Kambu, Bajra, Pearl Millet

முளைக்கட்டிய கம்பு மாவு

பொதுவாக கம்பு என்றவுடன் அனைவரின் நினைவிலும் வருவது கம்பங் களி, கம்பங் கூழ் தான். அவை மட்டும் தானா,  இந்த நாட்டுக் கம்பில் விதவிதமான சுவையான பல பாரம்பரிய மற்றும் நவீன உணவுகளையும் தயாரிக்கலாம்.

கம்பு உணவுகள்

கம்பு இட்லி, கம்பு  தோசை, கம்பு அடை, கம்பு உப்புமா, கம்பு புட்டு, கம்பு வடை, கம்பு சட்னி, கம்பு ஜூஸ் / முளைகட்டிய கம்பு பால் என்று பல பலகாரவகைகளில் தொடங்கி கம்பு சாதம், கம்பு பிஸிபேளாபாத், கம்பு தயிர் சாதம், கம்பு பிரியாணி, கம்பு முறுக்கு, கம்பு லட்டு என கம்பில் செய்யும் உணவுகளை பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம்.

இவற்றில் கம்பங் களி, கம்பங் கூழ், கம்பு அடை, கம்பு புட்டு, கம்பு வடை என பல பல கம்பு உணவுகளுக்கு கம்பு மாவு தேவை அவற்றை வீட்டிலேயே அரைத்து வைத்துக் கொண்டால் தேவைகேற்ப விதவிதமான உணவுகளை தயாரித்துக் கொள்ளலாம்.

நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக நின்ற இரண்டு மிக முக்கியமான சிறுதானியங்களில் ஒன்று நம் நாட்டுக் கம்பு. நாட்டுக் கம்பு, ஹைபிரிட் கம்பு எது என தெரிந்து கொண்டு கம்பின் சத்துகளையும் தெரிந்து கொண்டு தரமான நாட்டுக் கம்பைக் கொண்டு எவ்வாறு மாவு அரைப்பது என பார்ப்போம்.

பொதுவாக கடைகளில் கம்பு மாவாக இன்று கிடைக்கிறது. ஆனால் அவற்றை விட வீட்டில் அதிலும் நாட்டுக் கம்பில் நாம் தயாரிக்கும் முளைக்கட்டிய கம்பு மாவின் சுவையும் சத்துக்களும் மிக மிக அதிகம்.

கம்பு மாவு

கம்பை நேரடியாகவும் மாவாக அரைக்கலாம் (கம்பு மாவு) அல்லது முளைக்கட்டியும் கம்பு மாவு அரைக்கலாம். இதில் எவ்வாறு கம்பை முளைக்கட்டி கம்பு மாவு அரைப்பது என பார்ப்போம்.

வாங்கிய கம்பினை முதலில் தண்ணீரில் லேசாக ஊறவைத்து 10 முறையாவதும் கழுவவேண்டும். அதன் மேலுள்ள லேசான உமி, தூசி, அழுக்கு போக கழுவி எடுக்க வேண்டும். கழுவியபின் இந்த கம்பினை பத்து மணி நேரம் சுத்தமான நீரில் ஊறவைக்க வேண்டும்.

பத்து மணி நேரம் ஊறிய பின் பானை போல் அடி உருளையாக இருக்கும் பாத்திரத்தில் போட்டு தண்ணீரில் நன்கு அரித்து அதில் கலந்துள்ள கல் நீக்க வேண்டும். கற்கள் நீங்கிய பின் நன்கு தண்ணீரை வடிகட்டி ஒரு பருத்தி துணியில் அல்லது பருத்தி பையில் சேர்த்து காற்றோட்டம் உள்ள இடத்தில் முளைகட்ட வைத்து விடவேண்டும்.

பத்து மணி நேரத்தில் கம்பு நன்கு முளைத்திருக்கும். பின் அதனை மூன்று முதல் ஐந்து நாட்கள் வெயிலில் காயவைத்து மிஷினில் கொடுத்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த மாவை மாவு சலிக்கும் சன்னமான துளையிருக்கும் சல்லடையில் சலிக்க வேண்டும். இந்த கம்பு மாவினை ஒரு எவர்சில்வர் டப்பாவில் காற்றுபோகதவாறு நன்கு அழுத்தமாக நிரப்பி வைத்துக் கொள்ளலாம்.

நன்கு வெயிலில் காயவைத்து அரைத்த இந்த கம்பு மாவினை ஆறு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம். அவ்வப்பொழுது தேவைக்கேற்ப ஈரமில்லாத கரண்டியைப் பயன்படுத்தி தேவையான மாவை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மாவைக் கொண்டு கம்பு கூழ், கம்பு களி, கம்பு புட்டு, கம்பு அடை, கம்பு கஞ்சி, கம்பு பணியாரம், கம்பு தோசை என பல பல உணவுகளை தயாரிக்கலாம்.

(1 vote)