Solanum trilobatum; தூதுவளை
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் பயன்படும் ஒரு மூலிகை செடிதான் இந்த தூதுவளை. இதன் இலை, காய், வேர் என அனைத்தும் மருத்துவகுணங்கள் கொண்டது. பல நோய்களுக்கு ஆதாரமாக இருக்கும் சளி, இருமல் போன்றவைகளுக்கு சிறந்த மருந்தாக இருப்பது நமது தூதுவளை இலைகள். இது ஒரு மூலிகை மட்டுமல்ல கீரை வகையை சேர்ந்ததும் தான்.
தூதுவளைக் கீரை அதிக மருத்துவ பயன் கொண்ட ஒரு கீரை. ஆனால் இதன் மருத்துவப் பயன் தெரியாது பலர் இதனைப் பயன்படுத்துவது இல்லை. எந்த பரமரிப்புமில்லாமல் சாலை ஓரங்களிலும், புதர்கள் மரங்களைப் பற்றியும் படரக்கூடிய ஓர் கீரை இது. வீட்டிலேயே எளிமையாகயும் இந்த தூதுவளைக் கீரையை வளர்க்கலாம்.
கொடியாகப் படர்ந்து இலைகள் முட்கள் கொண்டு இருக்கும். இதன் பூக்கள் பொதுவாக கத்தரிப்பூ நிறத்தில் இருக்கும். இதில் வெண் நிற பூக்களும் உள்ளது. அதாவது வெள்ளை நிற தூதுவளையும் உள்ளது. பொதுவாக பார்க்கக்கூடியது கத்தரிப்பூ நிறத்தில் இருக்கக்கூடிய தூதுவளைக் கீரையே. இதன் காய்கள் சுண்டைக்காய் போல இருக்கும். காய்கள் பழுத்தால் சிவப்பாக மாறிவிடும். கீரையின் அனைத்து பாகங்களுமே உடல் நலத்திற்கு பாதுகாப்பு அளிக்கக் கூடியது.
தூதுவளை காய்
தூதுவளைக் காயை பதார்த்தங்களுடன் சேர்த்து உண்ணலாம் அல்லது தயிரில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து வற்றலாகவும் வறுத்தும் சாப்பிடலாம். கீரையில் உள்ள அனைத்து சத்துக்களுமே இந்த காயிலும் உள்ளது.
தூதுவளை சட்னி
தூதுவளை காய்கள் அல்லது இலைகளை நெய்யில் வதக்கி உப்பு, மிளகு, மிளகாய், பூண்டு சேர்த்து சட்னியாக அரைத்து எண்ணெயில் தாளித்துக் உணவுடன் சேர்த்து உண்டால் உடலில் உள்ள எல்லா விதமான குத்தல் குடைச்சலும் நீங்கிவிடும்.
ஆஸ்துமா நீங்க
இலைகளைப் பறித்து நன்றாக இடித்து சாறெடுத்து அதில் சம அளவு தேன் சேர்த்த காலையில் வெறும் வயிற்றில் இரண்டு மாத தொடர்ந்து சாப்பிட்டால் சயரோகம், ஆஸ்துமா, ஈசினோபீலியா போன்ற நோய்கள் நீங்கிவிடும்.
குழந்தைகளுக்கு தூதுவளை
ஒரு நோயை ஆரம்பத்திலேயே வளரவிடாமல் கட்டுப்படுத்த இந்த மூலிகை பேருதவியாக இருக்கும். குழந்தைகள் அன்றாடம் ஒரு இலையினை சிறிது பொட்டுக்கடலை வைத்து மடித்து விளையாட்டாக (முள் குத்தாமல் எடுத்துவிட்டு மடிக்கவும்) உண்டுவர நோய்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும், பெரியவர்களுக்கு பல பல மூச்சுசம்பந்தமான நோய்கள் காணாமல் போகும்.
உடல் வலி
ப்ளூ காய்ச்சல், மலேரியா காய்ச்சல், மூட்டு வலி, உடல் வலி, மலச்சிக்கல் ஆகியவை உண்டானால் கீரையுடன் சில மருத்துவ மூலிகைகள், முசுமுசுக்கை, கண்டங் கத்திரி ஆகியவைகளை கலந்து கஷாயம் செய்து உண்ண விரைவில் இந்த தொந்தரவுகள் அகன்றுவிடும்.
ஆண்மை குறைவு நீங்க
தூதுவளையின் பூவை பறித்து வந்து இரவு தூங்க செல்வதற்கு முன் பசுவின் பாலில் போட்டு காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் ஆண்மை குறைவு நீங்கி வீரியம் பெறும்.
உடல் தேற
தீராத இருமலுடன் காய்ச்சல் உண்டாகி, கபம், கட்டி, எலும்பு உருக்குவது போல உடம்பு நாளுக்கு நாள் இளைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த முறையில் கஷாயம் செய்து அருந்த நல்ல பலன் கிடைக்கும். சிறிய சட்டியில் இரண்டு கையளவு கீரையைப் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்சி ஒரு டம்ளர் கஷாயத்தில் சர்க்கரை, பால் கலந்து தினசரி காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் குடித்து வந்தால் நோய் அகன்று விடும்.