குழந்தைகளுக்கு ஏற்ற கீரைகள்

கீரைகள் பொதுவாக அனைவருக்குமான சிறந்த உணவு. அன்றாடம் ஏதேனும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உடலுக்கு தேவையான சத்துகளை அளித்து இரத்த சோகை வராமலும் நம்மை பாதுகாக்கும். கீரைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது. கீரைகளில் இந்தனை வகைகளா? என்ற பகுதியில் நம்மை சுற்றி இருக்கும் கீரைகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

அவற்றில் பல கீரைகள் நோய்களுக்கு மருந்தாகவும், சிறந்த மூலிகைகளாகவும் செயல்படுகிறது. உதாரணத்திற்கு மூட்டுவலிக்கு மிக சிறந்த முடக்கறுத்தான் கீரை, வாதத்திற்கு சிறந்த நச்சு கொட்டை கீரை, கல்லீரலுக்கு சிறந்த கீழாநெல்லிக் கீரை என கீரைகள் குறிப்பிட்ட நோய்க்கும் மருந்தாக உள்ளது. இந்த வரிசையில் குழந்தைகளுக்கான கீரைகள் என்னென்ன என பார்க்கலாம்.

ஆண், பெண் குழந்தைகளுக்கு அவர்கள் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை சில கீரைகள் சிறப்பாக செய்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கும் இந்த கீரைகள் நல்ல பலனை அளிக்கிறது.

வல்லாரைக் கீரை

குழந்தைகளுக்கு அவசியமான நினைவாற்றலை அதிகரிக்கும் சிறந்த கீரை வல்லாரைக் கீரை. கீரைக்கு பதிலாக கீரை முட்டாய்கள், கீரை சார்ந்த பல பொருட்கள் சந்தைகளில் விற்பனைக்கு உள்ளது. இன்று பல பெற்றோர்கள் இவற்றை பாசமாக தங்கள் குழந்தைக்கு நினைவாற்றல் அதிகரிக்க இந்த பொருட்களை வாங்கி கொண்டுப்பதுண்டு. ஆனால் இவற்றால் எந்த சத்துக்களையும் பெறமுடியாது. சந்தைகளில் வல்லாரைக் கீரை பொதுவாக கிடைக்கும் அவற்றை வாங்கி சுத்தம் செய்து துவையல், சாதம், கூட்டு என பாசிப்பருப்பு, உளுந்து, துவரம்பருப்பு சேர்த்து தயாரித்துக் கொடுக்கலாம். இது சிறந்த பலனை அளிக்கும்.

முருங்கைக் கீரை

சத்துக்களின் கூடாரம் என்று அழைக்கப்படும் கீரை முருங்கைக் கீரை. மல்டி வைட்டமின் மாத்திரைகள் அளிக்கும் அனைத்து சத்துக்களும் இந்த கீரையில் உள்ளது. குழந்தைகளுக்கு தேவையான ஒவ்வொரு சத்துக்களையும் அழகாக வைத்திருக்கும் கீரை இது. அளவோடு இளங் கீரைகளை பக்குவமாக சமைத்து கொடுக்க நல்ல பலனை குழந்தைகள் பெறுவார்கள்.

கற்பூரவள்ளி

சளி, இருமல் என அடிக்கடி குழந்தைகளை தாக்கும் தொந்தரவிற்கு சிறந்த கீரை கற்பூரவள்ளி. தண்ணீர், சாறு, ரசம், சூப் என ஏதேனும் ஒன்றை குழந்தைகளுக்கு அவ்வப்பொழுது கொடுக்கலாம். நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும்.

தூதுவளை

கர்பூரவள்ளியைப் போல் சளி, இருமலுக்கு சிறந்த கீரை தூதுவளை. குழந்தைகளை சிறுவயதிலிருந்தே பச்சையாக ஓரிரு தூதுவளை இலைகளை எடுத்து முள் நீக்கி பொட்டுக்கடலை சேர்த்து உண்ணச் சொல்லி பழக்கப்படுத்தலாம். தூதுவளை துவையலாகவும் செய்து கொடுக்கலாம்.

மூக்கிரட்டை

குழந்தைகள் மருந்து என்று கிராமப்புறங்களில் சொல்லும் மருந்தாக மூக்கிரட்டை உள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் பல தொந்தரவுகளுக்கு அற்புதமாக உதவும் கீரை மூக்கிரட்டை கீரை. உடல் உறுப்புகளையும், வயிற்று நோயையும் விரைவில் அகற்றும்.

அரைக்கீரை

சாதாரணமாக கிடைக்கும் கீரைகளில் ஒன்று அரைக்கீரை. குழந்தைகளுக்கு தேவையான பல சத்துகளைக் கொண்ட கீரை.

இந்த கீரைகளை பாசிப்பருப்பு, உளுந்து அல்லது துவரம்பருப்பு சேர்த்து தயாரித்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து கொடுக்க குழந்தைகள் உடல் பலப்படும், நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.

(1 vote)

1 thought on “குழந்தைகளுக்கு ஏற்ற கீரைகள்

  1. swamy

    5 stars
    useful information

Comments are closed.