கோடையை சமாளிக்க எளிய வழிகள் / Summer Tips for Health

ஒவ்வொரு ஆண்டும் மழை குறைந்து கொண்டே போகிறது, வெயிலோ உச்சத்தை நெருங்கிக் கொண்டே இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் அவற்றை தாக்குப்பிடித்து சமாளித்து கடந்துதான் செல்ல வேண்டும். வெயில் அதிகரிக்க அதிகரிக்க நம் சுற்றுச்சூழல் மட்டும் வெயிலின் தாக்கத்தை வெளிப்படுத்துவதில்லை நம் உடலும் வெயிலின் தாக்கத்தை அவ்வப்பொழுது வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. 

வியர்வை, நாவறட்சி, சோர்வு, தாகம் போன்றவை வெளிப்படையாக இருக்கும் அறிகுறிகளாக இருந்தாலும், உடலில் இருக்கும் உள்ளுறுப்புகளும், நம் செல்களும் உடல் வெப்பத்தையும், தண்ணீர் பற்றாக்குறையையும் மறைமுகமாக பல ரூபங்களில் வேறு வழிகளில் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. பல நேரங்களில்  அன்றாடம் வேலை பளு வாழ்வியல் சிரமங்கள் போன்றவற்றின் காரணமாக உடலின் மொழியை புரிந்து கொண்டும், புரிந்துகொள்ளாமலும் நேரமின்மை காரணமாக  அவற்றை உதாசீன படுத்துகிறோம். 

அப்படி உதாசீனப்படுத்தும் பொழுது உடனடியாக பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை என்றாலும் காலப்போக்கில் உயிரைக் கொல்லும் அளவிற்கு பிரச்சனைகள் பூதாகரமாக வெடிக்க தொடங்கும். அப்படி என்னென்ன பிரச்சனைகள் வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் என்கிறீர்களா?

தொந்தரவுகள்

வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் தொந்தரவுகள் சிலவற்றைப் பார்ப்போம்.

நீர் குறைபாடு அதாவது நீர் சத்து குறைபாடு ஏற்படுவதால் உடலில் ஜீரண சக்தி குறையும், மலச்சிக்கல் உருவாகும், மேலும் வயிற்றின்  அமிலத்தன்மையின் அளவு கூடும். இதனால் உட்கொள்ளப்படும் உணவு சீராக ஜீரணிக்காமல் பல உபாதைகளை ஏற்படுத்தும்.

மனித உடம்பு 70 சதவீதம் நீராலானது. இந்த நீரின் அளவு கோடைகாலத்தில் உஷ்ணத்தால் குறையும் பொழுது சீரான ரத்த ஓட்டம் தடைபடும். காரணம் ரத்தத்தில் நீரின் பங்கு 90%. மேலும் நீர்சத்து குறையும் பொழுது நீரைக்கொண்டு இயங்கக்கூடிய சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகும். சிறுநீரகம் பாதிக்கப்படும் போது சிறுநீரகமும் மற்ற உறுப்புகளும் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் சிரமப்படும். கழிவுகளின் தேக்கம் அதிகரிக்கும்.

கழிவுகள் என்பது உடலில் இருக்கும் தேவையில்லாத நச்சுக்கள் மட்டுமல்லாமல் உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய தேவை இல்லாத பொருட்களுமாகும்.

கழிவுகள் என்பது உடலில் இருக்கும் தேவையில்லாத நச்சுக்கள் மட்டுமல்லாமல் உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய தேவை இல்லாத பொருட்களுமாகும்.

நீர் குறைபாட்டால் உடலிலுள்ள தோல்கள் வறண்டு போகும். கலையற்று சருமம் தோய்வடைவதுடன் தோலில் சுருக்கங்கள் ஏற்படும். உடலின் பொலிவு பாதிக்கப்படும். தலையில் அரிப்பு, பொடுகு, புண், தேமல் போன்றவை அதிகரிக்கும். 

