மண் – வீட்டுத் தோட்டம்

‘சரியான மண்ணு’, ‘மண்ணு மாதிரி உக்காந்திருக்க’, ‘மண்ணாங்கட்டி’ இப்படியெல்லாம் யாராவதும் திட்டுவதை கேட்டிருப்போம். இவ்வாறு இளக்காரமாக கூறப்படும் மண் நம்  ஒவ்வொருவரின் ஆரோக்கிய வாழ்விற்கும் அவசியமானதாகும். மண்.. இயற்கையின் கொடைகளில் மிகமுக்கியமானது. உலகின் உயிரினங்களின் வாழ்விற்கு  காரணமாகும் நீர், காற்றுடன் மண்ணும் ஒன்று. 

மண்ணை திட்டுபவர்களுக்கு மண்ணின் அருமை தெரியாமல் இருக்கலாம். மண்ணை நேசிப்பவர்களுக்கு மண்வாசனை வரப்பிரசாதமாகும். எல்லாமே மண்தான் இந்த உலகில். ஒன்று மண்ணிலிருந்து வந்திருக்கும் அல்லது மண்ணுக்குள் போய்விடும். மனிதனின் உடல் அன்னத்தாலானது, அந்த அன்னம் மண்ணிலிருந்து பெறப்படுகிறது. மனிதனின் உடலும் மண்ணாலானதே, அதனால் தான் என்னவோ மனிதனை மண் என்றெல்லாம் வழக்கில் அழைக்கின்றனர்.

உயிருள்ள மனிதனுக்கு உணவைக்கொடுக்கும் மண்ணிற்கும் உயிருள்ளது. இதுதான் மண்ணிற்கும் மணலிற்கும் உள்ள வேறுபாடு

உயிருள்ள மனிதனுக்கு உணவைக்கொடுக்கும் மண்ணிற்கும் உயிருள்ளது. இதுதான் மண்ணிற்கும் மணலிற்கும் உள்ள வேறுபாடு

உணவு உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கும் மண்ணில் பல பல சத்துக்கள் உள்ளது. உணவில் மாவுசத்து, புரதம், நார்ச்சத்து, கொழுப்பு போன்ற சத்துக்கள் எந்தளவிற்கு அவசியமாகிறதோ அதைவிட தாது உப்புக்கள் அவசியப்படுகிறது. தாது உப்புக்கள் உடலுக்கு மிக குறைந்த அளவே தான் தேவையென்றாலும் அந்த அளவு சீராக இல்லாதபட்சத்தில் புரதத்தை கூட உடல் சீராக உட்கிரகிப்பதில்லை. விளைவு பல பல நோய்களும், ஹார்மோன் குறைபாடுகளும். மண்ணே நாம் உண்ணும் காய்கறி, கீரைகள், பழங்கள் ஆகியவற்றின் சுவை, சத்துக்கள், மருத்துவகுணங்கள், தன்மை போன்றவற்றிற்கு காரணமாகிறது.

நமது ஆரோக்கியமும் அதற்கு தேவைப்படும் சத்தான உணவும் மண்ணின் தன்மையைப் பொறுத்தது. இன்றைய நிலைமையோ இந்தியாவில் உள்ள மண் மலட்டு தன்மையைப் பெற்றுவருகிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக விவசாயம் செய்த நமது இந்திய மண் உயிரற்ற மண்ணாகவும் விவசாயம் செய்ய தகுதியற்ற மண்ணாகவும் மாறிவருகிறது என்கிறது ஆய்வு. மேலும் மண்ணில் சத்துக்கள் குறைபாடும், கரிம குறைபாடும் இன்று அதிகரித்துவருகிறது. இவற்றிற்கு முக்கிய காரணம் மண்ணில் அதிகமாக கொட்டப்படும் இரசாயனங்களாகும். தொடர்ந்து ஒரு நிலத்தில் (மண்ணில்) ஒரே வகையான பயிர்களை விளையவைப்பதும், மண்ணை இயற்கையான முறையில் பக்குவப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் இரசாயனங்களை கொட்டி பயிர்களை விளையவைப்பதும் மண்ணின் உயிர்தன்மையை அழிக்கிறது. 

