சூப் என்று செல்லமாக அழைக்கும் நம் தமிழக வடிசாறு அல்லது இரசம் அனைவரும் விரும்பி பருகும் ஒரு சிறந்த திரவ உணவு.
ஐயா நம்மாழ்வாரிடம் தமிழகத்தில் நாட்டு மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் என்று தொடங்கியது என்று கேட்டதற்கு, நம் தமிழச்சி எப்பொழுது சூப் சமைத்தலோ அன்றே தொடங்கியது என்று பலமுறை கூறக் கேட்டிருக்கிறேன்.
அவ்வளவு மருத்துவ குணம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வலிமையைக் கொடுக்கக் கூடியது நம்ம ஊரு சூப் (இரசம்). மருத்துவ குணம் மட்டுமா, தமிழர்களின் வளர்ச்சியையும், செம்மையும் வாழ்வியல் வலிமையையும் விளக்குகின்றது.
நம்ம ஊரு சூப்பு
பாரம்பரிய உணவுகளில் வெகு விமர்சியாக அனைவரும் விரும்பும் திரவ உணவும் நம்ம ஊரு சூப்பு தான்.
சூப் என்றவுடன் அனைவரின் நாவிற்கும் தனி தெம்பே வந்தார் போல உணர்வு ஆட்கொள்கிறது. சூப் பிடிக்காதவர்கள் உள்ளரோ என்று சல்லடை போட்டு தேடினாலும் கிடைப்பது அரிது. நாவிற்கும், மனதிற்கும், வயிற்றுக்கும், ஒரு வித தெம்புடன், அமைதியையும், திருப்தியையும் கொடுக்கக்கூடியது.
இதமான சூட்டுடன், அட்டகாசமான மணத்துடன், பல வண்ணங்களில் கண்களை பறிக்கும் காய்கள் அல்லது அவற்றின் கலவை மட்டும் தானா, என்றவுடன் பலரின் எண்ணத்தில் தோன்றி வாயில் உதிக்கும் சுவை அட அட சொல்லவா வேண்டும். காரசாரமாக, பல கலவையான சுவையில் என்ற எண்ணம் உதிக்க, உடனே சூப் செய்து ஒரு பிடி பிடித்துவிட வேண்டும் என்ற அளவிற்கு ஆளைத் தூண்டும் ஒரு அற்புதமான திரவ உணவும் நம்ம சூப்பு தான்.
பொதுவாக பிறந்த பச்சிளம் குழந்தைகள் உணவின் உயிர்சக்தியையும், இயற்கை சுவையையும் அறிந்து அவற்றை தேடும். நாமோ நேரமின்மை காரணமாக நல்ல சத்தான உணவுகளை கொடுக்காமல் ஏதோ வயிற்றை நிரப்ப கண்ட உணவுகளை கொடுத்து பழக்கிவிடுகின்றோம்.
அவ்வாறு பழக்கிய உணவுகள் ஒருவித போதையையும் மயக்கத்தையும் கொடுத்து மீண்டும் மீண்டும் அந்த செயற்கை சுவையுள்ள உணவுகளை உண்ண தூண்டுகின்றது. இதனால் நல்ல உயிர்ச்சத்துள்ள உணவை இனம் காண முடியாமல், இயற்கை சுவைக்கு பழக்கமில்லாமல் நமது நாவானது பாதிக்கப்படுகின்றது. நாவினுடைய இந்த பாதிப்பு மூளை நரம்புகளின் இயற்கை சுவை அறியும் திறனை மறக்கடிப்பதுடன் செயற்கை உணவின் வசம் சிக்குகின்றது.
உடல் உறுப்புகளும் இந்த செயற்கை சுவையினால் தூண்டப்பட்டு, நாளடைவில் செயல் இழக்கும் நிலைமைக்கும் தள்ளப்படுகின்றது. இவை அனைத்தும் 10-15 வருடங்களுக்குள் நடந்தேறுகின்றன. இவற்றால் சிறு சிறு தொந்தரவுகள் மட்டுமல்லாது, நாளடைவில் உயிர்கொல்லி நோய்களும் இன்று பல இடங்களில் அழையா விருந்தாளியாக வலம்வருகிறது.
