நம் பாரம்பரிய அரிசிகளில் கஞ்சியை செய்து அருந்த உடலும் மனமும் தெம்பு பெரும். கஞ்சி என்றால் என்ன என்றும் கஞ்சியின் பயன்கள், மருத்துவ பலன்களையும் தெரிந்து கொண்டு பாரம்பரிய அரிசியைக் கொண்டு தயாரிக்கப்படும் கஞ்சியின் பயன்களை தெரிந்து கொள்ளலாம்.
கவுனி அரிசி கஞ்சி
இவ்வாறாக ‘கவுனி அரிசி‘க்கஞ்சி கர்ப்பிணிகளின் உடல் நலத்தை காக்கும். கர்ப்ப காலங்களில் ஏற்படும் உடல் தளர்வு, பால் சுரப்பு உள்ளிட்ட பல முக்கிய உடல் மாற்றங்களுக்கு இந்த கவுனி அரிசி கஞ்சி ஏற்றது.

குடைவாழை கஞ்சி
அதைப்போல குடைவாழை என்ற அரிசி குடல் சம்பந்தமான தொந்தரவுகள், ஜீரண கோளாறுகள் உள்ளவர்களுக்கு ஏற்றது. நம் குடலை வளமாக்கும் அரிசி நம் ‘குடைவாழை அரிசி’. இந்த குடைவாழை அரிசியில் கஞ்சி தயாரித்து பருக அஜீரண கோளாறுகள் தீரும். ஆச்சரியமாகத் தானே உள்ளது அதன் பெயரும் மகத்துவத்தையும் அறிந்து கொள்ளும் போது.
குள்ளக்கார் கஞ்சி
தலை கடகடவென ஆடும் தாத்தாவின் நரம்பு தளர்ச்சி முதல் வாலிபரின் கை நடுக்கம் வரை காணாமல் போகும் நம் ‘குள்ளக்கார்‘ அரிசி கஞ்சி.
காட்டுயானம் அரிசி கஞ்சி
இனிப்பாக இனிக்கும் சர்க்கரை நோய்க்கு டாட்டா காட்டுவதோடு உடல் வலிமையைப் பெருக்கும் ‘காட்டுயானம் அரிசி‘க் கஞ்சி அருமையான சுவையை கொண்டதும் கூட.
இலுப்பைப்பூ சம்பா அரிசி கஞ்சி
சுண்ணாம்பு சத்திற்காக தெரிந்தே பல இரசாயனங்களை மாத்திரைகளாக கொடுப்பதற்கு பதில் ‘இலுப்பைப்பூ சம்பா அரிசி‘ கஞ்சி கொடுக்க குழந்தைகளின் எலும்பு வலுபெறும்.
குழந்தைப்பேறு கஞ்சி
அன்றாடம் ‘மாப்பிள்ளை சம்பா‘ அல்லது ‘கருங்குறுவை அரிசி‘யில் கஞ்சி செய்து உண்டுவர தாம்பத்தி யமும் நல்ல குழந்தைப்பேறும் கிடைக்கும்.
இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம் நம் பாரம்பரிய அரிசியில் செய்யும் கஞ்சியின் பெருமைகளை..
இன்று நம் வாழ்வில் அரிசியை உடைத்து கஞ்சி தயாரிக்க கூட நேரமில்லாத அவசரம் சூழ்ந்துள்ளது. ஆனாலும் கூட கஞ்சி மட்டுமே குடித்தால் போதும் என்கிற உடல் நலமே நம்மிடம் இருக்கிறது.
இந்த முரண்பாடுகளுக்கும் இடையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒவ்வொருவரும் தாம் உண்கிற உணவுக்கு முன்பு அரை டம்ளர் அளவில் ஏதாவது ஒரு பாரம்பரிய அரிசியில் கஞ்சியை உணவாக அருந்தலாம்.

கஞ்சி அருந்தலாம் என்றதும் ஏதாவது பாரம்பரிய அரிசியில் உடனடியாக கஞ்சி தயாரித்து உண்பது ஒரு வகை அல்லது வடிகஞ்சி எடுத்து மறுநாள் காலை உணவுக்கு கஞ்சி ஆக்கிக் கொள்வது இன்னொரு வகை.
எளிமையாக தயாரிக்கும் வடிகஞ்சி உணவிற்கு ஒரு நாள் காத்திருத்தல் வேண்டும். என்னதான் வடி கஞ்சியில் பல சத்துகள் இருந்தாலும் சுடு கஞ்சி பிரியர்களுக்காக இந்த பாரம்பரிய அரிசியில் செய்த உடனடி கஞ்சி (Instant Kanji) உதவும்.