திப்பிலி – நம் மூலிகை அறிவோம்

Piper Longum; Long Pepper; Indian Long Pepper; Thippili

திப்பிலி, ஓவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு ஏறு கொடி மூலிகை மருந்து. அஜீரணம் சார்ந்த தொந்தரவுகள், சுவாச மண்டலத்தில் ஏற்படும் பிரச்சனைகள், வாதம் வாத வீக்கங்கள், மாதவிடாய் சார்ந்த பாதிப்புகளுக்கும் சிறந்த பலனை அளிக்கிறது.

பிப்பிலி, சௌண்டி, தண்டுலி, கணம், பாணம், ஆர்கதி, உண்சரம், காமன், குடாரி, கோலகம், கருட்டி, சரம், சாடி, துளவி, வைதேகி, அம்பு, ஆதி மருந்து, அரிசித்திப் பிலி என பல பெயர்கள் இந்த திப்பிலிக்கு உண்டு.

இதன் கொடி இலைகள் தனி இலைகளாகவும் மாற்றிலைகளாகவும் இருக்கும். கீழிருக்கும் இலைகள் அகன்றும் நீண்டு வட்ட வடிவத்திலும் மேல்பகுதியில் இருக்கும் இலைகள் நீள்வட்டமாகவும் இதய வடிவத்திலும் இருக்கும். இதனுடைய பழங்கள் கரும்பச்சை நிறத்தில் நீள்வட்ட வடிவ இருக்கும். இந்த பழங்களே பழுக்காமல் உலர்த்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. கார்ப்பு சுவை கொண்ட இந்த காய்களும் அதன் அரிசியுமே மருத்துவ பயன்கள் கொண்டதாக உள்ளது. வயிற்றுப் பொருமல், இருமல், வீக்கம், வெள்ளை, பெரும்பாடு, அஜீரணம், தாது இழப்பு, கோழை, இரைப்பு, நீர்க்கோவை, தலைவலி, தொண்டைக்கம்மல், மயக்கம், வயிற்றுவலி போன்றவற்றிற்கு மிக சிறந்த மருந்து இந்த திப்பிலி.

ஜுரம் இருமலுக்கு

ஜுரங்கள், இருமல், கோழை, அஜீரணம் போன்றவற்றிற்கு வெற்றிலையுடன் திப்பிலிப் பொடி கலந்து கொடுக்க மறையும்.

பெண்களுக்கு

திப்பிலியுடன் தேத்தான் கொட்டை சேர்த்து பொடி செய்து அதனை சிறிதளவு எடுத்து கழுநீரில் காலை மட்டும் 3 நாட்கள் பருக வெள்ளை, பெரும்பாடு மறையும்.

உடல் பலப்பட, தொந்தரவுகள் நீங்க

ஒரு சிட்டிகை அளவு திப்பிலிப் பொடியை தேனில் கலந்து உட்கொள்ள தொண்டைக் கம்மல், இருமல், அஜீரணம், தாது இழப்பு, வீக்கம் போன்றவை நீங்கும். ஈரல், இரைப்பை பலம் பெறும்.

இளைப்பு நோய்க்கு

திப்பிலிப் பொடியுடன் சமஅளவு கடுக்காய் பொடி கலந்து ஒரு சிட்டிகை அளவு தேனுடன் கலந்து தினமும் 2 வேளை உண்டுவர இளைப்பு நோய் மறையும்.

வயிற்று தொந்தரவுகள் கப நோய்களுக்கு

திப்பிலிப் பொடியுடன் சுக்குப் பொடி சம அளவு கலந்து ஒரு சிட்டிகை அளவு தினமும் 3 வேளைகள் தேனுடன் எடுக்க வயிற்றில் ஏற்படும் தொந்தரவுகள் மறையும். அஜீரணம், வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, தொண்டைக் கம்மல், நீர்க்கோவை, தொண்டைக் கம்மல் மற்றும் கப நோய்களுக்கு சிறந்தது.

(1 vote)