மண்வாசனை கூட வராததற்கும் இதுவே காரணமாகிறது. உழவனின் நண்பன் என்று கூறப்படும் மண்புழுக்கள் இரசாயனங்கள் இட்ட மண்ணில் இன்று காணப்படுவதில்லை. இவையெல்லாம் நவீன வளர்ச்சி என்று மார்தட்டிக் கொண்டோமானால் அதற்கும் நாம் தான் பலியாகிக்கொண்டிருக்கிறோம்.

சத்தற்ற, மண்புழுக்கள் கூட வாழ தகுதியற்ற நிலத்தில் விளையும் உணவுகளை வேறு வழியில்லாமல் உண்டு காலம் முழுதும் நோயாளி என்ற பெயரில் வாழ்க்கையை வாழாமல் நகர்த்துகிறோம். மண் சுரண்டப்படுவதாலும், கெடுவதாலும் பாதிக்கப்படப்போவது நாமும், நம்மை சார்ந்தவர்களும் தான்.

மண்ணில்லாத விவசாயம்

இந்த நிலையில் மண்ணில்லாத விவசாயம் விவசாயத்தில் புது ட்ரெண்டாக உள்ளது. மண் உயிரற்று போனாலே சத்துக்குறைபாடும், உணவை உடல் உட்கிரகிக்கும் குறைபாடும் மனிதனுக்கு ஏற்பட அதனால் பல பல நோய்கள் உருவாகிறது.

இன்னும் மண்ணில்லாத விவசாயம்.. அதற்கு தேவைப்படும் சத்துக்களை செயற்கையாக அளிக்க அதிலிருந்து வரும் காய்களும், கீரைகளும் எந்த விதத்தில் சத்தானதாக இருக்கும்..?  செடிகள் அதற்கு தேவையானவற்றை தானாக காலம், நேரம், தட்ப்பவெப்பம் போன்றவற்றை கருத்தில் கொண்டு மண்ணிலிருந்து எடுத்துக்கொள்ள அவை மட்டுமே நமக்கும் சத்தானதாக இருக்கும்.

வேர்கள்.. உலக இரகசியங்களில் ஒன்றான இவை மண்ணுக்கு மேல் வளரும் சில காட்டுச்செடிகள் நமக்கு ஒன்றை கற்றுத் தருகிறது. அவை மண்ணிற்கு மேல் மூன்று நான்கு அடிகள் மட்டுமே இருக்கும், ஆனால் மண்ணுக்கு அடியில் பல மையில் தூரத்திற்கு அவற்றின் வேர்கள் சென்று தனக்கு தேவையான உணவு, நீர், தாதுக்களை கொண்டு வருகிறது. அதுதான் இயற்கை. அவற்றிற்கு மட்டும்தான் தெரியும் எப்பொழுது எது எவ்வளவு தேவை என்பது.

நாம் இந்தந்த சத்துக்கள் எல்லாம் செடி வளர தேவை என்று கருதி அவற்றை வாரி வாரி மண்ணில் இறைக்க மண்தான் கெட்டதே தவிர உணவு உற்பத்தியோ (இந்தியா பல உணவு தானியங்களை இன்று வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.. பொன் விளைந்த பூமியில் இன்று விவசாயம் பொய்த்துப்போகிறது. இதற்கு மழை பொய்த்தது மட்டுமே காரணம் இல்லை, மழையை தடுக்கும் புவிவெப்பமயமாக்கல், அவற்றை ஏற்படுத்தும் இரசாயனங்களும் தான் காரணம்) அதனை உண்ட மனிதனின் ஆரோக்கியம் மேம்படவில்லை.

இது மட்டுமல்ல மரங்களை வெட்டுவது, மண் அரிப்பு, மணல் கொள்ளை என மண் பல விதங்களில் இன்று மாசடைகிறது.
மண்ணை மேம்படுத்த அன்று நம்மவர்கள் பயிற்சுழற்சி முறை, அறுவடைக்கு பின் சில மாதங்கள் நிலத்தை எதுவும் விதைக்காமல் விட்டுவைப்பது, மண்ணை வளப்படுத்த சில பயிறுவகைகளை விதைப்பது, தொழுவுரம், மக்குஉரங்களை போட்டு மக்கவைப்பது என்றெல்லாம் செய்தனர்.

வீட்டு தோட்டத்திற்கு மண்ணை எவ்வாறு தயாரிக்கலாம் என்று தெரிந்துக்கொள்ள – மண் கலவை தயார் செய்யும் முறை.