வேப்பங்கொழுந்து – நமது மூலிகை அறிவோம்

வேப்ப மரத்தின் எல்லா பாகங்களுமே மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கக்கூடியது. வேப்ப மரத்தின் பட்டை, இலை, பூ ஆகியவை உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற பயன்படக்கூடியது. இந்த வேப்பமரத்தில் இருக்கும் அனைத்துமே கசப்பு சுவையிருக்க, நேரடியாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணத் தகுந்ததாக கசப்பும், துவர்ப்பும் என கலந்த சுவையை கொண்டது வேப்பங்கொழுந்து. வேப்ப இலையை விட கசப்பு குறைவாகவும், பூச்சிகளை அழிக்கும் வீரியமாகவும் இருக்கக் கூடியது இந்த வேப்பங்கொழுந்து.

வேப்பங்கொழுந்தை அரைத்து சிறிதளவு காலையில் உட்கொண்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்து வெளியேறிவிடும். குழந்தைகளுக்கு இந்த வேப்பங்கொழுந்தை மஞ்சளுடன் சேர்த்து கஷாயமாக வைத்து ஒரு ஸ்பூன் அளவு கொடுக்க வயிற்றுப் பூச்சிகள், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் தீரும்.வேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து புண்கள் மீது தடவ வர விரைவாக குணமாகும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு வேப்பங்கொழுந்து சிறந்த நிவாரணத்தை அளிக்கும். வேப்பங்கொழுந்துடன் சீரகம், மிளகு சேர்த்து அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி தாய்ப்பால் அல்லது வெந்நீரில் கலந்து, எண்ணெய் முழுக்கு செய்தவுடன் கொடுக்க கபம் வெளியேறும். கீரிப்பூச்சி தொந்தரவு ஒழியும். பிற நோய்கள் அண்டாது. அதே போல் குழந்தைகளுக்கு வேப்பங்கொழுந்துடன் வசம்பை அரைத்து உள்ளுக்குக் கொடுக்க கழிச்சல் சட்டென்று நின்றுவிடும்.

வேப்பங்கொழுந்து ஒரு சிறந்த கிருமி நாசினி. முகப்பரு, தேமல் போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்த பலனளிக்கும். சருமத்தில் வரும் பாதிப்புகளுக்கு சிறந்த நிவாரணத்தை அளிக்கும்.

பெரியவர்கள் கல்லீரலில் ஏற்படும் தொந்தரவுகள், உடலில் ஏற்படும் நச்சுக்களை நீக்க அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு மூன்று வேப்பங்கொழுந்தை பறித்து உண்பதால் நீங்கும். இவ்வாறு செய்வதால் உடலில் ஏற்படும் பல நோய்களும் அகலும். இரத்தம் சுத்தமாகும், இரத்த சோகையும் மறையும். உடலுக்கு புத்துணர்வளிக்கும்.