தமிழகத்தில் பலருக்கும் விருப்பமான கீரைகளில் ஒன்று தண்டுக் கீரை. கீரையை விட இதன் தண்டு பிரமாதமான சுவையில் இருக்கும். பொதுவாக கீரைகள் குறைந்த காலத்தில் அறுவடைக்கு தயாராகுபவை. ஆனால் இந்த தண்டு கீரை நான்கு முதல் ஆறுமாதங்கள் வளர்ந்த பின் அறுவடைக்கு வரும். அதனால் இதனை ஆறுமாத கீரை என்றும் அழைப்பதுண்டு. செழிப்பான பூமிகளில் இக்கீரை ஒன்றரை மீட்டரிலிருந்து இரண்டு மீட்டர் உயரம் வரை கூட வளரும்.
ஆறுமாதங்கள் வளரும் இந்த கீரையின் இலைகள் பெரியதாகக் காணப்படும். அதேப்போல் தண்டு கனமானதாக இருக்கும். இவை சாப்பிட மிகவும் குசியாக இருக்கும். தண்டு கீரையில் சத்துகள் அதிக அளவில் உள்ளன. முதிர்ந்த கீரையில் அதிக அளவில் ஆற்றல் உள்ளது. இக்கீரையையும் தண்டையும் உணவாக உபயோகப்படுத்தலாம். தண்டு கீரையில் இரும்புச் சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தாது உப்புகள், மாவுச்சத்து, மணிச்சத்து, கொழுப்புச்சத்து, குளோரின், சோடியம், பொட்டாசியம், கந்தகம், மெக்னீசியம், தயாமின், ரிபோஃப்ளேவின், ஆக்சாலிக் அமிலம், நிகோடினிக் அமிலம், தாமிரச் சத்து ஆகியவை நிறைந்துள்ளது.
இந்த கீரையையும் தண்டையும் பருப்பு வகைகளுடன் சேர்த்து சாம்பார் செய்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேப்போல் பொரியல், மசியல், கூட்டு என எல்லா வகையிலும் இதனை செய்தும் சாப்பிடலாம். அரிசி கழுவிய நீரின் மண்டியில் இதன் தண்டைப் போட்டு, தேவையான அளவு உப்பு, சிறிது புளி சேர்த்து வேகவைத்து சாப்பிட நல்ல ருசியாக இருக்கும். உடலுக்குப் சிறந்த பலத்தை அளிக்கும் கீரை.
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் பலவகையான சத்துகள் உள்ளது. அவை நம்முடைய உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவைப்படுகின்றன. அந்த சத்துகள் அனைத்துமே இக்கீரையிலும் அதிகமாகவே உள்ளன. ஆகையால் இக்கீரையைச் சாப்பிட்டால் நமக்குத் தேவையான சத்துகள் அனைத்தும் நாம் எளிதாகப் பெறமுடியும்.
சித்த மருத்துவர்கள் இதனைக் கீரையாக மட்டும்மல்லாமல் சிறந்த மூலிகையாகவும் இதனை குறிப்பிடுகிறார்கள். நமது உடலுக்குத் தேவைப்படும் சத்துகள் அனைத்தும் இக்கீரையில் இருப்பதே அதற்குக் காரணமாகும். தண்டுக்கீரை பல நோய்களுக்கும் சிறந்த மருந்தாக உள்ளது. பல நோய்களைக் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்ட கீரை.
தண்டுக் கீரையின் பயன்கள்
- பசியைத் தூண்டும்.
- எலும்பு மஜ்ஜையை வளர்க்கிறது.
- ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் தன்மையும் கொண்டது.
- நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது.
- முதுகெலும்பை வலுப்படுத்துகிறது.
- கண்களுக்குக் குளிர்ச்சியை அளிக்கிறது.
- உடல் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
- குடல் புண்களை விரைவாக ஆற்றுகிறது.
- கட்டிகளை வேகமாகக் கரைக்கிறது.
- இரத்தத்தில் சேரும் கொழுப்புச்சத்தைக் கரைக்கிறது.
- குடல் அல்லது மூச்சுக் குழாயில் ஏற்படும் தடைகளை அகற்றுகிறது.
- இருதயத்தை வலுப்படுத்துகிறது.
- கல்லீரல், சிறுநீர்ப்பாதை ஆகியவற்றில் உருவாகும் கற்களை கரைக்கும் தன்மையும் கொண்டது.
- ஆத்திரத்தையும், ஆவேசத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக நிதானப்படுத்தி குறைக்கிறது.
- நரம்புத் தளர்ச்சி, இரத்தக்கொதிப்பு, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், அழற்சி, வயிற்றுப்புண் போன்ற தொந்தரவுகளை மிக எளிதாகக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.