான புரட்டாசி மாதம் சரியாக குளிர் காலத்தின் நடுவில் வரக்கூடிய மாதம் (தேவர்களின் நடுஇரவு காலம்). சூரியனின் வெப்பம் பூமியின் மேல் வெகு குறைவாக பரவும் இந்த காலம் குளிர் தொடங்கி அடைமழையான ஐப்பசிக்கு முந்தைய மாதம். பூமி குளிரத் தொடங்கும் இந்த காலம் ஒரு விதத்தில் நோய்கள் பரவும் காலம் மற்றும் உடலில் சோம்பல் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும் காலமுமாகும்.
குளிர் தொடங்கிய இந்த காலம் பூமியில் உள்ள அனைத்து உயிரினமும் (தாவரங்கள், மரங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என அனைத்தும்) சூரிய ஒளியை, வெப்பத்தை, சக்தியைத் தேடி நிற்க, அனைத்திற்கும் சக்திவேண்டும் என்று சமூக சிந்தனையுடனும் கொண்டாடப்படும் ஒன்பது நாள் திருவிழா இந்த நவராத்திரி திருவிழா.
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய்” என்பது போல் பிறப்பின் ரகசியத்தையும், ஓரறிவு உயிரினம் தொடங்கி அனைத்து உயிரினத்தின் தத்துவம், பிறந்த உயிரினத்தின் உணவுச் சங்கிலியையும் வெளிப்படுத்தி அனைத்திற்கும் நன்றி கூறும் திருவிழாவாகவும் உள்ளது இந்த நவராத்திரி திருவிழா.
பஞ்ச பூத விழா
பஞ்ச பூதங்களையும் வழிபாடும் விதமாகவும் அமைக்கப்பட்டிருக்கும் இந்த விழா உடல், மனம், பிராணன், ஆத்மா, புத்தி ஆகியவற்றிற்கும் புத்துணர்வூட்டும் வகையிலும் கொண்டாடப்படுகிறது. மாதம், காலம், வடிவம், திதி, பூக்கள், பாடல் என்பவை மனம், பிராணன், ஆன்மா மற்றும் புத்திக்கு உணவளித்தலும், உடலுக்கு உணவளிக்கும் சிறப்பை இனி பார்ப்போம்.
நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் சுண்டல்
பூமிக் குளிரை சமாளிக்க வரவிருக்கும் அடைமழைக்கு உடலை தயார்ப்படுத்தி உடலுக்கும் தோலுக்கும் தேவையான புரதம், வைட்டமின் சத்துக்களை அளிக்கவுமே சுண்டல் மற்றும் பிரசாதங்கள் பரிமாற்றிக் கொள்ளப்படுகிறது. சோம்பலான காலத்தில் எளிதாக தயாரித்தும் தேவையான ஊட்டச்சத்துக்கள் நவதானியம் மற்றும் நம் பாரம்பரிய தானியத்திலும் சுண்டல் தயாரித்தும் படைப்பது வழக்கம்.
இன்று நம் உணவு வகைகள் பெருமளவில் தங்கள் தன்மைகளை இழந்தும் இராசயனங்களால் ஊடுருவி உள்ள நிலையில் சரியான தானியத்தை தேர்ந்தெடுத்து உண்பதே வரவிருக்கும் காலத்திற்கும் வளரும் சமுதாயமான குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உண்மையில் உதவும்.
அதையும் முதல் நாளே ஊறவைத்து பின் ஒரு துணியில் கட்டிவைத்து முளை வந்தவுடன் சுண்டல் செய்து உண்டு வர உடல் வளர்ச்சியும், நோய் எதிர்ப்பு சக்தியும், புத்துணர்வும் அதிகரிக்கும்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுண்டல் என்ற விதத்தில் நாட்டுப் பயறுகலான நரிப்பயறு (நரிபயறு சுண்டல் காணொளி), கருப்பு உளுந்து, சணல் பயறு, நாட்டுத் துவரை, நாட்டுத் தட்டை, காராமணி, நாட்டுத் பாசிபயறு, நாட்டு கொத்தவரை, நாட்டு கொண்டைக்கடலை, நாட்டு மொச்சை, நாட்டு நிலக்கடலை, நாட்டு பூம்பருப்பு, கருப்பு கொள்ளு போன்றவற்றில் சுண்டல் செய்யலாம்.
இவற்றுடன் நார் சத்துக்கள் அதிகம் கொண்ட சிறுதானிய வகைகளான நாட்டுக் கம்பு, நாட்டுக் கேழ்வரகு, முத்துச் சோளம் போன்றவற்றையும் சேர்த்து தயாரித்து உண்டு வர தள்ளாடும் கிழவனும் நின்றாடுவான்.
தெற்காசியாவையும் தமிழகத்தையும் பூர்வீகமாகக் கொண்ட இப்பயிர்களை நன்கு முளைக்கட்டி உண்ண அதிகச் சத்துக்கள் உடலில் பெருகும்.
புரதம் நிறைந்த பயிறுகள்
முதிராத காய்களில் புரதம் குறைவாகவும், வைட்டமின், மாவுச்சத்து ஆகியவை அதிகமாகவும் காணப்படும். ஆனால் முதிர்ந்த பயறு வகைகளில் புரதம் அதிகம் உள்ளது. பயறுகளும், தானியங்களும், பல மருத்துவக் குணங்களையும் கொண்டவை. பயறு வகைகளில் அமினோ ஆசிட் குறிப்பாக “லைசின்” மிக அதிக அளவுகளில் காணப்படுகின்றன.
