உருத்திரச்சடை, பச்சை சப்ஜா, திருநீற்றுப்பச்சை, விபூதிபச்சிலை, பச்சபத்திரி, திருநீத்துப்பத்திரி போன்ற வேறு பெயர்கள் இதற்கு உள்ளன. முற்காலங்களில் சில பகுதிகளில், திருநீறு தயாரிப்பில் இதன் சாம்பல் சேர்க்கப்பட்டதால் ‘திருநீற்றுப்’பச்சிலை எனும் பெயர் உருவாகியிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
செறிந்த மணமுடையை இலைகளைக் கொண்டிருக்கும் சிறுசெடியினம். வெளிறிய கருஞ்சிவப்பு மலர்களைக் கொண்டிருக்ககூடியது. தென் தமிழகத்தில் அதிகமாக வளர்க்கப்படும் ஒரு மூலிகை இது. இதன் இலைகள், விதை ஆகியவை மருத்துவகுணம் கொண்டவை.
இதன் தாவரவியல் பெயர் ‘ஆஸிமம் பேசிலிகம்’ (Ocimum basilicum) எனும் திருநீற்றுப் பச்சிலை, லாமியேசியே (Lamiaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. லினாலூல் (Linalool), யுஜெனால் (Eugenol), ஜெரானியால் (Geraniol) ஆகிய தாவர வேதிப் பொருட்கள் இதில் இருக்கின்றன. இனிப்புச் சுவையுடைய இதன் விதைகள், ‘சப்ஜா’ விதைகள் (Sabja Seeds) என்று பரவலாக அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் கார்ப்புச் சுவை கொண்டதாகவும் உள்ளது.
சகல விதமான வியாதிகளுக்கு ஒரு நல்ல மருந்து இது. குறிப்பாக ரத்த வாந்தி, கப வாந்திக்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகை இது. இந்தப் பச்சிலையின் சாறெடுத்து சுடுநீரில் கலந்து கொடுக்கலாம். கஷாயம் செய்தும் கொடுக்கலாம்.
பொதுவாக முகத்திலும் மிருதுவான தோல் இருக்கக்கூடிய உறுப்புகளில் விஷத் தன்மை வாய்ந்த பருக்கள் தோன்றுவதைக் பார்த்திருப்போம். தெரிந்தோ தெரியாமலோ நகத்தால் கிள்ளி விட்டால் அது புரையோடி சிழ் வைத்து சில சமயங்களில் உயிராபத்தை கூட ஏற்படுத்தும். இந்த விஷப் பருக்கள் தோன்றினால் யாரும் கவலைப் படத் தேவையில்லை.
திருநீற்றுப் பச்சிலையைக் கசக்கி சாறெடுத்து அந்தச் சாற்றோடு வசம்பு சேர்த்து நன்கு அரைத்து விஷப் பருக்கள் மீது மூன்று வேளை தடவினால் போதும், பரு காய்ந்து கொட்டிவிடும். இதன் இலைகளை அரைத்துப் பூசுவதால் உடலில் ஏற்படும் கட்டிகளும் மறையும். இதன் இலைகளைக் கசக்கி உடலில் பூசிக்கொள்ள கொசுக்கள் நெருங்காது.
இதனை உடலில் பூசுவதால் தேமல், படை போன்ற தோல் நோய்கள் விரைவில் அகலும். மணமும் நல்ல சுவையும் நிறைந்த இந்த இலைகளை நிழலில் உலர்த்தி ஒரு தேநீர் தயாரித்து பருக உடல் புத்துணர்வடையும். காய்ச்சலுக்கு நல்ல மருந்தாகவும் இருக்கும்.
வாய்க் கசப்பு இருக்கும்போது, இதன் இலை ஊறிய குடிநீரைக் கொண்டு வாய்கொப்பளிக்க, கசப்பு மறைந்து வாய் மணக்கும். மணம் நிறைந்த இந்த இலைகளை நுகர்ந்தாலே போதும் தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மை போன்ற தொந்தரவுகள் அகலும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இந்த இலைகளை இரவு தூங்க செல்வதற்கு முன் நுகர்ந்துவிட்டு படுக்க நல்ல தூக்கம் வரும்.
நல்ல நறுமணம் மிக்க இதன் இலைகளை நீரில் ஊறவைத்து குளிக்க உடல் நறுமணம் கூடும். குளியல் பொடி கூட தேவையில்லை. இதன் இலைசாறினையும் தேனையும் சமப்பங்கு கலந்து 30 மிலி பருக மார்புவலி, மேல்சுவாசம், இருமல், வயிற்று வாயு, கப நோய்கள், செரிமானக் கோளாறுகள் தீரும்.
Sabja Seeds / திருநீற்றுப் பச்சிலை விதை
இதன் விதைகளைச் சுமார் இரண்டு மூன்று மணி நேரம் நீரில் ஊறவைத்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து சுவைமிக்க மருத்துவ பானத்தைத் தயாரிக்கலாம்.
வயிற்று வலி, கண் எரிச்சல், சிறுநீர் அடைப்பு, சிறுநீர் எரிச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும்போது, பனங்கற்கண்டு சேர்த்து சப்ஜா பானத்தைப் பருக, சுவையோடு விரைந்த நிவாரணமும் கிடைக்கும். மலத்தை இலக்கி வெளியேற்றவும் உதவுகிறது.
இதன் விதைகளை சுமார் இரண்டு மூன்று மணி நேரம் நீரில் ஊறவைத்து பருக வயிற்றுக்கடுப்பு, இரத்தக்கழிச்சல், நீர் எரிச்சல், வெட்டை தீரும்.
- உடலில் ஏற்படும் வியர்வையை பெருக்கக்கூடிய தன்மைகொண்டதாகவும், தாது வெப்பை அகற்றக் கூடியதாகவும் உடலினை தேற்றும் மருந்தாகவும் செயல்படகூடியதாகவும் உள்ளது.
- புற்றுநோய் செல்கள் வேகமாகப் பரவுவதைத் தடுக்கும் ஆற்றல் இதற்கு இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.
- இலையை அப்படியே வாயில் மெல்லுவதால் வாய்வேக்காடு தீரும்.
- அன்றாடம் சமையலில் இந்த திருநீற்றுப் பச்சிலையின் சாறினை சில சொட்டுக்கள் சேர்ப்பதால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும்.
- மற்ற கீரைகளுடனும் இதன் இலைகள் ஒன்றிரண்டை சேர்த்து நல்ல மணமான சுவையான கீரை உணவு கிடைக்கும்.
- வாத நோய்களுக்கான தீர்வாக இதிலிருந்து எடுக்கப்படும் வேதிப்பொருள் அமையும் என்கிறது ஓர் ஆய்வு.
- இதன் விதைகளுக்கு வலி நிவாரண தன்மை உண்டு. பிரசவத்துக்குப்பின் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த, இதன் விதைகள் மருந்தாகப் பயன்படுகின்றன.
- சுகப்பிரசவம் ஏற்பட இதன் இலைகளை மைய அரைத்து ஒரு சிறு உருண்டை அன்றாடம் உட்கொள்ள நல்ல பலன்கிடைக்கும்.
- இலையை வாட்டிப் பிழிந்து சாறெடுத்து அதனை இரண்டொரு துளிகளை காதில் விட காதுமந்தம் தீரும்.