தமிழகத்தில் பொதுவாக பிப்ரவரி தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை பெரும்பாலான பகுதிகளில் கோடை வெயில் வாட்டும். இந்த காலத்தில் அதற்கேற்ற உணவுகளை உட்கொள்வது உடலுக்கும் உடலில் ஏற்படும் உஷ்ணம் சார்ந்த தொந்தரவுகளுக்கும் நல்ல பலனை அளிக்கும்.
கோடையில் ஏற்படும் தாக வேட்கை, மயக்கம், உஷணம் சார்ந்த தொந்தரவுகள், வயிற்றுவலி, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் சத்துகுறைபாடினை போக்கவும் அவசியமான உணவாக கீரைகள் உள்ளது. மேலும் இரும்பு சத்து குறைபாடு, சுண்ணாம்பு சத்து குறைபாடு ஆகியவற்றிற்கும் சிறந்தது.
கீரைகள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் அற்புத உணவு தான். ஆனால் எல்லா கீரைகளையும் எல்லா காலங்களிலும் உண்ணலாமா? என்றால் இல்லை. ஒவ்வொரு காலத்திலும் அந்த காலத்திற்கு ஏற்ற காய், பழம், கீரைகளை உண்பதாலேயே உடலை பேணிப் பாதுகாக்க முடியும். அதேபோலதால் கீரைகளையும் காலத்திற்கு ஏற்ப உண்ணவேண்டும்.
கோடைக்கு அதிக வெப்பத்தை போக்கும் கீரைகளே அவசியமானது. அதேப்போல் கோடையை சமாளிக்கும் சத்துக்கள் நிறைந்த கீரைகளாகவும் இவை இருக்க வேண்டும். அதை விடுத்து உஷணத்தை மேலும் அதகரிக்கும் கீரைகளை உண்டால் மேலும் உபாதைகள் அதிகரிக்கும். அதனால் ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ற கீரைகளை பக்குவமாக தயாரித்து உண்பது அவசியம். மேலும் இதில் மிக முக்கியமானது கீரைகளை இரவு நேரத்தில் உண்ணக்கூடாது மற்றும் கீரைகளை புளி சேர்த்துத் தயாரிப்பதை தவிர்ப்பதுமாகும்.
கோடைக்கு ஏற்ற கீரைகள்
கீழாநெல்லி
கல்லீரல் செயல்பாடுகளை சீராக்கும். கோடையில் பெரும் பாலானவர்களை தாக்கும் மஞ்சள் காமாலைக்கு சிறந்தது கீழாநெல்லி கீரை.
முளைக் கீரை
உடலுக்கு நல்ல வலுவை அளித்து உஷ்ணத்தைப் போக்கும் கீரை முளைக் கீரை. எளிதாக இதனை வீட்டில் வளர்க்கலாம்.
மணத்தக்காளி கீரை
கோடையில் அதிகமாக ஏற்படும் வயிற்றுப் புண், குடல் புண் போன்ற தொந்தரவுகளை விரைவாக போக்கும் அற்புதமானக் மணத்தக்காளி கீரை. தேங்காய்ப் பால் சேர்த்து சமைத்து உண்பது சிறந்தது அல்லது தேங்காயுடன் பச்சையாக சிறிது இலைகளை மடித்தும் உண்ணலாம்.
கரிசலாங்கண்ணிக் கீரை
உஷ்ணத்தால் முடி உதிர்வு, கண் எரிச்சல் ஆகியவற்றை போக்கும் அற்புதமான கீரை கரிசலாங்கண்ணிக் கீரை.
வெந்தயக்கீரை
கோடை வெயிலினால் ஏற்படும் உஷ்ண தொந்தரவுகளுக்கு மிக சிறந்த கீரை வெந்தயக் கீரை. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், அடிவயிற்று வலிக்கு மிக சிறந்தது.
சக்கரவர்த்திக் கீரை
கோடையை சமாளிக்கும் தாது பலத்தையும், பிரான பலத்தையும் அளிக்கும் கீரை சக்கரவர்த்திக் கீரை.
வல்லாரைக் கீரை
உடலை சமநிலைப் படுத்தும் சிறந்த கீரை வல்லாரைக் கீரை. மூளைக்கு சீரான இரத்த ஓட்டத்தை அளித்து, புத்துணர்வு அளிக்கும்.
ஆராக் கீரை
மலச்சிக்கல், அஜீரணம் போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்த கீரை ஆராக் கீரை. வயல்வரப்புகளில் அதிகம் பார்க்கலாம்.
அகத்திக் கீரை
உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற அற்புதமாக துணைபுரியும் கீரை அகத்திக் கீரை. அகத்தில் ஏற்படும் தீயை அதாவது உஷணத்தை போக்கும் சிறந்த கீரை.
இந்த கீரைகளை துவரம் பருப்பு, அல்லது பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து நெய் சேர்த்து உண்பது நல்ல பலனை அளிக்கும். முடிந்த வரை செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையான காலங்களில் இந்த கீரைகளை தவிர்ப்பது சிறந்தது.