பிரபஞ்சத்தில் உயிர் வாழ அத்தியாவசியமான ஒன்றான காற்றை இயற்கை எந்நேரமும் நம் அனுமதியின்றி நமக்கு அளித்து பாதுகாக்கிறது. அனைத்திற்கும் உரிமை கொண்டாடும் நாம் நமது மூச்சின் மீதே உரிமை இல்லாமல் இருக்கிறோம்.
காற்றுடன் சேர்ந்து திட திரவு உணவு, ஓய்வு, சூரிய ஒளி, பகுத்தறிவு என பலவற்றை நம் நலனுக்காக வகுத்து கொடுத்திருக்கிறது நம் சிறந்த படைப்பாளியான இந்த இயற்கை.
திட உணவு அவசியமானது
உயிரை பாதுகாக்க திட உணவு மிகவும் அவசியமானது. திட உணவின் தேவையை வெளிப்படுத்தும் விதமாக உடல் பசி என்னும் அறிகுறியை ஏற்படுத்துகிறது. பசி என்ற அறிவிப்பை அறிந்து உடலுக்கு உணவளிப்பது சிறந்த வாழ்வைத் தரும். அடிப்படை தேவைகளில் மிக முக்கியமான காற்றைப் பெற எந்த அறிவும் நமக்கு தேவை இல்லையானாலும் உடல் அதனை பெறுகிறது. ஆனால் திட உணவைப் பொறுத்த வரையில் பகுத்தறிவு மிகவும் முக்கியமானது. எதை உண்பது?, ஆற்றலை வெளிப்படுத்தும் உணவு எது?, எது நோயை விரட்டும் உணவு?, எது நம் உடலுக்கு ஏற்ற உணவு? என பகுத்து உண்ணக்கூடிய அறிவையும் நமக்கு அளித்திருக்கிறது.
என்ன தான் மனிதன் பிரம்மாண்ட படைப்பானாலும் கடிவாளமான மூச்சை தன் கையில் வைத்துக்கொண்டு சொற்பமான பசியையும், உணவையும் ஆசைக்கும் புத்திக்கும் இடையில் விட்டு விட்டதே இந்த உடல் உயிரின் இரகசியம்.
இன்றோ நாம் விளம்பரங்களை நம்பி பகுத்தறிவை இழந்து கொண்டிருக்கிறோம். எது நம் உடலுக்கு சரியான உணவு? என்று தேர்ந்தெடுக்கும் பக்குவத்தை அறியாத நிலையில் எல்லாவற்றையும் முயற்சிக்கிறோம். விளைவு உடல் நலக்குறைவு, உடல் பருமன், மன அமைதியின்மை.
உணவு என்றால் என்ன?
பரிணாமத்தின் சிறந்த நோக்கம் என்பது தாழ்த்த நிலையிலிருந்து உயர்ந்த நிலையை அடைவதே. ஒவ்வொரு உயிரினமும் தன்னிடம் உள்ள ஆற்றலை சீராக வெளிப்படுத்தவும், தமது அன்றாட செயல்களை செம்மையாக செய்யவும் துணையாக இருப்பதே உணவாகும். அதாவது உணவு என்பது ஆற்றலை உண்டாக்கும் பொருள் இல்லை, உணவு ஆற்றலை வெளிப்படுத்து பொருளாகும்.
அதாவது கண்ணுக்கு தெரியாத ஆற்றலே உயிர். இந்த உயிரின் நோக்கத்தை சீராகவும், ஆரோக்கியமாகவும் அடைய உயிரின் ஆற்றலை எளிதாக வெளிப்படுத்த உடல் துணைபுரியவே உணவு அவசியமாகிறது. உயிர் வாழ்விற்கு உடல் எவ்வளவு இன்றியமையாததோ அதைப்போலவே ஆரோக்கியமான இனிய வாழ்விற்கு சரியான நஞ்சில்லா உணவு மிக முக்கியமானது.
அது மட்டுமா அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகிறது. நாம் ஒவ்வொருவரும் பல பிரம்மாண்டங்களையும், நவீன தொழில்நுட்பத்தையும் பெற்றிருந்தும் குருடன் கையில் கிடைத்த சித்திரத்தைப் போல் உடல் சுகமில்லாத நிலையில் எதையும் நிம்மதியாகவும் அமைதியாகவும் அனுமதிக்க முடியாத நிலையில் உள்ளோம்.
மருந்துகளும் மருத்துவமும் எந்த அளவு உயர்ந்த பல கண்டுபிடிப்புகளைக் கண்டிருந்தாலும் மனிதன் சுறுசுறுப்பையும், ஆரோக்கியத்தையும் இழந்தே காணப்படுகிறான்.
டானிக்குகள் பெருக பெருக நம்முடைய ஜீரண ஆற்றல் குறைந்து சிதைந்து கொண்டே போகிறது. உணவுப் பொருட்கள் எந்த அளவு மிருதுவாக உள்ளதோ அந்த அளவு நமது பற்கள் வலுவிழந்து காணப்படுகிறது.
