தும்பை கீரை – நமது கீரை அறிவோம்

தும்பை செடி ஒரு கீரை வகையை சேர்ந்த சிறு செடி. மழை காலங்களில் எல்லா இடங்களிலும் காணப்படும் இந்த தும்பை மற்ற காலங்களிலும் ஈரமுள்ள இடங்களில் தானாக வளரக்கூடியது. இலை, பூ ஆகியவை மருத்துவப் பயனுடையவை. தும்பை கீரை எதிர் அடுக்குகளில் அமைந்த கூர்மையான நீண்ட கரும்பச்சை இலைகளைக் கொண்டது. செந்நிற மலர்களை உடையது.

குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய வயிற்றுக் கோளாறுகளுக்கு தும்பை இலை மிகவும் பயன் தரும் மருந்துப் பொருளாகும்.

தும்பை இலைச் சாறுடன் உத்தாமணி இலை சாறை கலந்து 4 துளிகள் எடுத்துக் கொண்டு அத்துடன் சிறிதளவு தேன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி தோன்றக் கூடிய மாந்தம், பேதி போன்ற வயிற்றுக் கோளாறுகள் உடனே விலகும்.

நான்கு அவுன்ஸ் நீரில் கொஞ்சம் தும்பை பூக்களைப் போட்டு இரண்டு அவுன்ஸ் ஆகும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி அளவு தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட சீதளம் காரணமாகத் தோன்றும் காய்ச்சல்கள், அதிதாகம், கண் தொடர்பான நோய்கள் அகலும்.

காய்ச்சல் கண்ட சிலருக்கு கண் வலியும் தலைவலியும் தோன்றுவதுண்டு. 10 தும்பை பூக்களை எடுத்து தாய் பாலில் ஊறவைத்து மெல்லியத் துணியில் நனைத்து கண்களை மூடி அதன் மேலும் நெற்றியிலும் வைக்க வேண்டும். கண்களில் இரண்டிரண்டு துளிகள் விடலாம். இதனால் கண்வலி, தலைவலி நீங்குவதோடு தலைகணம், மயக்கம், ஜலதோஷம போன்ற பிணிகளும் நீங்கும்.

தும்பை பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி முழுகத் தலைபாரம் நீரேற்றம் தீரும்.