நகரத்தில் இருக்கும் இடத்தில், காம்பௌண்ட் சுவரில் என்று தொட்டிகளில் செடிகளை வைத்து அதனை பாதுகாத்து வளர்த்தவர்களுக்கு தான் தெரியும் உண்மையான சந்தோசம். ஒவ்வொரு நாளும் நாம் வளர்க்கும் செடிகளுக்கு நீரினை தெளிக்கும் பொழுதும் வீசும் மணத்திற்கும், நமது தோட்டத்தை கவனமாக பார்த்துக்கொள்ள ஒவ்வொரு இலையும் வெளிவரும் பொழுது கிடைக்கும் சந்தோஷமும் எந்த சந்தை கீரையிலும் கிடைக்காது. பலர் தங்களின் மகிழ்ச்சியை உறவினர்களுக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் தங்களின் அறுவடையைப்பற்றி தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் அதனை படம் பிடித்தும் முகநூலிலும், வாட்சப்பிலும் பகிர்ந்தும் கொண்டாடுவது பெரு மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது.
இவ்வளவு காலமாக சந்தையில் கிடைத்த கீரைகளை சமைத்த நமக்கு நிச்சயம் நம் வீட்டுத் தோட்டத்தில் கிடைத்த கீரைக்கும் பல பல வேறுபாடுகள் உள்ளது. சத்துக்கள், சுவை, மணம், அதன் தன்மைகள் என அனைத்திலும் வேறுபாடுகளை வீட்டுத் தோட்டத்திலிருந்து பெற்ற காய்கள், கீரைகள் மூலம் எளிமையாக உணரலாம்.
வீட்டில் வளர்ந்த புதினா வளர்ந்த (வீட்டுத் தோட்டத்தில் புதினா வளர்ப்பு) இடமும் அதனை தொட்ட நமது கைகளும் பல மணிநேரத்திற்கு மணப்பதை கண்டு வியப்பாக இருக்கும். கசக்கும் என்று இவ்வளவுநாள் நினைத்திருந்த வெந்தையக்கீரையின் (வீட்டுத் தோட்டத்தில் வெந்தய கீரை வளர்ப்பு ) மணமும் அதன் உண்மையான சுவையையும் கண்டு ஆச்சரியமாக இருந்திருக்கும். அதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பதையும் கண்டு ஆனந்தமும் கூடும்.
அதேசமயம் சந்தையில் கிடைக்கும் கீரைகள் ஏன் வேறுமாதிரியான மணத்தை தருகிறது என்று கூட பலமுறை யோசித்திருப்போம். வீட்டில் நாம் விளையவைக்கும் கீரைகள் விளைவதற்கு எந்த வித இரசாயன உரங்களோ, இரசாயன வளர்ச்சி ஊக்கிகளோ பயன்படுத்தவில்லை, மண்புழு உரம் மட்டுமே போதுமானது. தேவைப்பட்டால் ஏதேனும் இயற்கை இடுபொருளை பயன்படுதல்லாம். கடைகளில் கிடைக்கும் கீரைகளை விளையவைக்க பலவகையான நச்சுக்கள் கொண்ட இரசாயனங்கள் வளர்ச்சிக்காகவும், செழிப்பிற்காகவும் தெளிக்கப்படுகிறது.
கடந்த முப்பது நாற்பது ஆண்டுகாலமாக மண்ணில் பயன்படுத்திய இராசயனங்களால் நுண்ணுயிர்கள் மடிந்து மண் மலடாக மாறியது. இரசாயன உப்புகள் அதிகமாக அதிகமாக மண்ணில் இருக்கும் ஈரப்பதம், நிலத்தடி நீர் வற்றியது, புவி வெப்பமானது, மழை பொய்த்தது இப்படி பலப்பல நிகழ்வுகள் தொடர்ந்தது. ஆனால் உணவு என்ற ஒன்றின் தேவை மட்டும் குறையவில்லை. அதிலும் மக்கள் தொகை அதிகம், உணவின் தேவை அதிகம், விளைச்சல் நிலங்கள் குறைந்தது, விவசாயமும் அடுத்த தலைமுறை விவசாயிகளும் குறைந்தது.. இப்படி பலப்பல சவால்களுக்கு நடுவில் உணவு உற்பத்தி இன்று நடக்கிறது.