யாருக்கும் எந்த தீய பழக்கமும் கிடையாது, பின் ஏன் இந்த தொந்தரவு என்று காரணம் தெரியாமல் புலம்புவதையும் இன்று நம் இல்லங்களில் காண்கிறோம். நம் குழந்தைகளுக்கு தெரியாது எது சரியான உணவு, அதை எப்படி உண்பது என்றெல்லாம். நாம் தான் பழக்கவேண்டும், பழக்கியது மட்டுமில்லாது அவற்றை அவர்கள் பிடித்தாற்போல் அளவான பக்குவத்தில் தயாரித்தும் கொடுக்க வேண்டும். தொந்தரவு வந்த பின் அலைந்து திரிந்து உயிரைக்காக்க அல்லது தூக்கி சுமப்பது என்பது வேதனையின் உச்சம்.
பொதுவாக சூப் அல்லது இரசம் என்பது காய்கள், கீரை அல்லது அவற்றின் தண்டுகள், பூண்டு, மிளகு, சீரகம், இந்துப்பு சேர்த்து தயாரிக்கப்படும் சூடான கலவை சாறு.
ஏதோ ஒரு விதமான காய், இலை, கனி ஆகியவற்றில் இருந்து எடுப்பது சாறு. மேலும் சாறு என்பது அந்த காய், கீரை, கனியின் சதைப் பற்று, நார் பகுதி ஆகியவை நீக்கியதோடு, கசக்கியோ, பிழிந்தோ, இடித்தோ பருகுவது என்று பார்த்தோம்.
சூப் என்பது காய், கனி போன்றவற்றில் பல வகைகளை கலந்து தயாரிப்பது. தயாரிக்கும் முறையிலோ சதைப் பற்று, நார் பகுதி போன்று எதையும் வீணாக்காமல் அனைத்தையும் முழுவதுமாக மசித்தோ சிறிய அளவில் நறுக்கியோ பக்குவமாக தயாரிப்பதாகும்.
என் குழந்தை வெறும் உருளைக்கிழங்கு தான் சாப்பிடுவார் என்று ஸ்டைலாக சொல்லும் நவீன தாய்களுக்கும், காய் (பாவக்காய் உட்பட) மற்றும் கீரைகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகள் பற்றி புலம்பும் அம்மாக்களுக்கும் ஓர் அறிய வரப்பிரசாதம் தான் இந்த சூப்.
வெளிப்படையாக இவ்வாறான காய்கள் கீரைகளை கண்களால் பார்த்தால் குழந்தைகள் பல நேரங்களில் விரும்புவதில்லை என்ற எண்ணம் கொண்ட தாய்மார்கள் அவற்றை அருமையாக அரிந்து அல்லது மசித்து சூப் செய்து கொடுத்தால் அதனை வேண்டாம் என்று சொல்ல குழந்தைகளுக்கு மனம் வராது, ஒரு முறை சுவைத்து விட்டனர் என்றால் மீண்டும் மீண்டும் கேட்பார்கள்.
பெயர் சொல்ல, ஆளப் பிறந்த குழந்தை நடை உடை அற்ற நிலையில் வாழ்வது என்பது கொடுமையிலும் கொடுமை. இன்று தாய்ப்பாலே நஞ்சாகிப் போக நல்ல காய்கறிகள், கீரைகள் கிடைப்பதே குதிரைக் கொம்பாகிறது. அவ்வாறு தேடித் தேடி, பார்த்து பார்த்து வாங்கும் உணவுகள் நம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் நலனையும் காக்கத்தானே. இவற்றை எளிமையாகவும் உணவில் அடம்பிடிக்கும் குழந்தைகள் முதல் எல்லா வயதினருக்கும் செய்து கொடுத்தால் அத்தனை சத்துக்களும் வந்து சேருமே.