உடலில் நீர் சத்து குறைவதால் கழிவுகள் வெளியேறாமல் தேங்கும் நிலை உருவாகும். இதனால் உடல் பருமன், இருதய நோய், சர்க்கரை வியாதி போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. நீர் சத்து குறைவதால் மூட்டு வலி, முழங்கால் வலி ஏற்படும். மேலும்  செல்களுக்குப் போதுமான அளவு நீர் கிடைக்காத பொழுது நரம்புகள், மூளை பாதிக்கப்படுவதுடன் நீரில் இருக்கும் கிடைக்கும் உயிர் சக்தி குறைவதால் பலவகையான தலைவலி, தலைபாரம், பேதி ஏற்படும். உடலின் உஷ்ணம் அதிகரிக்கும். முகம் தோல் போன்ற இடங்களில் கட்டிகள், தேமல், வேர்க்குரு போன்றவை ஏற்படும். வயிற்று வலி, அடிவயிற்று வலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்ற தொந்தரவுகளாலும் அவதிகள் ஏற்படும்.

தொடர்ந்து ஏற்படும் இந்தப் பிரச்சினைகளால் சிறுநீரக பாதிப்பு, சிறுநீரக கல், ரத்த சோகை மட்டுமல்லாமல் உடல் செயல்பாட்டிற்கு போதுமான சத்துக்கள் கிடைக்காததாலும் பல நேரங்களில் உறுப்பு செயலிழப்பு, உடல் செயலிழப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இவற்றில் இருந்து வெளி வரவும் கோடையை சமாளிக்கவும் சில எளிய வழிமுறைகளை இனி  பார்ப்போம்.

கோடையை சமாளிக்க எளிய வழிமுறைகள்

  • வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் அவசியம். உடல் உஷ்ணத்தையும், உடல் கழிவுகளையும் வெளியேற்றி எலும்புகளுக்கு பலமளிக்கும்.
  • காலை எழுந்ததும் பாரம்பரிய சிகப்பரிசியில் தயாரித்த பழையசாதம் அல்லது நீராகாரம், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் போன்ற சத்துக்கள் நிறைந்த எளிமையாக ஜீரணிக்கக்கூடிய நம் சீதோஷண நிலைக்கும் நம் தட்பவெப்ப நிலைக்கும் ஏற்ற உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்தது.

  • இரவு ஏதேனும் சத்தான கஞ்சியை எடுத்துக்கொள்வதால் உடலுறுப்புகள், ஜீரணமண்டலம் ஆகியவை பலம்பெறும். எளிதாக ஜீரணமாகும் இவை உடலுக்கு தேவையான நீர்சத்தினை அளித்து உடலின் உஷ்ணத்தையும் குறைக்கும். 
  • டீ, காபி அறவே கூடாது. மூலிகை டீ, மூலிகை காபி எடுத்துக்கொள்ளலாம். 
  • ஒரு கையளவு வெந்தயத்தை முதல் நாளே ஊற வைத்து அதனை மறுநாள் காலையில் எடுத்துக் கொள்வது பல வகையான நோய்களில் இருந்து மட்டுமல்லாமல் உடலை குளிர்ச்சியூட்டி உடலுக்குத் தேவையான கால்சியம், புரதம், தாது உப்பு மற்றும் வைட்டமின் சத்துக்களையும்  அளிக்கவல்லது.

  • வெட்டிவேர் சேர்த்த மண்பானை தண்ணீர் சிறந்தது. செல்லும் இடங்களுக்கு கூடவே தண்ணீரையும் எடுத்து செல்வது அவசியம். வெயிலில் அலையக்கூடிய பணியில் இருப்பவர்கள் கையில் நீராகாரத்தை வைத்துக் கொள்வது சிறந்தது. அவ்வப்பொழுது பருகிக்கொள்ளலாம்.
  • (ஏசியில் பணிபுரிபவர்கள்) குளிர்சாதன அறைகளுக்குள் பணிபுரிபவர்கள் உடலின் தாகத்தை அறிந்து கொள்ள முடியாது. உடலில் படும் குளிர் மேலும் உடல் உறுப்புகளை நம்மை அறியாமல் சூடாகும். அதனால் அருகில் நீரை வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது நீர் அருந்துவது சிறந்தது. அந்த நீரில் சீரகம், வெந்தயம், துளசி என ஏதேனும் ஒரு மூலிகையை சேர்த்து அருந்துவது மேலும் உடலுக்கு குளிர்ச்சியையும் வலுவையும் அளிக்கும். 

