என்ன ஒற்றுமை???
புளித்த உணவுகள்… இட்லி, மோர், கூழ் உடலுக்கு ஊட்டமளிக்கும் உணவுகள்.
தேங்காய் சட்னி, காரச் சட்னி, வடகறி, மரச்செக்கு நல்லெண்ணெய் இட்லி பொடி எனப் பல அசத்தலான காம்பினேசனுடன் அம்மக்களின் கை மணத்தில் தயாராகும் மல்லிகை பூ இட்லியின் சுவைக்கும் சத்துக்கும் ஈடே இல்லை.
அரிசியும் உளுந்தும் சேர்த்து ஆவியில் வேக வைக்கும் இட்லி எளிதில் ஜீரணம் ஆகும் சிறந்த உணவு. வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கல்சியம், பொஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் கொண்டது. நோய் நச்சு முறிவு மருந்தாகவும் இட்லி உடலில் செயலாற்றுகிறது. இட்லி சாப்பிடுவதால் பல உடலுக்கு தேவையான அமிலங்களும் பன்மடங்கு அதிகரிக்கின்றது.
இட்லியைப் போலவே உடலுக்கு சத்தும் நோய் எதிர்ப்பு தன்மையும் கொடுக்கக் கூடிய மற்றொரு சிறந்த உணவு பசு மோர். பசுந்தயிரில் நீரைப் பெருக்கி மோராக்கி சிறிது இஞ்சி, சீரகம் தட்டிப்போட்டு கருவேப்பிலை, மல்லித்தழை, சேர்த்து மதியத்திலும் கோடையிலும் அருந்த உடலை அது குளிர்விப்பதுடன் புத்துணர்வும் அளிக்கிறது. பல நோய்க்கு அருமருந்தாக உள்ள தாகத்தை தணிக்கும் மோருக்கு இணையான வேறொன்றை ஒப்பிடவே முடியாது.
பசு மோர் மட்டுமா, ஆடி மாதம் காற்று அடிக்கிறதோ இல்லையோ, ஆடி மாதம் என்றவுடன் அடிப்படை தத்துவம் அறியவில்லையானாலும் பல இடங்களில் மாரியம்மனுக்கு கூழுற்றும் சம்பிரதாயம் இன்றும் தொடர்கிறது. கேழ்வரகுக் கூழ். அபரிவிதமான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்ட ஒரு சிறந்த உணவு. ஆடிக் காற்றில் பரவும் எப்பேர்ப்பட்ட நோய்க் கிருமிகளையும் அழிக்கவல்லது இந்த கேழ்வரகு கூழ். அது மட்டுமல்லாது கால்சியம் சத்து, இரும்பு சத்து, நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ளது.
இவ்வாறு நம் தமிழர்களின் உணவுகளில் கால நேரம், தட்பவெப்பம் என அனைத்துடனும் பிரதானமான இடத்தைப் பிடித்து வைத்திருக்கும் இந்த உணவுகளில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. சிறந்த உடல் ஆரோக்கியம், எளிய ஜீரண சக்தி, ஆற்றல் மிகுந்த எதிர்ப்பு சக்தி, வலுவான உடல் கட்டமைப்பு என இத்தனை அபார சக்திகளை உள்ளடக்கிய இந்த உணவுகள் அனைத்தும் ஒருவித நொதித்தல் – புளித்தல் பக்குவத்தின் மூலம் பெறப்படுபவை.
நொதித்த உணவு
நொதித்தல் என்பது ஒருவகை வேதியியல் உருமாற்றம். இட்லி மாவு, கேழ்வரகு கூழ், தயிர், நீராகாரம் போன்றவை சீராக நொதித்து பக்குவப்படும் போது உடலுக்கு பல நன்மையை கொடுக்கிறது. உணவு எதற்காக? என்ற பகுதியில் பார்த்த உணவின் தத்துவமான நேற்று, இன்று, நாளை அடிப்படையில் நேற்றைய கழிவை அகற்றவும், இன்றைய சக்திக்காகவும், நாளைய உடல் வலுவிற்காகவும் ஏற்ற சிறந்த உணவுகளாக இவை உள்ளது.
நொதித்தலின் பயன்கள்
இந்த உணவு பாக்டீரியா, நுண்ணுயிர்கள் உதவியால் உருமாறும் போது பலவிதமான உயிரியல், வேதியியல் பரிணாமத்தை ஏற்படுத்துகிறது. சீராக பக்குவப்படும் உணவுகள் உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது.
