பலரும் தேடித்தேடி வாங்கும் கீரைகளில் ஒன்று இந்த தவசிக் கீரை. சத்து நிறைந்த கீரைகளிலே தவசிக் கீரை முதலிடம் பெறுகிறது. இதனை வைட்டமின் கீரை என்று கூட சொல்லலாம். ஏனெனில் இக்கீரையில் அடங்கியுள்ள வைட்டமின்கள் சிறந்த பயனை விளைவிக்கக் கூடியவை.
இக்கீரையில் வைட்டமின் ஏ, பி, பி2, சிறிதளவு சி, டி, கே ஆகிய வைட்டமின்களும் நிறைந்திருப்பதால் இதனை மல்டி வைட்டமின் கீரை என்று சொல்லலாம். இதனுடன் இந்த கீரையில் தாது உப்புகள், புரதம், மாவுப்பொருட்கள் மிகுந்த அளவில் இருக்கிறது. இதனால் இக்கீரை ஒரு சிறந்த கீரையாக கருதப்படுகிறது.
தவசிக்கீரை மிகவும் சக்தி மிகுந்த கீரையாகும். இந்த கீரையை பச்சையாகவும் உண்ணலாம். இந்த தவசிக் கீரையின் இலைகளும், இளங்தண்டுகளும் சமைத்து உண்பதற்கு பயன்படுகின்றன. நம் உணவில் இக்கீரையை சேர்த்துக் கொள்வது ஒரு சிறந்த ஆரோக்கியமான வாழ்விற்கு வழிகோல்வதற்கு ஓர் எளிய வழியாகவும் இருக்கும்.
இக்கீரையில் மணிச்சத்து நிறைந்து இருக்கின்ற காரணத்தால் எலும்புகள் மற்றும் மூளை வளர்ச்சிக்கு இந்த கீரை மிகப்பெரிய பயனை அளிக்கிறது. கணக்கு வராத மாணவர்கள் நாள்தோறும் இந்தக் கீரையை உணவுடன் சேர்த்துக் கொண்டால் சிறப்பாக கணிதப்பாடம் வரும் என்று கூட கூறலாம். இதற்கு காரணம் இக்கீரையில் அடங்கியுள்ள மணிச்சத்துக்கள். மேலும் இக்கீரையில் இரும்புச்சத்து நிறைய இருப்பதினால் இரத்த விருத்திக்குப் பயன்படுகிறது. எனவே உணவுடன் இக்கீரையைச் சேர்த்துக் கொள்வதினால் இரத்த விருத்தியும் உடற்கட்டும் உடல் செழுமையும் ஏற்படும்.
இக்கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டாகச் செய்து உண்ணலாம். தனியாகப் பொரியல் செய்து தேங்காய்த் துருவலிட்டு சமைத்து உண்ணலாம். பாசிப்பயறு மற்றும் துவரம் பருப்புடன் சேர்த்துக் கூட்டு செய்யலாம். இக்கீரையைப் பருப்புடன் சேர்த்துக் கடையல் செய்து உண்ணலாம். இதனைத் தயிருடன் சேர்த்து தயிர் கூட்டு மற்றும் மோர் குழம்பும் செய்து உண்ணலாம். சிறப்பாக இக்கீரையை உண்ணும் பொழுது இக்கீரையில் அடங்கியுள்ள உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் எந்த வித அளிவுமின்றி உணவோடு கலந்து இரத்தத்தில் எளிதில் கலந்து சிறந்த பயனை விளைவிக்கக் கூடியதாகும்.