மழைக் காலத்தில் சளி, இருமல் தொந்தரவுகளால் குழந்தைகள் துன்புறுகின்றனர். அதோடு நெஞ்சில் கபம் சேரச் சேர பிரச்சனை தீவிரமாகிறது. ஆங்கில மருந்து மாத்திரைகளால் தாற்காலிக நிவாரணம் கிடைத்தாலும் சளியை உடலிலிருந்து வெளியேற்றாமல் இருப்பதால் பிரச்சினை அவ்வப்போது தலைதூக்கி தொல்லை கொடுப்பதுடன் நாள் பட்ட வியாதிகளுக்கும் அது வழிவகுக்கிறது. இந்த தொந்தரவுகளை குணப்படுத்த சிறந்த திரவ உணவு இந்த சுக்கு மல்லி காப்பியே.
சுக்கு மல்லி காபி பொடி
1/2 கப் சுக்கு
1/4 கப் மல்லி
இரண்டு சிட்டிகை மிளகு
இரண்டு சிட்டிகை சீரகம்
கலந்து பொடித்துக் கொள்ளவும்.
சுக்கு மல்லி காபி தயாரிக்க
காபி தயாரிக்க தேவையான பொழுது கொஞ்சம் தண்ணிர் கொதிக்க வைத்து இந்த பொடியை 1 ஸ்பூன் அளவில் சேர்த்து வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்க்க சுவையான சுக்கு மல்லி காபி தயார்.
இந்த பொடி தயாரிக்கும் பொழுது சதகுப்பை, திப்பிலி, சித்தரத்தை, தேசாவரை குச்சி, அதிமதுரம், நன்னாரி, ஏலக்காய், ரோஜா மொக்கு, ஓமம், இலவங்கம், கருங்காலி, செஞ்சந்தனம், ரோஜா இதழ், செம்பருத்தி, ஜாதிக்காய், குங்குமப்பூ, ஜாதிப் பத்திரி, வெட்டிவேர், வாய் விளங்கம், பதிமுகம், இருவேலி, துளசி, வெள்ளருகு, ஆரஞ்சுத் தோல் போன்ற மூலிகை மருந்துகளையும் காய வைத்து அளவு பார்த்து சேர்த்தால் பருகும் பானத்தில் ஆரோக்கிய போனசும் கிடைக்கும்.
சுக்கு மல்லி காபி
இருமல், சளி என பல தொந்தரவுகளுக்கு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த பானம் இந்த சுக்கு மல்லி காபி.
⏲️ ஆயத்த நேரம்
1 mins
⏲️ சமைக்கும் நேரம்
3 mins
🍴 பரிமாறும் அளவு
2
🍲 உணவு
பானம்
தேவையான பொருட்கள்
- 2 ஸ்பூன் சுக்கு மல்லி காபி பொடி
- 2 ஸ்பூன் கருப்பட்டி / வெல்லம்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அதனில் 2 ஸ்பூன் சுக்கு மல்லி காபி பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
- நன்கு கொதி வந்த பின் அடுப்பை அணைத்து அதனில் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்க்க சுவையான சத்தான உடலுக்கு சுறுசுறுப்பை தரும் பானம் தயார்.