நகரங்கள்.. நாகரீக வளர்ச்சியிலும், நவீன வளர்ச்சியிலும் முன்னிலையில் இருப்பவை. சொந்த ஊர், கிராமங்களை விட்டுவிட்டு கோடிக்கணக்கான குடும்பங்கள் வேலைக்காகவும், பிழைப்பிற்காகவும் குடிபெயர்ந்த இடம். பணம் மட்டுமே பிரதானமாக பார்க்கப்படும் இடம் தான் நகரங்கள்.
பெற்ற பிள்ளையைக் கூட ஆசையாய்க் கொஞ்ச கொஞ்சம் நேரம் கூட இல்லாத இடம். அவசரம், அவசரம் அனைத்திலும் அவசரம் என்ற அவசரநிலையே காலைமுதல் மாலை வரை. இப்படியே வருடங்கள் போவதும், வருவதும் கண்ணிமைக்கும் நேரத்தில் என்று கூட சிலநேரங்களில் தோன்றும். அப்படி ஒரு அவசரம். இந்த அவசரத்திற்கெல்லாம் காரணம் என்ன என்றால் குடும்பத்தின் மேன்மை, குடும்ப நலம், குழந்தைகளின் வளர்ச்சி, ஸ்டேட்டஸ், ஆடம்பரம் என ஒட்டு மொத்தத்தில் தங்கள் பட்ட கஷ்டங்களை தங்கள் குழந்தைகள் பெறக்கூடாது என்பதற்காகத்தான் இந்த அவசரமும், ஓயாத உழைப்பும் என்கின்றனர் நகரவாசிகள்.
இன்றைய நிலைமை அவர்கள் நினைத்தமாதிரி பணம் இருந்தால் போதும் அனைத்தையும் பெற்று ஆனந்தமாக வாழலாம் என்பது பொய்யானது. பணம் நகரவாசிகளிடம் கொட்டிக்கிடக்கிறது. அதனைக்கொண்டு நஞ்சற்ற உணவைக்கூட பெறமுடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். அந்தப் பணம் அவர்களின் மருத்துவ செலவுக்கு தான் துணையாக உள்ளது.
நஞ்சற்ற, இரசாயனமற்ற, தரமான உணவுகள் நகரங்களில் கிடைப்பது அபூர்வமாகிவிட்டது. தெருவிற்கு தெரு நவீன மருத்துவமனைகள் பெருகிவிட்டது. உடல் ஆரோக்கியத்திற்கு துணையாக இருக்கும் நச்சற்ற காய்கறிகள், கீரைகள், பழங்கள், பயிறுகள், அரிசிகள், நாட்டுப்பசும் பால், தேன் என எதுவுமே நகரத்தில் சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகத்தான் உள்ளது.
உணவு என்ன.. தூய்மையான காற்றினைக்கொடுக்கும் மரங்களுக்கு கூட பஞ்சம்தான். நகரங்களில் பெரியபெரிய கட்டிடங்களைக் கட்ட மரத்தை வெட்டும் நம்மவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த நிழலைத் தேடும் வேடிக்கையைப் போலத்தான் பணமும் ஆரோக்கியமும் அவர்களின் வாழ்வில் உள்ளது.
நகரங்களில் இருப்பவர்களுக்குத் தான் இந்த நிலைமையா என்றால், நிச்சயம் இல்லை. இன்று அனைத்து இடங்களிலும் இதுதான் நிலைமை. நகரத்தில் இருக்கும் மக்கள் தொகைக்காக கிராமத்தில் இருக்கும் மக்கள் உணவுப் பொருட்களையும், மற்றப் பொருட்களையும் உற்பத்திசெய்கின்றனார். அதனால் நகரவாசிகள் விருப்பம்போல் உணவுகள் மருத்துவகுணங்கள் இன்றி பளபளக்கத் தொடங்கியுள்ளது. பளபளக்கும் இரசாயன காய்களும், பழங்களும், பூச்சியில்லாத பூச்சிக்கொல்லிகள் தெளித்த கீரைகளும், மினுமினுக்கும் அரிசி, பருப்பும் அனைத்து இடங்களிலும் சர்வசாதாரணமானது. விளைவு பளபளக்கும் அவற்றால் பொலிவையிழந்து மருத்துவமனையை நாடவேண்டிய நிலை.
வாழ்க்கையில் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் உணவு அவசியமாகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் மக்கள் தொகை, விவசாயத்திற்கு மழையின்மை போன்றவற்றாலும் உணவு விளைச்சல் அதாவது விவசாயம் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தரமான நச்சற்ற உணவுகள் கிடைப்பது பெரும் சவாலான ஒன்றாக உள்ளது. அதற்காக அப்படியேவா விட்டுவிடமுடியுமா..
பல இடர்களுக்கு நடுவில் குடும்பத்தையும், குழந்தைகளையும் காக்கும் நாம் அவர்களின் உணவு விஷயத்தில் அதிக கவனமும் செலுத்துவது எல்லாவற்றையும் விட அவசியமானது தானே.