பீட்டா காரட்டின், போலிக் ஆசிட், புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி, ஈ, பாஸ்பரஸ், கால்ஷியம், துத்தநாகம், சோடியம், பொட்டாஷியம் என்ன பல சத்துக்களை கொண்ட பொன்னாங்கண்ணி, முருங்கை இலை, முருங்கை தண்டு, வாழைப் பூ, பட்டாணி, நாட்டு தக்காளி, நெல்லிக்காய், சின்ன வெங்காயம், காரட், பீன்ஸ், பீட்ரூட், பசலைக் கீரை, அகத்திகீரை, வாழைத்தண்டு, கொத்தமல்லி போன்ற காய்களை கொண்டு சூப் செய்வது அனைத்து சத்துக்களையும் கொடுக்கவல்லது.
எது சூப்?
எது சூப்?சூப்பின் பெருமைகளையும் காய்கறிகளின் அவசியத்தையும் பார்த்த நாம் சூப் எது என்பதை அறிந்திருக்கிறோமா? சாதாரணமாக சூப் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது கடைகளில் கொள கொள என்று விற்கும் சூப்கள். அவை சூப்புகள் தானா? அவற்றில் நாம் கூறியது போல் சத்துக்கள் உள்ளதா? இல்லவே இல்லை.
நவீனம் வளர வளர உணவிலும் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இன்று கடைகளில் கிடைக்கும் சூப்களில் அதிகப்படியான சுவையூட்டிகளும் நிறமூட்டிகளும் அதிகமாக சேர்க்கப்படுவதுடன், Corn Flour எனப்படும் மாவும் கொளகொளப்பு மற்றும் அடர்த்திக்காகவும் சேர்க்கப்படுகிறது. இந்த Corn Flour என்பது மக்கா சோளத்தினுடைய சக்கை மாவுப்பொருள் (மைதாவைப்போல்). ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் சத்துக்களும் இல்லாது, அடர்த்திக்காக மட்டுமே பயன்படும் மாவுப்பொருள். இது குடலையும் வயிறையும் பசைப்போல் அடைத்து விடுவதுடன் ஜீரண சக்தியையும் மந்தப் படுத்துகிறது. மேலும் சுவையூட்டிகளும் நிறமூட்டிகளும் உடலில் பல தொந்தரவுகளை ஏற்படுத்துகிறது.
சூப் என்பது தொந்தரவுகள் மற்றும் உடல் கழிவுகளை அகற்றி வலிமையுடன் திகழவே தவிர, வயிற்றை பசை போல் அடைப்பதற்கில்லை.
இவ்வாறு வயிற்றை அடைக்காமல் நம் வீடுகளில் Corn Flour பயன்படுத்தாது காய்கறிகள், பருப்பு தண்ணீர், தக்காளி, பூண்டு, வெங்காயம், மிளகு, சீரகம், கேழ்வரகு பால் போன்றவற்றை சேர்த்துக் கொண்டு தயாரிப்பதே சூப்.
வெயில் காலத்தில் அல்லது தினமும் காலையில் எழுந்தவுடன் ஆரோக்கிய சாறுகளை (இயற்கை சாறுகள் பதிவை பார்க்க இங்கே அழுத்தவும்) அருந்தினாலும், மழைக் காலங்களில் உடலில் குளிரையும் சோம்பலையும் அகற்றி சுறுசுறுப்பை கொடுக்க ஏற்றது இந்த ஆரோக்கிய சூப்புகள்.
இதமான காலை வேலை அல்லது காலை உணவிற்குப் பின் 2 மணி நேரம் கழித்து சூப் அருந்துவது சிறந்தது.
இன்று மதிய உணவு என்று பெரிய உணவங்கங்களில் உணவருந்த சென்றால் முதலில் வருவது இந்த சோள மாவில் தயாரித்த சூப் தானே என்கிறீர்களா?
அது மிகவும் தவறான பழக்கம், சூப் என்பது பொதுவாக நம் பசியை தூண்டவும், நல்ல உடல் ஜீரணத்தை ஊக்குவிக்கவும் பருகப்படும் ஒன்று. அவற்றை காலை 11 மணிக்கு அதாவது காலை, மதிய உணவு இடைவேளையில் எடுத்துக் கொள்வதே சிறந்தது.
