பல் கூச்சம், பல் வலி தீர

பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும் ஒரு செய்தி என்னவென்றால் பற்களின் நிறம் மஞ்சள் பழுப்பு கலந்த வெண்ணிறம். பால் பற்கள் என்ற வெள்ளை நிற பற்கள் குழந்தைகளுக்கு தான் இருக்கும். இதனை மறந்து நாம் இரசாயனங்கள் அதிகம் இருக்கும் பற்பசையை வெள்ளை நிற பற்களைப் பெற அதிகம் பயன்படுத்துவதால் பற்களின் எனாமல் பாதிக்கப்படுகிறது. இதனால் பெரிதும் வரக்கூடிய பிரச்சனைகள் பற்கூச்சம். அதேப்போல் அதிக புளிப்பு சேர்ந்த உணவுகளை உட்கொள்வதாலும் நாளடைவில் வரக்கூடிய தொந்தரவுகள் பல் வலி, பல் கூச்சம்.

சத்தற்ற உணவுகள், சுகாதாரமற்ற பற்கள் போன்றவையும், அதிக சூடு, குளிர்ந்த உணவுகளையும் அதிகமாக உட்கொள்வதாலும் இந்த பாதிப்புகள் ஏற்படுகிறது. இவற்றிலிருந்து எளிமையாக நம்மை பாதுகாக்கும் சில வீட்டுக் குறிப்புகள், மூலிகைக் குறிப்புகளை பார்க்கலாம். பற்கள் உறுதியாக காலை மற்றும் சாப்பிட்ட பின் இரவு படுக்கும் முன் என இரண்டு வேளை பல் துலக்கலாம். வாரம் ஒரு முறை கையால் பல் துலக்குவது நல்லது. ஒவ்வொரு முறையும் ஈறுகளை நன்கு மசாஜ் செய்வது நல்ல பலனை அளிக்கும்.

வாய் கொப்பளிக்க

மாசிக் காயைத் தூளாக்கி சிறிதளவு எடுத்து நீரில் காய்ச்சி அந்த நீரைக் கொண்டு வாய் கொப்பளிக்க ஈறு பலமடையும்.

வேப்பங்குச்சி

பற்களுக்கு வேப்பங்குச்சி கொண்டு அன்றாடம் பற்களை துலக்குவது சிறந்தது. இதனால் பற்களில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்படுவதோடு, உடல் உறுப்புகளுக்கும் பலப்பட உதவுகிறது. இதனால் உடலுக்கும் அன்றாடம் தேவைப்படும் கசப்பு சுவையையும் எளிதாக பெறமுடியும்.

மூலிகை பற்பொடி

பல்துலக்க மூலிகை பற்பொடி பயன்படுத்துவது சிறந்தது. ஈறு வீக்கம், பல் கூச்சம் தீருவதற்கு கருவேலம் பட்டைத் தூள், புளியங் கொட்டை தோல், உப்பு ஆகியவற்றை வீட்டிலேயே நாட்டு மருந்து கடைகளிலிருந்து பெற்று தயாரித்து பல் துலக்கலாம்.

பேய் மிரட்டி

குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது பேதி ஏற்படும். இதனை தடுக்க கிராமங்களில் பேய் மிரட்டி இலையை இன்றும் பயன்படுத்துகின்றனர். இலையே திரியாக எரியும் தன்மைக் கொண்ட பேய்மிரட்டி இலை சாற்றை 5 துளி வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்குக் புகட்ட நல்ல பலனை பெறலாம்.

நுணா பற்பொடி

மஞ்சனத்தி என்ற நுணா காய்களை உப்புடன் அரைத்து வடையாக தட்டி, சாம்பலாக்கி அந்த சாம்பலைக் கொண்டு பற்களை துலக்க பற்களில் வரும் பல பாதிப்புகள் தீரும்.

கண்டங்கத்திரிப் பழம்

கண்டங்கத்திரிப் பழங்கள் பற்களுக்கு வலிமையளிக்கும். அதனால் கண்டங்கத்திரி விதைகளுடன் இருக்கும் பழங்களை நெருப்பில் இட்டு வாயில் புகை பிடிக்க பற்கள் பலப்படும்.

பிரமதண்டு இலை

கிராமங்களில் அதிகளவில் பார்க்கப்படும் பிரமதண்டு இலையை எரித்து சாம்பலாக்கி இந்தச் சாம்பலைக் கொண்டு பல் தேய்த்து வர பல் சொத்தை, பற்களில் இரத்தம் வருதல், பல் ஆட்டம், பல் கரை, பல் சீழ் வடிதல் போன்றவை நிற்கும்.

கொய்யா இலை

கொய்யா இலையைக் கொண்டு பல் துலக்கலாம். கொய்யா இலையை காயவைத்து தூளாக்கி உப்பு சேர்த்தும் பல் துலக்கலாம்.

புதினா பற்பொடி

மிக சுலபமாக காய்ந்த புதினாவை உப்பு சேர்த்து அரைத்தும் பல் பொடியாக பல் துலக்க பயன்படுத்தலாம்.

சுக்கு

பற்கூச்சம் குறைய ஒரு துண்டு சுக்கு வாயில் போட்டுக் கொள்ள பல் கூச்சம் குறையும்.

(3 votes)