மாமருந்தாக சுக்கு
நவீனமும் தகவல் தொழில்நுட்பமும் ஒரு பக்கம் வளர மற்றொரு பக்கம் நமது உணவு முறையும் அதன் அவசியமும் பயன்பாடுகளும் மறைந்து கொண்டுவருகிறது.
இயற்கையையும் மொழியையும் கடவுளாக வணங்கும் தமிழர்கள், அந்தத் தமிழ் கடவுளுடனேயே ஒப்பிடுமளவு உயர்ந்த மருத்துவ குணங்கள் கொண்ட பொருள் நமது சுக்கு.
இஞ்சி காய்ந்தால், சுக்கு. 2000 வருட பாரம்பரியம் கொண்ட சுக்கினை இன்று நம்மவர்கள் மறந்து விட்டது மட்டுமல்லாமல், அது ஏதோ நமது அண்டை மாநிலமான கேரளத்தின் (இன்றும் சுக்கு குடிநீர் குடிப்பதால்) உணவு என்று நினைக்கிறோம்.
இன்றும் நம்மை சுற்றி இருக்கும் அண்டை நாடான சீனாவிலும், அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவும் பாரம்பரியம் மாறாத பழக்கங்களை கொண்டுள்ளது. அதற்காக சுக்கு சீனாவிலிருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலிருந்தும் வந்தவை என்று அர்த்தமில்லை, இன்றும் அவர்கள் அதனை தொடர்ந்து பின்பற்றுகின்றனர் என்பதாகும்.
காலம் காலமாக சுக்கினை தமிழகத்தில் குடிநீராகவும், காபியாகவும் அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. சமீபத்திய புது புது உணவுகள், காபியும், டீயும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஊடுருவ நமது சுக்கு காபியையும், சுக்கு குடிநீரையும் மறந்து விட நோய்களும் வியாதிகளும் நம்மவர்களை படை எடுக்கத் தொடங்கியது.
சுக்கின் சத்துக்கள்
பல வைட்டமின்களையும் தாது உப்புக்களையும் கொண்டுள்ளது சுக்கு. சுக்கில் அதன் காரத்தையும் மருத்துவ குணத்தையும் அளிக்கும் ‘ஜிஞ்ஜெரால்’ என்ற தவிர வேதிப்பொருள் இருக்கிறது. இஞ்சியாக இருக்கும் ஜிஞ்ஜெராலின் அளவை விட சுக்கில் இதன் அளவு அதிகம். அஜீரணத்தையும் உடலில் ஏற்படும் தலைவலி, சளியை போக்கக்கூடியது இந்த சுக்கின் ஜிஞ்ஜெரால்.
‘ஜிஞ்ஜெரால்’ உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், உடலின் ஏற்படும் வீக்கங்கள் வலிகளைக் குறைக்கிறது. பல பல ஆராய்ச்சிகள் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை நமது சுக்கு தடுக்கிறது என்றும் மூட்டு வலி, தலைவலி, பசியின்மை, இரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி, உடல் பருமன் மற்றும் அஜீரணத்திற்கும், சுகப்பிரசவத்திற்கும் சிறந்த மருந்தாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
வெயிலுக்கு
வெயில் காலத்தில் இளநீர், எலுமிச்சை சாறு, சாத்துக்குடி அருந்துவது உடலை பாதுகாக்கும் என்று பலருக்கு தெரிந்திருந்தாலும் அவற்றை அருந்தினால் உடனே தலைவலியும் சளியும் வந்துவிடும் என்று பயப்படுபவர்கள் சுக்கு மல்லி காப்பியையும், சுக்கு குடிநீரையும் அருந்திப்பாருங்கள், பல வருடங்களாக இருந்த இந்த தொந்தரவு பத்தே நிமிடத்தில் இருந்த இடம் தெரியாமல் மறைவதை.
“சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை;
சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை”
என்றும்
“காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்” ஒரு மண்டலம் சாப்பிட கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பான் என்கிறது சித்த மருத்துவம்.
அஜீரணமும் மலச்சிக்கலும் பல நோய்களுக்கு காரணமாக இருக்க இவற்றிற்கு ஏற்ற மருந்தாக நமது சுக்கு இருப்பதால் இதற்கு மிஞ்சிய மருந்தும் இல்லை என்பதாகும்.
கடும்பகலில் சுக்கு
அது மட்டுமில்லாது காலை உணவைக் காட்டிலும் மதிய உணவினை அதிகம் உண்ணும் நமக்கு அதனை சீராக ஜீரணித்து சக்தியைப் பெற இஞ்சியைக் காட்டிலும் சுக்கு அதிகம் பயன்படுவதால் கடும்பகலில் சுக்கு என்று நம் முன்னோர் அறிவியலுடன் கூறிச் சென்றுள்ளனர்.
சுக்கு குடிநீர்
சுக்கு குடிநீர்.. சுக்கினை தட்டிபோட்டு நீருடன் கொதிக்க விட்டு அருந்துவது.
சுக்கு காபி
சுக்கு காபி என்பது சுக்குடன் தனியாவை (நாட்டு மல்லியை) சேர்த்து தட்டிபோட்டு நீருடன் கொதிக்க விட்டு கருப்பட்டி சேர்த்து அருந்துவது.
இவற்றை அன்றாடம் அருந்த உடல் பொலிவாவதுடன், உடல் பருமன், தலைவலி முதல் புற்று நோய் வரை உள்ள நோய்களுக்கு மாமருந்தாகும்.