Terminalia Bellirica; Beleric; Thaandri kaai
தான்றிக்காய் பலருக்கும் அறிமுகமான ஒரு மூலிகைதான். சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படும் ஒரு மருந்து திரிபலாதி (திரிபலா – (கொட்டை நீக்கிய நெல்லிக்காய், கொட்டை நீக்கிய கடுக்காய், கொட்டை நீக்கிய தான்றிக்காய்). இதில் இருக்கும் மூன்று பொருட்களில் ஒன்று இந்த தான்றிக்காய் தான். பல நோய்களை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இதில் பயன்படுத்தப்படும் தான்றிக்காய் தான்றி என்ற மரத்திலிருந்து பெறப்படும் காய். இந்த தான்றி மரம் நீளமான கிளைகளுடன் பெரிய இலைகள் நுனியில் கொத்தாக இருக்கும். இதன் பூக்கள் கொத்தாக பச்சை நிறத்தில் நெருடலான மணத்துடன் சிறிதாக இருக்கும்.
இதன் காய்கள், கனிகள் ஒரு விதையுடன் பழுப்பு நிறத்தில் நீள் வட்ட வடிவில் இருக்கும். துவர்ப்பு சுவை கொண்ட இதன் இலை, பழம், விதை ஆகியவை இந்த தான்றி மரத்தின் பயன்படும் பகுதிகள். தானிக்காய், தாபமாரி, கந்துகன், களந்தூன்றி, அக்கந்தம், அமுதம், ஆராமம், அம்பலத்தி, சகதம், வாந்தியம், வித்தியம், பூத வாசகம், எரிகட்பலம் என பல பெயர்களும் இதற்கு உண்டு.
உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் சிறந்த தன்மை கொண்ட மூலிகை தான்றி. மலச்சிக்கலையும், கோழையையும் நீக்கும். வெள்ளை, வாத, பித்த நோய்கள், சிலந்தி நஞ்சு, அம்மை, ஆண்குறிப்புண், பேதி, நீரொழுக்கு, இரைப்பு, கிரந்திப்புண், ஜூரம், பல்வலி ஆகியவற்றிற்கு நல்ல பலனை அளிக்கும்.
தான்றிக் கொட்டையை நீக்கி லேசாக வறுத்துப் பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு எடுத்து அத்துடன் சர்க்கரை கலந்து தினமும் 2 வேளைகள் எடுத்துக் கொண்டு வர மலச்சிக்கல், இரத்த மூலம், குடல் பலமின்மை, காய்ச்சல், பித்தத் தலைவலி, ஆண்குறிப்புண், சீதபேதி ஆகியவை தீரும். இந்த தூளை வெந்நீருடன் கலந்து பருக பல்வலி நீங்கும். தான்றித் தூளை நீரில் கலந்து பூச புண் ஆறும். அக்கியில் பூச எரிச்சல் தணியும். தான்றிப் பொடியை தேனுடன் கலந்து கொடுக்க அம்மை நோய் விலகும்.