  • ஏதேனும் ஒரு பழச்சாறு அல்லது பழ உணவுகளை அன்றாடம் எடுத்துக் கொள்வது சிறந்தது.
  • வெண்ணெய் நீக்கிய மோரை அன்றாடம் எடுத்துக் கொள்வது அவசியம். இதனால் ஜீரணத்திற்கு தேவையான நுண்ணுயிர்கள் கிடைப்பதுடன் உடலுக்கு தேவையான குளிர்ச்சியையும் மற்றும் சத்துகளையும் எளிதாக பெறலாம். 

  • இளம் நிறங்களில் / வெளிர் நிறங்களில் இருக்கும் இருக்கமில்லாத பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இது உதவும்
  • அசைவ உணவுகள், காரசாரமான உணவுகள், கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகள் ஆகியவற்றை தவிர்ப்பது அவசியம். இவை அனைத்துமே உடலில் இருக்கும் உஷ்ணத்தை அதிகரிக்கும். இதனால் உள்ளுறுப்புகள் வரண்டு போவதுடன் ஜீரண மண்டலமும் பாதிப்புக்குள்ளாக்கும்.

  • இரவு உறக்கம் கண்டிப்பாக குளிர்சாதன அறைக்குள் இருக்கக் கூடாது. பெரும்பாலானவர்கள் பகலில் குளிர்சாதன அறைகளுக்குள் தான் வேலைசெய்கின்றனர். இதனை தவிர்க்க முடியாது. அதனால் இரவு உறக்கம் காற்றோட்டமுள்ள இடத்தில் தான் இருக்க வேண்டும். ஜன்னல்களை எதிரெதிரே திறந்து வைத்துக் கொண்டு தூங்கும் பொழுது பின்னிரவில் ஏற்படும் குளிர்ந்த காற்று உடலின் உஷ்ணத்தை குறைத்து உடலைக் குளிரவைக்கும்.  
  • புளியை தவிர்த்து கொடம்புளியில் தயாரித்த பானகம், கற்றாழை சாறு, இளநீர், சாத்துக்குடி சாறு, வெள்ளரி, தர்பூசணி, புதினா, மல்லி, கீரணி போன்ற பழங்களையும் பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய் போன்ற நீர்வகை காய்களையும் பயன்படுத்துவது சிறந்தது.
  • காலை வெயிலை அறுவடை செய்துக்கொண்டு மற்ற நேரங்களில் வெயிலை தவிர்ப்பது சிறந்தது.

  • செம்பருத்தி டீ, கொய்யா இலை டீ, எலுமிச்சை தோல் தேநீர் போன்றவற்றை அருந்துவதால் உடல் குளிர்ச்சியடைவதோடு உடலுக்கு தேவையான நோய்யெதிர்ப்பு சத்துக்களும் அதிகரிக்கும். 
  • குளிக்க இரசாயன சோப்புகள் பயன்படுத்துவதால் சருமம் பாதிக்கப்படும். அதனால் மூலிகை குளியல் பொடி பயன்படுத்துவது நல்லது. இரசாயனங்கள் நிறைந்த வாசனை திரவங்களை கோடைகாலங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவற்றால் உடலில் அரிப்புகள், கட்டிகள் அதிகரிக்கும்.
  • வயிற்றில் அல்லது அடிவயிற்றில் ஈரத்துணிபட்டி, மண்பட்டி ஆகியவற்றை மாதம் ஒருமுறை எடுத்துக்கொள்வதால் உள்ளுறுப்புகள் குளிர்வதுடன் உடலுக்கு தேவையான குளுர்ச்சியும் கிடைக்கும், உடல் கழிவுகள் நீங்கும்.

இவற்றையெல்லாம் பின்பற்றினால் கோடையை மட்டுமல்ல வாழ்க்கையையும் குளுகுளுவென்று ஆரோக்கியமாக கொண்டாடலாம்.