பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மிக முக்கிய முதல் உணவு. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க சில வழிகளையும் தெரிந்துக் கொண்டுள்ளோம். மேலும் பிறந்தது முதல் ஐந்தாறு மாதங்களுக்கு தாய்ப்பாலே போதுமானது. பிறந்த குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆறு மாதத்திற்குப் அதன் பின் திரவ திட உணவுகளை ஒவ்வொன்றாக வாரத்திற்கு ஒரு உணவு என பழக்கப்படுத்த வேண்டும்.
ஆறு மாதங்களிலேயே இரவு தூங்கியப்பின் தாய்ப்பால் கொடுப்பதை குறைத்து அல்லது நிறுத்தி மீண்டும் மறுநாள் காலையிலேயே தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதனால் தாயின் தூக்கம் மற்றும் குழந்தையின் இரவு தூக்கம் சீராகும்.
ஆறு ஏழு மாதத்திற்குப் பின் ஒவ்வொரு வேளையாக தாய்ப்பால் கொடுப்பதை குறைத்துக் கொண்டே வர எளிதாக ஒன்றரை முதல் இரண்டு மூன்று வயதில் தாய்ப்பாலை நிறுத்தலாம். கட்டாயம் ஒரு வயது வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். பிறந்த குழந்தை அதன் வயிற்றுக்கு தகுந்தார்ப்போல் பத்து இருபது மில்லி அளவு உட்கொள்ளும். போகப்போக அந்த அளவு அதிகரிக்கும்.
தாய்ப்பால் நிறுத்தும் சமயத்தில் குழந்தை மட்டுமல்லாமல் தாயும் சில வழிகளை பின்பற்ற அதிக வேதனை, வலி, பால் கட்டுதல் இன்றி தாய்ப்பாலை நிறுத்தலாம். அதற்கான சில வழிகளை பார்க்கலாம்.
தாய்ப்பாலை நிறுத்த நினைக்கும் தாய் தன் குழந்தையை விட்டு சற்று தள்ளி இருக்க வேண்டும். தாய்ப்பாலுக்காக ஏங்கும் குழந்தையின் ஏக்கம், அழுகையை தாய் பார்க்க உடனே தாய்ப்பால் சுரக்கும்.
அதனால் கட்டாயம் சற்று தள்ளி இருக்க வேண்டும்.இந்த காலத்தில் அது சாத்தியமா? யார் குழந்தையை பார்த்துக்கொள்வது? நாங்கள் வெளிநாடுகளில் அல்லது வெளிஊர்களின் இருக்கிறோம்.. என்ற நிலையிருந்தால் அதிகபட்சம் குழந்தைக்கு தாய்ப்பால் நினைவே வராத அளவு வேடிக்கை காட்டுவது, கவனத்தை திசை திருப்புவது, குழந்தை விரும்பும் உணவை அளிப்பது அதோடு குழந்தை தாயின் மார்பகங்களை பார்க்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் நிறுத்த நினைக்கும் தாய் கீரைகள், நார்சத்துள்ள உணவுகள், நீர் சத்துள்ள உணவுகள், பழங்கள், பால், தண்ணீர் ஆகியவற்றை சில நாட்கள் தவிர்த்து அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும்.
வலி அல்லது பால் கட்டிக் கொண்டால் எக்காரணத்தைக் கொண்டும் அந்த பாலை பிழிந்து வெளி எடுக்கக் கூடாது. இவ்வாறு செய்தால் மேலும் மேலும் பால் சுரப்பு அதிகரிக்கும்.
அதிகளவில் மல்லிப்பூக்களின் நறுமணத்தை சுவாசிப்பதும், மல்லிப்பூவை மார்பகத்தில் வைத்துக் கட்டவும் வேண்டும். இவ்வாறு செய்வதால் மூன்று தினங்களில் தாய்ப்பால் சுரப்பு நின்று விடும்.
துவரம் பருப்பு அல்லது உளுந்தம் பருப்பை சிறிதளவு எடுத்து நீரில் ஊறவைத்து பன்னீர் அல்லது நீர் விட்டு மைய அரைத்து மூன்று நாட்கள் இரண்டு அல்லது மூன்று வேளை மார்பகங்களில் பற்று போட பால் சுரப்பு வற்றி நின்றுவிடும்.
தேங்காய்ப் பூவை வதக்கி மார்பில் கட்டவும் பால் சுரப்பு நிற்கும்.
இந்த வழிகளை மூன்று நான்கு நாட்கள் பின்பற்றினாலே போதும் இயற்கையான முறையிலும் வலி வேதனை இன்றியும் தாய்ப்பால் சுரப்பை நிறுத்தி விடலாம்.