உழைக்க யாரும் தயாராக இல்லாத இந்த நவீன உலகில் எல்லாமே இயந்திரம்.. தரமான சாணத்தையும், கோமூத்திரத்தையும் அளிக்கும் நமது நாட்டு மாடுகள் காணாமல் போக மண்ணை வளமாக்க போதுமான சத்தான இயற்கை உரங்களும் இல்லை. ஆனாலும் விவசாயம் செய்ய வேண்டுமே.. உணவின் தேவை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தனிமனிதருக்கும் உள்ளதே என்பதால் நச்சுக்கள் கலந்த இரசாயனங்களை மண்ணிற்கும், செடிகளுக்கும் (கீரைகள், காய்கறி பயிர்கள் போன்ற உணவு பயிர்களுக்கும்) தெளிக்கின்றனர். மேலும் மலட்டு நிலத்தில் விளையும் இவை தானாக செழித்து வளராது, பூச்சிகள் தாக்குதல் அதிகமிருக்கும், நோய்கள் எளிதாக தாக்கும் என்பதால் பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் என பல வகை நச்சுக்களை இலைகள், செடிகளின் மேல் தெளிக்கின்றனர்.
இப்படி பல பல இரசாயன நச்சுக்களை கொண்டு வளரும் நமது கீரைகளும், காய்களும் மணக்குமா என்ன? நிச்சயம் இந்த இரசாயன வாடையைத்தான் அளிக்கும், வெளியில் மட்டும் இரசாயனம் இல்லை இலைகள், காய்கள் என அனைத்தினுள்ளும் இரசாயனங்கள் ஊடுருவியுள்ளது. சத்துக்களும் மாறாக இரசாயன கூடாரமாகவே இந்த காய்கள், கீரைகள் உள்ளது.
இவ்வாறு சத்தற்ற உணவை உண்பதால் ஒரே நாளில் எந்த தொந்தரவும், நோயும் வராது.. தினம் தினம் இதையே உண்ண நோய்யெதிர்ப்பு தன்மை அறவே இல்லாத நிலை உருவாகிறது. கொசு கடிப்பது கூட உயிர்கொல்லி நோயாக உருமாறுகிறது. இந்த இராசயனங்களின் தாக்கத்தால் சிறுநீரகம், கணையம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயலற்று போகிறது. நரம்பு மண்டல பாதிப்பு, குழந்தையின்மை, புற்றுநோய் என நோய்கள் பிறந்த குழந்தையையும் விட்டு வைக்காமல் அனைவரையும் தாக்குகிறது.
அதிலும் கீரைகள், காலிஃளாவர், முட்டை கோஸ் போன்ற இலை வகைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். முதல் நாள் தொடங்கி கடைகளுக்கு வரும் வரை மூன்று நாட்களுக்கு ஒருமுறை கொடிய நச்சுக்களைக் கொண்டு வளர்கிறது.
கீரைகளின் இலைகளிலேயே அந்த நச்சுக்கள் தங்கிவிட அவற்றை சமைத்து உண்பதால் நன்மையைவிட பாதிப்புகளே அதிகமாக உள்ளது. சத்தானது என்று கருதி கீரை, காய்களை வங்கியுண்ண அதுவே பெரும் ஆபத்தை வரவைக்கும் காரணியாக உள்ளது.
பல நச்சுக்கள், கழிவு நீர் கலந்த கீரை, காய்களில் இவ்வளவு ஆபத்துகள் நிறைந்துள்ளது.. ஆனால் நாமே நமது மாடிகளிலும், வீட்டை சுற்றி இருக்கும் இடங்களிலும் இவற்றை விளைய வைக்க பல பல நன்மைகள் உள்ளது. சத்துக்கள் என்பது மட்டுமல்லாது, உடலுக்கும், மனதிற்கும் பல பல நன்மைகளையும் அளிக்கிறது.
வீட்டுத் தோட்டத்தின் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள இங்கு தொடர்வோம்.