அகன்ற இலைகளையுடைய செம்பருத்தி இனத்தை சேர்ந்தது இந்த துத்தி செடி. இந்த துத்தி இலைகள் காம்புகள் நீளமாக இருக்கும். இலைக் காம்புகளின் இடுக்கில் பூப்பூக்கும்.
பூக்கள் மஞ்சள் நிறமாகத் தோற்றமளிக்கும். சில வகைத் துத்தியின் பூக்கள் மெல்லிய மஞ்சள் நிறத்தோடு மையத்தில் கருஞ்சிவப்பாக இருக்கும். துத்தியின் வேர், இலை, பூ, வேர், விதை மருந்தாகப் பயன்படக்கூடியது.
துத்தி விதைகள்
பூப்பூத்து சிறிது நேரமான பிறகு இப்பூக்கள் இளஞ்சிவப்பு நிறமாக மாறுவதும் உண்டு. இதன் விதை தட்டையாக இருக்கும். முந்திரிப்பருப்பைப் போன்று வடிவம் பெற்றிருக்கும். இவ்விதைகள் கரும்பழுப்பு நிறமானவை.
துத்தி கீரை உணவு
துத்தியின் இளம் கீரைகள் உண்ணும் உணவாகப் பயன்படுகிறது. இக்கீரையுடன் பருப்பினை சேர்த்து கடையலாகவும், பொரியலாகவும் செய்த மதிய உணவுடன் சேர்த்து உண்பது நம் நாட்டு வழக்கம் ஆகும். இந்தக் கீரையைப் பாசிப்பயறு அல்லது உடைத்த பாசிப் பருப்புடன் சேர்த்து வேகவைத்து கடைந்து அன்னத்துடன் கூட்டி உண்ணலாம்.
கீரையை சமைக்கும்போது புளி சேர்க்காமல் சமைப்பது நல்லது. பொதுவாக இக்கீரையை உணவில் சேர்க்கும் போது மற்ற கீரைகளை உணவுடன் சேர்த்துக் கொள்ளும் வழக்கமில்லை. இக்கீரையை உணவாக சேர்க்கும் பொழுது பகல் உணவில் ஒரு வேளை மட்டும் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது.
இந்த கீரையும் இதன் கொழுந்தும் துவையல் செய்து சாப்பிட சுவையாக இருக்கும். இதனைக் கொண்டு தோசை செய்தும் உண்ணலாம். பல்வேறு வகையான கறி வகைகள் செய்யவும் இக்கீரை பயன்படுகிறது.
துத்தி கீரை சத்துக்கள்
இந்த கீரையில் தண்ணீர் சத்து 75 விழுக்காடு உள்ளது. 6.7 விழுக்காடு புரதச்சத்தும், ஒரு விழுக்காடு கொழுப்புச் சத்தும், 4.4 விழுக்காடு தாது உப்புகளும், 7 விழுக்காடு மாவுச் சத்தும் இருக்கிறது.
இந்த கீரை 87 கலோரி வெப்ப சக்தியைக் அளிக்க வல்லது. 100 கிராம் கீரையில் 550 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்தும் 117 மில்லி கிராம் மணிச்சத்தும், 11.3 மில்லி கிராம் இரும்புச் சத்தும் உள்ளது.
மூல நோய்
மூல வியாதியை கண்டிப்பதில் இணையற்றது இந்த துத்தி கீரை. மூலம், வாய்ப்புண், வயிற்றுப்புண் இவ்வியதிகளுக்கு துத்தி இலையை சமைத்து புளி சேர்க்காமல் பகல் உணவில் மட்டும் சேர்த்து சாப்பிட வேண்டும்.
துத்தி இலையை சிற்றாமணக்கு எண்ணெய் சிறிது விட்டு வதக்கி மல நோய் உள்ளவர்களுக்கு ஆசனத்தில் வைத்துக்கட்ட இரண்டு அல்லது மூன்று வேளையில் கடுப்பு நீங்கும்.
துத்தி இலையை ஆமணக்கு எண்ணெயில் வதக்கிக் கட்ட, கட்டி, விரணமுளைகளும், கிருமி விரணமும், மூலநோயும் நிவர்த்தியடையும். வெப்பத்தால் உண்டான கட்டிகளுக்கு இக்கீரையை அரைத்து வைத்துக்கட்ட கட்டி உடைந்து கீழும் மூளையும் வெளிப்படும்.
பச்சரிசி அல்லது துவரம் பருப்போடு சேர்த்து சமைக்கப்பட்ட கீரையைச் சோற்றுடன் சேர்த்து உண்ண மூலாதாரத்தில் உள்ள வாய்வைக் கண்டிக்கும், மலத்தை இளக்கும்.
சுளுக்கு
கடுமையான சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்திக் கீரையை மேலிருந்து கீழ் நோக்கி மெதுவாகத் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து பிறகு வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஐந்து நாட்கள் செய்து வர கடுமையான சுளுக்கு நீங்கும்.
எலும்புகளுக்கு
முறிந்த எலும்பை ஒன்று சேர்ந்து இந்த இலையை அரைத்து மேலே கனமாகப் பூசவேண்டும். பிறகு அதன் மீது துணியைச் சுற்றி அசையாமல் இருக்கும் பொருட்டு மூங்கில் பத்தை வைத்துக் கட்ட எலும்பின் முறிவு கூடிவிடும்.
வலி
துத்தி இலையைக் கொதிக்கின்ற தண்ணீரில் போட்டு வேக வைத்து அந்த நீரில் துணியைத் தேய்த்துக் பிழிந்து ஒத்தடம் கொடுக்க வலி தீரும்.
குழந்தைகளுக்கு
கீரையை காய வைத்து சிறிது நீர் விட்டு அரைத்து குழந்தைகளுக்கு உண்டாகும் கபாலக் கரப்பானுக்குப் போடக் குணமாகும். இலை கசாயத்தினால் வாய்கொப்பளிக்க பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் நோய்கள் நீங்கும்.
இலையை எந்த ரூபத்தில் உண்டாலும் வெப்பத்தால் உண்டாகும் எல்லா நோய்களுக்கும் சிறந்த மருந்தாக இது இருக்கும்.
மலச்சிக்கல், ஆசனக்கடுப்பு
துத்தி இலைச்சாறும் நெய்யும் சேர்த்து உண்ணப் பித்தத்தால் உண்டாகும் பேதி குணமாகும். துத்திக் கீரையைக் கசாயமிட்டுப் பாலும் சர்க்கரையும் சேர்த்து உட்கொண்டால் மலச்சிக்கல், ஆசனக்கடுப்பு, மேகச்சூடு முதலியன தணியும்.
இக்கீரையின் சாற்றுடன் பச்சரிசி மரக்கூட்டிக் களி கிண்டி சிலந்தி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட கட்டி பழுத்து உடையும்.