எவ்வாறு தக்காளி செடியை எளிதாக வளர்க்கலாம் – தக்காளி செடி.
தக்காளி வளர்ப்பையும் அதில் ஏற்படும் பூச்சி, நோய் தாக்குதலையும் அவற்றை இயற்கையாக சமாளிக்கும் முறைகளையும் பார்ப்போம்.
நேரடியாக விதைக்காமல் நாற்று விட்டு நடும் வகையானது தக்காளி செடிகள். பொதுவாக உணவுக்காக பயிரிடப்படும் தக்காளிகள் எல்லா பருவத்திலும் வளரக்கூடியது தான் என்றாலும் குளிர்காலம் சிறந்த காலம். இரண்டு மாதங்களில் தக்காளி அறுவடைக்கு தயாராக இருக்கும்.
தக்காளி செடியைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் வழிகள்
இலைப்பேன், வெள்ளை ஈ, பச்சை காய் புழு, வாடல் நோய், இலைக் கருகல் நோய் போன்றவையால் தக்காளிச் செடிகள் பெரும் சேதத்திற்குள்ளாகும்.
கோடைகாலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது இலைப்பேன். மொட்டு கருகல் நோயையும் (காய்ப்பைக்குறைக்கும்), இலை சுருட்டு நோயையும் (சத்துக்கள் குறைந்து இலைகள் சுருண்டு காய்ந்து விடுவது) பரப்பும் காரணியாகவும் இருக்கிறது. செடிகளிலிருக்கும் இலைகளின் சாற்றை உறிஞ்சி குடித்து செடிகளை கருகச்செய்கிறது. இதனைக்கட்டுப்படுத்த வேகமாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மேலும் நாற்று நடுவதற்கு முன் வேர்களை பஞ்சகவ்யத்தில் நனைத்து நட இலைப்பேன் தாக்குதலை குறைக்கலாம்.
இலைகளை மஞ்சள் நிறமாக மாற்றும் வெள்ளை ஈ தண்டுகளிலிருக்கும் சாற்றை உறிஞ்சக்கூடியது. இலைகளின் மேல் பூஞ்சணங்கள் தோன்றி செடி வளர்ச்சியை பாதிக்கக்கூடியது. இதனைத்தடுக்க மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை ஆங்காங்கே வைப்பதும், அவ்வப்பொழுது கோமூத்திரத்தினை நீருடன் கலந்து அளிப்பதும் அவசியம்.
தக்காளிப்பழத்தின் காய் பழங்களை துளையிட்டு சதைப்பகுதியையும் சேதப்படுத்தும் புழுக்கள் இந்த பச்சை காய் புழுக்கள். இவற்றை எளிதாக தோட்டக்கலை துறையில் கிடைக்கும் இனக் கவர்ச்சிப் பொறிகளைக் கொண்டு அகற்றலாம்.
போதுமான சத்துக்கள் இல்லாததால் தக்காளி செடிகளில் வாடல்நோய் ஏற்படும். மண்புழு உரம், பஞ்சகவ்யா அளிப்பதால் இந்த நோயை குறைத்து மண்ணை வளமாக்கலாம்.
வெளிர் மஞ்சள் நிற வளையங்கள் தக்காளி இலைகளை சுற்றிக்காணப்படுவது இலைக் கருகல் நோய். இவை தண்டுகளிலும் காணப்பட செடி கருகிவிடும். மண்புழு உரம், பஞ்சகவ்யா அளிப்பதால் மண் வளமாகும், மேலும் நோய்களையும் கட்டுப்படுத்தலாம்.
இயற்கை முறையில் நாமே வீட்டில் வளர்க்கும் நாட்டுத்தக்காளிகள் உடலுக்கும் இருதயத்திற்கும் ஆரோக்கியத்தைத்தரும். பல வியாதிகளுக்கு மருந்தாகவும் உள்ளது. இவற்றில் காயாக பச்சை நிறத்தில் இருக்கும் தக்காளி காய்களும் சத்துக்கள் அதிகம் கொண்டது. அன்றாடம் நமது வீட்டில் விளையும் இவ்வகை தக்காளிகளைக்கொண்டு சுவையான சத்தான மற்றும் மணமான உணவுகளை தயாரிக்கலாம்.
பொதுவாக இன்று கடைகளில் கிடைக்கும் தக்காளியின் தோல் கனமாகவும், ஒரே சிகப்பு நிறத்தில் ஆனால் காயாக இருக்கும், நீண்ட நாட்கள் வெளியில் வைத்தாலும் பழுக்காது. இவற்றால் உடலுக்கு பல கேடு உருவாகிறது.