சீரான வாழ்க்கை பழக்கம் அவசியம்
ஊரெல்லாம் வண்ண விளக்குகள் பல ஒளிர்கிறது ஆனால் பார்வைக் கோளாறு என்பது ஒருபக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. உடல் பருமன், உடல் நோய்களைப் பற்றி அனைவரிடமும் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் வாயையும் கட்டுப்படுத்துவதில்லை, நோயை சரிசெய்ய எந்த தீவிர முயற்சியும் எடுக்க வில்லை. முயற்சி என்பது மருத்துவரையும் மருத்துவத்தையும் பார்ப்பதில்லை சீரான உணவு முறையையும் சீரான வாழ்க்கை பழக்கங்களையும் மேற்கொள்வது.
பசிக்காமல், பற்களால் கடிக்காமல் செரிக்காத திட உணவுகளை அளவும் அரியாது உண்கின்றோம். மற்றொரு பக்கம் உடல் எடை கூடுகிறது என்று மேலோட்டமாக வருந்துகிறோம். காமெடி பன்னுரியான்னும், common sense இல்லையான்னும் விளையாட்டாக கேட்கவே தோன்றுகிறது இதைபார்க்க… இந்த நிலைமையில் இருக்கிறது இன்றைய உணவுப் பழக்கம்.
பார்க்கும் இடமெல்லாம் நமது நோயைப்பற்றி கேட்டும், படித்தும் பல செய்திகளை தெரிந்து கொள்கிறோம். பின்பற்றினாலே பலனை அனுபவிக்க முடியும்…
உணவு பழக்கம் இன்று
இன்றைய உணவு பழக்கம் எவ்வாறு இருக்கிறது என்றால்
- முதலில் பசி உடலில் இல்லை.. அல்லது பசிக்க நாம் விடுவதில்லை.
- அடுத்தது பற்கள் இருந்தும் ஏன் பற்கள் இருக்கிறது என்று சற்றும் யோசிக்காமல் மெல்லப்படாத உணவை உள்ளே அனுப்புவது
- முன் சென்ற உணவே செரிக்காது புளித்த நிலையில் இருக்க மேலும் உணவை திணிக்க உடல் படும் பாடே கோபம், புரியாத மன அழுத்தம், வெறுப்பு, சோம்பேறித்தனம், அதிக தூக்கம், டென்ஷன், பிரஷர் என பலவகையில் வெளிப்படுத்த இனம் தெரியாத ஏக்கம் தொடர்கிறது.
இந்த நிலையை சரிசெய்ய அடுத்ததாக நம் எடுக்கும் பயணம் மருத்துவம், மருத்துவர், ஆன்மிகம், புரட்சி, பயிற்சி என பல.
எங்கு தொலைத்தோமோ அங்கு தான் தேட வேண்டும். அனைத்தையும் தொலைத்தது அன்றாடம் 3 முதல் 4 முறை உண்ணும் உணவில், தேடுவதோ பல இடங்களில்.
Fridge, Ac, Cooker முதல் bike car என அனைத்தின் தொழில் நுட்பத்தைப் பற்றியும் ஆராய்ந்த பின் விலைக்கு வாங்கி ஒவ்வொரு கால கட்டத்திற்கும் தகுந்தாற்போல் service, maintenance செய்கிறோம். இந்த service மற்றும் maintenance நம் உடலுக்கும் சிறிய அளவில் செய்ய உடலும் புத்துணர்வுடன் இருக்கும்.
நாம் அனைவரும் நம் மூதாதையர்களில் வீரியத்தையும், பழக்க வழக்கங்களையும் இழந்து வருகிறோம். Basement strong காக இல்லாமல் என்னதான் building கட்டினாலும் பிரயோஜனம் இல்லை.
இன்று நம் பாரம்பரிய உணவு தானியங்களை இழந்து நவீன உணவை (eg seedless) உட்கொள்ள நவீன வாழ்வு வாழும் நமக்கு குழந்தை பேறும் seed இல்லாமல் போகிறது. அதோடு இரசாயனங்கள் கொண்ட நிறமூட்டப்பட்ட, சுவையூட்டப்பட்ட உணவுகளால் உடலும் உள்ளமும் சூடானதுடன் நமது செல்கள் அழுகி அழிய தொடங்கிவிட்டது.
சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை மலச்சிக்கல், சிறுநீர் கற்கள், தீராத சளி, எடை கூடுதல் போன்ற தொந்தரவுகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
அடிப்படை ஆரோக்கியத்தை மீட்க ஒரு சிறந்த வழி.. நம் திட உணவு முறையை மாற்றுவதானால் பெறலாம். எது ஆரோக்கியம் தரும் திட உணவு என்று அடுத்த பகுதியில் பார்க்கலாம்.