இவற்றிலிருந்து நாமும் நமது குடும்பமும் வளம் பெற நாம் வாழும் இடங்களில் நமது இல்லத்தில் விவசாயம் செய்ய தொடங்களாமே…
வெண்ணெய் இருக்க நெய்க்கு ஏன் அலையவேண்டும். நகரங்களில் தான் நாம் வசித்தாலும் வீட்டைச்சுற்றி, நடைபாதை, சுவர்கள், மாடிகள், படிகள் என எவ்வளவு இடங்கள் உள்ளது, நமக்கான கீரைகள், காய்கறி, மூலிகைகள் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள. அவற்றை பயன்படுத்தி நச்சற்ற உணவை எளிமையாக உட்கொள்ளலாமே…
இதெல்லாம் சாத்தியமா? என்கிறீர்களா, நிச்சயம் சத்தியம் தான். நமக்கான உணவை (கீரை, காய்கறி, பழங்கள் போன்றவற்றை) நாமே விளையவைத்து உண்பது இன்று பல இடங்களில் மிகப்பிரபலம்.
நகரத்தில் விவசாயம் நமக்கான சத்தான உணவை உறுதியாகக் கொடுக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் பலரின் வீட்டு மாடியில் வாழையும், மாதுளமும் மட்டுமல்ல திராட்சையும் காய்த்து குலுங்குகிறது.
பலரின் வீட்டு பால்கனிகள் புடலை, பீர்க்கன் போன்ற கொடிவகைகள் படரும் இடங்களாகவே மாறியுள்ளது. இன்னும் பலரின் காம்பௌண்ட் சுவர்கள் விதவிதமான கீரை, மூலிகைகளின் அடுக்குகளாக மாறியுள்ளது, படிகளோ விதவிதமான காய்களின் வண்ணத்தால் நிற்கும் கோலங்களை போல் காட்சியளிக்கிறது. இவற்றை இந்தப் படங்களில் பார்க்கையிலேயே கண்கள் குளிருகிறது, நமது வீட்டில் தோட்டம் அமைந்தால் உடலே குளிரும்..
அதன் இரம்மியமான காற்றால். எந்த roof garden ரெஸ்டாரண்டுகளும் அதன் பின் நமக்கு தேவையில்லை. பரபரப்பான நகரத்தில் இருக்கும் நமது வீடே நமக்கு சொர்க்க பூமியாய் திகழும்.
வீட்டினில் தோட்டம் அமைக்க சிறு இடமிருந்தால் கூட போதும். அந்த இடத்தில் குறைந்தது நன்கு மணி நேரமாவதும் சூரிய ஒளி பட வேண்டும். வெயில் இல்லை என்றால் அதற்கேற்ற நிழலில் விளையும் செடிகளை வளர்ப்போம்.
தோட்டம் அமைக்க முதலில் இடத்தினை தேர்வு செய்ய வேண்டும். வீட்டு வாசற்படி, வெளிப்புறம் தொடங்கி வீட்டு மாடிவரை உள்ள காலியான, வெயில் படுமிடமாக இருக்கும் எல்லா இடமும் தோட்டம் அமைக்க ஏதுவானது.
புதிதாக தோட்டம் அமைக்க நினைப்பவர்கள் முதலில் எளிமையான செடிகளை வளர்க்க தொடங்குவது சிறந்தது. நமக்கு தேவையான செடிகளை எவ்வாறு தேர்ந்தெடுத்து, பராமரித்து, எளிமையாக வளர்க்கலாம் போன்ற பல பயனுள்ள தகவல்களை அடுத்தடுத்து பார்க்கலாம்.
அட, எங்க ஊரை விட்டுட்டு வேலைக்காக நகரத்துக்கு வந்து வீடு வாடகைக்கு எடுத்து இருக்கோம் என்கிறீர்களா, உங்களுக்கான பயனுள்ள எளிய வீட்டுத் தோட்ட செடிகளும் பல உள்ளது. அவற்றையும் பார்க்கலாம்.
அடுத்தடுத்து மண்கலவை பற்றியும், வீட்டிலேயே காய்கறி கழிவுகளை வைத்து உரம் தயாரிப்பது பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன் வளமாக இருந்த இந்தியாவில் உள்ளவர்கள் தங்களுக்கான உணவினை தாங்களே விளையவைத்துக்கொண்டு தற்சார்பான வாழ்வை வாழ்ந்தனர். இன்று அந்த நிலை மாறி வளமிழந்து விவசாயமும் பணப்பயிராக உள்ளது.
இந்த நிலையினை மீண்டும் மாற்றி வளமான இந்தியாவை உருவாக்க மீண்டும் பழையபடி அவரவருக்கான உணவை முடிந்தவரை அவரவரே விளையவைத்து தற்சார்பினை நிலைப்படுத்தி உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்வோம்.