தாளாசனம் / தாடாசனம் – Palm Tree Pose – யோகாசனம்

பாதங்களை கொண்டு செய்யக்கூடிய ஒரு மிக முக்கியமான ஆசனம் இந்த தாளாசனம். நின்ற நிலையில் செய்யக் கூடிய ஆசனம் இது. கால்களில் ஏற்படும் அனைத்து விதமான தொந்தரவுகள் குறிப்பாக ‘வெரிக்கோஸ் வெயின்’, உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் சம்பந்தமான நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்து இந்த தாளாசனம். குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் உகந்த ஒரு ஆசனம் இந்த தாளாசனம்.

‘தாள்’ என்பதற்கு பாதம் என்று ஒரு பொருள். பாதத்தால் செய்யக்கூடிய ஆசனம் என்பதாலும், அதேப்போல் ‘தாள்’ என்பதற்கு பனை மரம் என்று இன்னொரு பொருளுண்டு. பனை மரத்தைப் போல் உடலுக்கு நல்ல ஒரு உறுதியை அளிக்கும் சிறந்த ஒரு ஆசனம் என்பதாலும் இந்த ஆசனத்திற்கு தாளாசனம் எனப் பெயர்.

உடலில் ஏற்படும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள், நாளமில்லா சுரப்பிகளில் வரக்கூடிய பிரச்சனைகளுக்கு சிறந்த ஒரு மருந்து இந்த ஆசனம். இந்த ஆசனம் காலில் இருந்து செயல்படும் 44 நரம்புகளையும் வலுவூட்ட கூடியதாகும்.

செய்முறை

முதலில் இந்த ஆசனத்தை செய்வதற்கு ஒரு விரிப்பின் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். பின் நமது பாதங்களை ‘V’ அமைப்பில் வைத்து இரு கால்களையும் ஒட்டியவாறு மெதுவாக இயல்பான சுவாசத்தில் மெதுவாக குதிகால்களை தூக்க வேண்டும், அதே சமயத்தில் கைகளையும் தூக்க வேண்டும். கால் விரல்களின் அடிச்சதையில் உடலின் எடையைத் தாங்கச் செய்ய வேண்டும்.

கைகள் இரண்டும் காதோடு ஒட்டியவாறு இருக்க வேண்டும். உள்ளங்கை இரண்டும் உள்பக்கமாக பார்த்து இருக்க வேண்டும். இந்த நிலையில் முதலில் ஆரம்ப காலத்தில் 15 வினாடிகள் என மூன்று முறை செய்தால் போதும். பழகப்பழக தொடர்ந்து ஒரு முறைக்கு 45 நிமிடங்கள் என செய்தாலே போதும். தொடர்ந்து அன்றாடம் செய்ய பழகிவிடும்.

உடலுக்கு நல்ல ஒரு வலுவைக் கொடுக்கக் கூடிய ஒரு அற்புதமான ஆசனம் இந்த தாளாசனம். உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை இருக்கக்கூடிய அனைத்து விதமான நரம்புகள், தசைகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கம் நீங்கும். தசைகள் இழுக்கப்பட்டு, சுருங்குவதால் தசைகள், நரம்புகள் பலப்படும். உடலுக்கு நல்ல ஒரு வலிமையை ஊட்டும் ஆசனம்.

தொடர்ந்து இந்த ஆசனத்தை செய்வதால் ரத்த ஓட்டம் சீராகும். முதுமையிலும் கூட நமது நடையும் ஓட்டமும் சுறுசுறுப்பாகவும் நல்ல ஒரு திடமாகவும் இருக்க இந்த ஆசனம் நமக்கு உதவும்.

பாதம், கணுக்கால், கெண்டை சதை உறுதியாகும். மூட்டுவலி, குதிகால் வலி, பாத வலி, வீக்கம், கால் வளைவு போன்ற பாதிப்புகள் நீங்கும். தொடர்ந்து இந்த ஆசனத்தை செய்வதால் இந்த தொந்தரவுகள், வலிகள் வராமலும் நம்மை பாதுகாக்களாம்.

வெரிகோஸ் வெயின்‘ நரம்பு முடிச்சு தொந்தரவிற்கு இந்த ஆசனம் சிறந்த பலனை அளிக்கும். இந்த தாளாசனத்தை செய்ய செய்ய விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இந்த ஆசனத்தின் மூலம் வெரிகோஸ் வெயினிலிருந்து நாம் முற்றிலும் வெளிவரவும் முடியும்.