Strychnos Potatorum; Clearing Nut tree; தேற்றான்
தேற்றான் மரத்தின் கொட்டை தேற்றான் கொட்டை பல காலமாக நமது தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் நீரினை சுத்திகரிக்க பயன்படுத்திய சிறந்த மூலிகை. தேற்றான் தென்னிந்தியாவில் மலைப்பகுதிகளில் இலையுதிர் காடுகளில் வளரக்கூடிய மர வகையை சேர்ந்தது. இந்த தேற்றான் மரத்தின் பழங்களுக்குள் இருக்கும் விதையே தேற்றான் கொட்டையாகும். இந்த தேற்றான் மரம் பார்க்க மிக அழகாக இருக்கும். இதன் உள்ளிருக்கும் விதைகள் வெண்மை நிறைந்த பழுப்பு அழுக்கு நிறத்தில் இருக்கும்.
இன்று ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் என்றாலே அர் ஓ வாட்டர், மினரல் வாட்டர் என பல வடிவங்களில் சத்துக்கள் அற்ற அதிலும் குறிப்பாக உயிர்சத்துக்கள் அற்ற சக்கைநீரை குடிக்கும் நிலை உள்ளது. இதனால் உடலுக்கு தேவையான நீர்சத்துக்கள் சரிவர உடலால் பெறமுடியாமல் பல உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் இந்த தண்ணீரில் கலந்திருக்கும் இரசாயனங்கள் உடலின் உள்ளுறுப்புகளை பழுதடைய செய்கிறது, குறிப்பாக சிறுநீரக தொந்தரவுகள் ஏற்படுகிறது. எது கிடைக்கிறதோ இல்லையோ தமிழகத்திலிருக்கும் நகரங்களில் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்பது நிதர்சனம். எவ்வாறு சுத்தமான சத்தான குடிநீரை பெறலாம் என்ற சிந்தனையும் எண்ணமும் பலரிடம் உள்ளது. இதற்கு மிக எளிதான வலி நம் முன்னோர்கள் பயன்படுத்திய தேற்றான் கொட்டை தான்.
எப்படிப்பட்ட அசுத்த நீரையும் இந்த தேற்றான் கொட்டை சுத்தப்படுத்திவிடும். நம் முன்னோர்கள் இதனை நீரின் தன்மைக்கேற்ப மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கிணற்றில், அன்றாடம் ஓரிரு கொட்டைகளை குடத்திலிருக்கும் நீரிலும் சேர்த்து ஊறவைத்து பயன்படுத்தினர். இதனையே இன்றும் நாம் கடைபிடிக்க சுத்தமான நல்ல குடிநீரை பெறலாமே. குடிநீருக்கு மட்டுமல்லாமல் மேலும் சில மருத்துவ பயன்களையும் இந்த தேற்றான் கொட்டை கொண்டுள்ளது.
தேத்தான், தேறு, தேற்று, தேத்தி, தேத்தியல், இல்லம், கதகம், சில்லம் என பல பெயர்கள் இதற்கு உண்டு. கைப்பு சுவை கொண்ட தேற்றான் மரத்தின் விதைகளைக் கொண்டிருக்கும் பழங்கள் மற்றும் அந்த விதைகளே (தேற்றான் கொட்டை) மருத்துவ குணம் கொண்டு பயன்படும் பகுதிகள். பசியைத் தூண்டக் கூடிய ஆற்றலும், உடலை தேற்றக்கூடிய பண்புகளும் நிறைந்தது இந்த தேற்றான் கொட்டை. மேலும் உடல் சூடு அஜீரணம், கோழையை அகற்றி உடலை வளமாக்கும். மூலம், ஆண்மைக் குறைவு, சீதபேதி, பெரும்பாடு போற்றவற்றிர்க்கும் தேத்தான் கொட்டை சிறந்தது.
வாத, பித்த, கப நோய்களுக்கு
தேத்தான் கொட்டையை உலர்த்திப் பொடி செய்து, தினமும் 2 வேளை நீருடன் கலந்து பருக இருமல், வாத, பித்த, கப நோய்கள், இரைப்பு, மார்புச் சளி நீங்கும். ஆனால் வாந்தியையும், கழிச்சலையும் உண்டாக்கும்.
நீரிழிவு, ஆண்மைக்குறைவு, சிறுநீர் எரிச்சல் நீங்க
தேத்தி என்ற இந்த தேற்றான் விதையைப் பொடி செய்து ஓரிரு சிட்டிகை அளவு காலை, மாலை தேனுடன் உட்கொள்ள உட்சூடு, சிறுநீர் எரிச்சல், வெள்ளை, வெட்டை, வயிற்றுக்கடுப்பு, புண், அதிக பசி, கண்நோய்கள் தீரும். தேவைக்கு தக்க மருந்தாக மட்டுமே இவ்வாறு இதனைப் பயன்படுத்த வேண்டும். இல்லையானால் மந்தம் ஏற்படும். அதேப்போல் இதனை பாலுடன் கலந்து எடுத்துவர நீரிழிவு, ஆண்மைக்குறைவு, வெட்டை, நீர்ச்சுருக்கு மறையும்.
கட்டிகள் உடைய
தேற்றான் பொடியை தேனில் கலந்து கட்டிகளின் மீது பூசி வர கட்டிகள் விரைவில் பழுத்து உடையும்.