ஆனால், தானியங்களில் “லைசின்” குறைவாகவே இடம் பெற்றிருக்கின்றது. பயறு வகைகளில் அதிகமாக “வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ்”, “ரிபோபிளேவின்” அதிகம் அடங்கியுள்ளது. பச்சைப் பயறு மற்றும் தட்டை பயறில் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. முளைக்கட்டிய பயறில் வாயு தன்மையை உண்டு செய்யும் தன்மை கிடையாது. எளிதில் செரிமானமும் ஆகும்.
பயறுகள் முளை விடும் தருவாயில் “அஸ்கார்பிக்” அமிலமான “வைட்டமின்-சி” அதிகம் காணப்படுகின்றது. முளைக்கட்டிய பயறுகளில் பிற வைட்டமின்களும் கூடுதலாகக் காணப்படுகின்றன.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுண்டல் செய்து உண்ண அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கும்.
இனி நரிப்பயரில் கார சுண்டலும், கம்பு சணல் பயிரில் இனிப்பு சுண்டலும் எவ்வாறு தயாரித்து நவராத்திரிக்கு வருபவரை ஆரோக்கியமான முறையில் அசத்துவது என்று பார்ப்போம்.
நரிப்பயறு கார சுண்டல்
முதலில் ஊறவைத்து முளைக்கட்டிய நரிப்பயறு ஒரு கப்புடன், பச்சை மிளகாய் இரண்டு, இஞ்சி ஒரு சிறிய துண்டு, சீரகம் சிறிது, கடுகு சிறிது, கறிவேப்பிலை சிறிது, தேங்காய் துருவல் சிறிது, செக்கு நல்லெண்ணெய், இந்து உப்பு போன்றவற்றை தயாராக எடுத்துக் கொள்வோம். ஒரு பத்திரத்தில் தண்ணீர் மற்றும் நரிப்பயறு சிறிது இந்து உப்பு சேர்த்து சிறிது நேரம் வேகவிடவும். 5-10 நிமிடத்தில் நரிப்பயறு வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். பின் இஞ்சி, பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்ல எண்ணெயை சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெந்த நரிப்பயறையும், அரைத்த இஞ்சி விழுது, சிறிது இந்து உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்து தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்த சுண்டல் இடுப்பு எலும்புக்கு பலம் தரும். பெண்களுக்கு ஏற்ற சத்தான சுண்டல்.
கம்பு, சணல் பயறு இனிப்பு சுண்டல்
நரிப்பயறு போலவே நம் நாட்டுப் பயறு வகையைச் சேர்ந்த இந்த சணல் பயறும், நாட்டுக் கம்பையும் ஊற வைத்து முளை கட்டி வைக்கவும். முளைக்கட்டிய நாட்டுக் கம்பு மற்றும் சணல் பயறை ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து பின்னர், வெல்லம் அல்லது கருப்பட்டியுடன் தேங்காய் துருவல் சேர்த்தும் தயாரிக்கலாம்.
இனிப்பான, சத்தான சணல் பயறு சுண்டல் தயார். நாம் கேரட், வெள்ளரி போன்ற சில காய்களையும் சேர்க்கலாம். தொடர்ந்து இந்த வகை சுண்டல்களை உண்டு வர களைப்பு நீங்கி, உடல் பலம் பெறும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாகும்.
இவ்வாறான சுண்டல்களில் புரதம், வைட்டமின்கள், நார் சத்துக்கள், பீட்டா கரோட்டீன், கால்சியம், இரும்புச் சத்து, ரிபோபிளேவின், நியாசின் போன்ற பல சத்துக்கள் உள்ளது. ‘சரிவிகித உணவு‘ என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் நல்ல எண்ணெய், கொஞ்சம் புரோட்டீன், கொஞ்சம் நார் சத்து’ என்று அனைத்தும் ஒரு சேர கலந்த சிறந்த சிற்றுண்டியாகும்.
பகிர்ந்து உண்ணும் திருவிழா
பிறருடன் பகிர்ந்து உண்டு மகிழ்வை கொடுக்கும் இந்த திருநாளில் பாரம்பரியத்தையும் மறவாமல் காப்பது சிறந்தது. சகல செல்வங்களையும் சக்தியையும் கொடுக்ககூடிய இந்த திருநாளில் பிறப்பின் ரகசியத்தை அறிந்து, வெற்றி வாகை சூடி ஞானத்தை அடைவதற்கான வழிகளை பாரம்பரிய சுண்டலான உணவின் மூலம் தொடங்குவோம்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற முறையில் உற்றார் உறவினர் சுற்றார் சுற்றத்தினர் என அனைவருடனும் பகிர்ந்து பாரம்பரியத்தைப் பரிசளிப்போம். அபரிவிதமான பலத்தை கொடுக்கும் இந்த பாரம்பரிய பயிர்கள், தானியங்களும் பெண்கள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவு.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு, பூக்கள், ரகம் என்பதுடன் ஞானம் பெருக நல்ல எண்ணத்துடன் ஒன்பது நாள் கொண்டாட பத்தாவது நாள் இவற்றை வெற்றியுடன் அனுபவிக்கும் நாளாக நம்மிடம் வந்து சேரும். பத்து நாட்கள் ஒன்றை பெற எண்ணத்தை செலுத்தி அதை அடைய நாம் தயாராவதுடன் நமது உடலும் மனமும் தயாராகிறது.
பெண்மையை போற்றும் இந்த திருநாளில் அனைத்து வயது பெண்களும் இந்த பகிர்வையும் பரிமாற்றத்தையும் சக்தியோடு வெளி கொணர்வோம்.