Probiotic பயன்கள்
இவற்றையே ப்ரோபயாடிக் உணவுகள் என்கிறோம். வயிறு சம்மந்தமான அனைத்து தொந்தரவுகளையும் சீராக்குவதுடன் அல்சர், வயிற்று புண், குடல் புண் போன்றவற்றை ஆற்றுகிறது. இவை மலச்சிக்கல், தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்தாகும்.
இப்பேர்ப்பட்ட சிறப்புகள் கொண்ட இவற்றை இன்று நஞ்சாக மற்றிக் கொண்டிருக்கிறோம் நாம். காரணம் சோம்பேறித்தனம், பொறுப்பில்லாமை, அலட்சியம்.
நொதித்தலில் நன்மைகளைப் பார்த்த நாம் அவற்றின் பக்குவத்தைத் தவறவிட்டால் ஏற்படும் பல பின்விளைவுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.
நொதித்தலால் உணவுகள் தங்களின் நிலையில் வாயு, அமில மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அது மட்டும் இல்லாமல் ஒருவித போதையையும் ஏற்படுத்துகிறது. இட்லி உடலுக்கு நல்லதா அல்லது தீமையை ஏற்படுத்துமா என தெரிந்துக் கொள்ள இங்கு இணையவும்.
இவற்றிற்கு என்ன தான் தீர்வு? அவசர உலகில் என்ன செய்ய முடியும் என்கிறீர்களா?
அவசர உலகில் அவசரமாய் உலகை விட்டு போகவா இந்த அவசரம். இல்லவே இல்லை, வாழ்க்கையை வாழத்தானே. யாரும் ஆட்டுக்கல்லில் தினமும் ஒருமணி நேரம் மாவை அரைக்க சொல்லவில்லை. நம் குடும்பத்தாரின் நலமும், நம் பிஞ்சு குழந்தைகளின் நலமும் நம் கையில். விதவிதமான தானியத்திலும், அரிசியிலும் உணவை நித்தம் நித்தம் புதிதாக செய்து கொடுக்க ஆரோக்கியம் குடும்பத்தில் தவழும்.
மறு (ஒரு) நாளுக்கு மட்டும் தேவையான மாவை ஆட்டி வைத்துகொண்டு இட்லி, தோசை தயாரித்து சாப்பிடலாம். இட்லி பதத்தை கடந்து புளித்து தோசை பதத்திற்கு வந்த மாவை மறுநேரம், மறுநாள் என பயன்படுத்தாது சிறப்பானது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானியத்தில் அதாவது ஒருநாள் சிறுதானியமான வரகரிசி இட்லி, மறுநாள் பாரம்பரிய அரிசியான காட்டுயானத்தில் இட்லி, அடுத்த நாள் கருடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, கம்பு போன்றவற்றில் இட்லி தோசை என விதவிதமாக செய்து சாப்பிட இருதய நோய், நீரிழிவு தொடங்கி உடல் பருமனும் ஓட்டமாய் ஓடிவிடும்.
இட்லியைப் போலவே தேவைக்கேற்ப புதிதாக தயாரான இரசாயனங்கள் இல்லாத நாட்டு பசுந்தயிர் கிடைக்கப் பருகலாம். இல்லாவிட்டால் கவலையில்லை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கொட்டைப்பருப்பில் தயிரை தயாரிக்கலாம். உதாரணத்திற்கு தேங்காய்ப்பால் எடுத்து எலுமிச்சை சாறு கலந்து 3-4 மணி நேரம் வைக்க தேங்காய் தயிர் தயார்.
இவை உடலை ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் உடலுக்கு தேவையான பேரூட்ட நுண்ணூட்டச் சத்துக்களையும் அளித்து உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மேலும் சீரான செரிமானத்தையும், ஜீரண மண்டலத்தில் உருவாகும் நோய்களையும் போக்குகிறது.
இவ்வாறு சத்தான சரியான பக்குவத்தில் கிடைக்கும் உணவை உட்கொள்ள அன்றாடம் தெருக்களிலும், பூங்காக்களிலும், கடற்கரையிலும் தேவையற்ற கொழுப்பை குறைக்க நடக்கும் நடையும், நேரமும், உணவின் அளவும் குறையும். சத்துக்களும் ஆரோக்கியமும் நிறையும்.