காலை உணவு சீராக ஜீரணிக்கவும், ஜீரணத்தின் பின்பு அடுத்த வேளையான மதிய உணவிற்கு நம் உடம்பை தயார் செய்து பசியை இயற்கையாக தூண்டுகிறது. அதை விட்டுவிட்டு இன்று Corn Flour கொண்டு தயாரிக்கும் நவீன சூப்களால் உடலுக்கு ஆபத்தும் அஜீரணமும் ஏற்படும்.
எவ்வாறு சூப் தயாரிப்பது?
சூப் என்பது காய்கறி, கீரைகளில் உள்ள சாறுகளை அளவாக 2-3 கொதிகளில் தயாரிக்கப்படுவது. எப்பொழுதும் சமைக்கும் முறைகளை விட சூப்புகளில் சத்துக்கள் அதிகம். காரணம், பொதுவாக சமைக்கும் முறையில் காய்கறி, கீரைகள் அதிக சூட்டில் கொதித்து அல்லது வேக வைக்கப்படுகின்றது, இதனால் பல சத்துக்கள் ஆவியாகி விடுகிறது.
ஆனால் சூப் செய்யும் பொழுது முதலில் தண்ணீர் அல்லது பருப்பு நீரை கொதிக்க வைத்து, 2-3 கொதி வந்த வுடன், மிளகு, பூண்டு, காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை சேர்த்து மீண்டும் ஒரு கொதி அதாவது பொங்கி வந்த உடன் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவி இந்து உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
5 நிமிடம் கழித்து பருக ஏற்ற சத்துக்கள் குறையாத ஒரு சமச்சீர் உணவு நமக்கு கிடைக்கின்றது. பருப்பு நீர் இந்த சூப்புக்கு அடர்த்தியை அளிக்கிறது. இதற்கு பதில் பாரம்பரிய அரிசிகளில் களைந்த நீர், பச்சைபயறு மாவு அல்லது கேழ்வரகு பால், கேழ்வரகு மாவு போன்றவற்றையும் சேர்க்கலாம்.
மணத்தக்காளி கீரை சூப்
மணத்தக்காளி கீரை சூப் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். மணத்தக்காளி கீரை சிறிதளவு, பருப்பு நீர் ஒரு கப், ஒரு தக்காளி, 10 சின்ன வெங்காயம், சீரகம், மிளகு, இந்து உப்பு போன்றவற்றை எடுத்துக்கொண்டு முதலில் பருப்பை வேக வைத்து அதன் நீரைக் கொதிக்க வைத்து பின் கொதிக்கும் நேரத்தில் சுத்தப்படுத்தி சிறிதாக அறிந்து வைத்திருக்கும் மணத்தக்காளி கீரை, தக்காளி, வெங்காயம் போன்றவற்றுடன் மிளகு, சீரகம் (பொடியும் சேர்க்கலாம்) சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை நிறுத்தி மூடிவைக்கவும். தேவைப்பட்டால் தேங்காய்ப்பால் சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து பரிமாறலாம். மண் பாத்திரத்தில் செய்து உண்ண சுவையும் மணமும் கூடும்.
மலச்சிக்கல், கல் அடைப்பு, உடல் பருமன், அஜீரணம் உள்ளவர்கள், மெல்ல முடியாதவர்கள், பல் இல்லாதவர்கள் மற்றும் வயதானவர்களுக்கும் ஏற்றது. பக்குவமாக தயாரிக்கப்படும் சூப்பின் சுவை, மணத்திற்கு ஈடு இணை ஒன்றும் கிடையாது.
ஒவ்வொரு நாளும் இவ்வாறு பல காய்கள், கீரைகள், மூலிகைகள் கொண்டு பல சூப் வகைகளை தயாரித்து தொடர்ந்து பருகி வர முடிஉதிர்தல் குறையும், முகம் பொலிவு பெரும், மேனி பளபளப்பாகும். மொத்தத்தில் ஆரோக்கியம் பெருகும்.