அடுப்பு பற்ற வைக்காமல் / அடுப்பில்லாமல் தயாரிக்கப்படும் இயற்கை பச்சை உணவுப் பொருட்களில் முதன்மையானது தக்காளி. ஏழைகளின் அழகிய நண்பன் தக்காளி என்றால் அது மிகையாகாது. நார் இன்றி, கொட்டையின்றி, உறிக்க அவசியமின்றி சாப்பிட இதைவிட இனிமையான காய்கறி இல்லை.
தக்காளி புது உலகத்தாவரம்; தென்னமெரிக்காவில் கேட்பாரற்று இது வளர்ந்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கு மெக்சிகோவிலிருந்து கொண்டு போகப்பட்டது. உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. இப்போது இதன் சிறப்புக் காரணமாக உலகில் அதிகமாக வளர்க்கப்படும் மூன்றாவது செடி இனமாக உள்ளது.
தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி சத்துக்கள் சம அளவும் அதிகமான வைட்டமின் சியும், புரோட்டீன், கொழுப்பு, கால்சியம், கந்தகம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. இந்தச் சத்துகள் காயை விடப் பழத்தில்தான் பூரணமாக நிறைந்துள்ளன. தக்காளியை வேக வைக்காமல் பச்சையாகச் சாப்பிடும் போதே அழிவின்றி அத்தனை சத்துக்களும் கிடைக்கின்றன.
இதய நோய், ஆண்மைக் குறைவு, உடல் மெலிந்தவர்கள், மூளை உழைப்பு உள்ளவர்களும் இதனை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
தக்காளி தோல்
தக்காளிப் பழத்தின் சதையை விட இதன் தோலில் 20 மடங்குக்கும் மேல் சத்துகள் உள்ளன. தக்காளியை வைத்து செய்யப்படும் எந்தத் தயாரிப்பு, உணவிலும் தோலை நீக்காமல் செய்வது அவசியம்.
உடல் வெப்பத்தை தணிக்க
வெயில் காலத்தில் தக்காளியைச் சாறு பிழிந்து எலுமிச்சம் பழச்சாறுடன் நாட்டு சர்க்கரை / வெல்லம் சேர்த்துப் பருகினால் கடுமையான உடல் வெப்பம் தணியும்.
செரிமானமின்மையை போக்கும்
இரத்தத்தில் அமிலம் மிகுந்தால் உடல் தகிக்கும். செரிமானம் இன்மை, நெஞ்சுகரிப்பு ஏற்படும். இந்த தொந்தரவிற்கும் கல்லீரல், இரப்பை சம்மந்தப்பட்ட கோளாறுகளுக்கும் தக்காளி அருமையான மருந்தாகச் செயல்படும்.
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க
கண் பார்வை வளம் பெற, பல்லுறுதி பெற இரத்தத்தில் அணுக்கள் பெருகி இரத்த உற்பத்தி சீராக, சருமநோய் நிவாரணத்திற்கு, பொதுவாக நோய் வராமல் தடுக்கத் தக்காளி மிகவும் உதவும்.
தக்காளியைக் கொண்டு தக்காளி பழ ஜூஸ், காட்டுயானம் அரிசி தக்காளி சூப், சாமை அரிசி தக்காளி சாதம் என பல உணவுகளை தயாரிக்கலாம். அதேப்போல் தக்காளியை வீட்டிலேயே மிக எளிமையாக அதுவும் நாட்டு தக்காளியை எந்த இரசாயனம், பூச்சி கொல்லிகள், நச்சுக்களும் இல்லாமல் மாடியிலும்,தொட்டியிலும் என இருக்கும் இடத்தில் வளர்த்து பயன்படுத்தலாம்.வீட்டு தோட்டத்தினால் பல நனமைகளும் பயன்களும் உள்ளது.