வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதி தூங்கியே கழிக்கிறோம். உண்மை தான், இந்த தூக்கம் மிகவும் அவசியமானது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை சீரான தூக்கம் இருக்க, நாம் வாழும் வாழ்நாளில் பல விந்தைகளை செய்ய முடியும். சீரான இரவுத் தூக்கமே ஒவ்வொரு நாளுக்கான உத்வேகத்தையும் புத்துணர்வையும் அளிக்கக்கூடியது. தூக்கத்தில் மிக முக்கியமானது சீரான தூக்கமும், சரியான தூக்கமும், சரியான நேரத்தில் தூங்குவதுமாகும்.
சீரான தூக்கம்
சீரான தூக்கம் என்பது எந்தவிதமான இடர்பாடுகளும் இல்லாமல் எந்தவிதமான தொந்தரவுகளும் இல்லாமல் இரவு படுத்தவுடன் உறங்கி காலையில் எழுந்திருப்பது என்ற முறையில் இருக்கக்கூடிய நல்ல உறக்கம். இவ்வாறான உறக்கம் இருக்க காலையில் எழும்பொழுது உடல் நல்ல புத்துணர்வுடனும், உற்சாகத்துடனும் இருக்கும்.
சரியான தூக்கம்
சரியான தூக்கம் என்பது சரியான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு தூங்குவது. இது மிகவும் முக்கியமானது நம் படுக்கக் கூடிய விரிப்பு, படுக்கக் கூடிய இடம் ஆகிய அனைத்துமே மிக முக்கியமானது. இதனை இன்னும் விரிவாக பார்ப்போம்.
மூன்றாவது, சரியான நேரத்தில் தூங்குவது
சரியான நேரத்தில் தூங்குவது என்பது இரவு 10 மணிக்கு படுக்கைக்கு செல்வதும் காலையில் நான்கு மணி அல்லது ஐந்து மணிக்குள் படுக்கையை விட்டு எழுவதுமாகும். சரியான நேரத்தில் தூங்க பழகிக் கொண்டாலே போதும் பல விஷயங்களை இந்த உலகில் நாம் செய்ய முடியும், அது மட்டும் இல்லாமல் இந்த பிரபஞ்ச சக்தியையும் எளிதாக நாம் பெறவும் இந்த நேரம் நமக்கு உதவக் கூடியதாக இருக்கும்.
சரி சீரான தூக்கத்தை பெறுவதற்கு சரியான முறையில் நாம் தூங்குவதும், சரியான நேரத்தில் நாம் தூங்க செல்வதும் அவசியமானது. சரியான முறையில் தூங்குவதற்கான சில முன்னேற்பாடுகளை செய்து கொள்வது நல்லது. அவற்றை இனி பார்போம்.
- சமதளத் தரையில் அல்லது மரக்கட்டிலில் பாய் அல்லது கார்பெட் போன்ற ஒரே விரிப்பை மட்டும் படுக்கையாக விரித்து உறங்குவது சிறந்தது. பிளாஸ்டிக் பாயை பயன்படுத்தாமல் கோரப்பாய் போன்ற இயற்கை பாயை பயன்படுத்துவது சிறந்தது. இது சீரான நல்ல ஒரு தூக்கத்தை அளிக்க மிகச்சிறந்த ஒரு வழியாக இருக்கும்.
- ரப்பர் மெத்தைகள் உடலுக்கு மிகவும் கெடுதல் கொடுக்கக்கூடியது.
- படுக்கையின் சுத்தம் மிகவும் அவசியமானது. சுத்தமான விரிப்புகளை விரித்து நாம் படுக்கவேண்டும்.
- உறங்கும் இடத்தில் சிறிதளவாவதும் காற்றோட்டம் இருப்பது அவசியமானது. ஜன்னலை திறந்து வைத்து தூங்குவது நல்லது.
- கொசு பிரச்சனை இருக்கும் இடங்களில் கொசு வலைகளை பயன்படுத்தலாம் அல்லது கொசு வலைக்குள் நாம் படுத்து உறங்கலாம்.
- குளிருக்கு தகுந்தபடி போர்த்திக் கொள்ளலாம். முகத்தை மூடி தூங்க கூடாது. குறுக்கி மடக்கி படுத்தால் சுவாச அளவு குறையும். அதனால் கை கால்களை நீட்டி படுப்பது சிறந்தது.
- இடது புறமாக படுப்பது தான் நல்லது. வலதுபுறம் ஒருக்களித்துப் படுத்தால் அது உடலுக்கு கெடுதலை கொடுக்கும்.
- உறங்குவதற்கு முன் சில நிமிடங்கள் ஆழ்ந்த சுவாசம் செய்யலாம். அவசியம் இருக்கும் பொழுது கண்களுக்கும், அடிவயிற்றுக்கும் ஈரத்துணி பட்டி லேசாக போட்டுக்கொள்வது நல்லது. கண் எரிச்சல் நீங்கும்.
இரண்டு மணி நேரத்திற்கு முன்
- இரவு உணவிற்கும் உறக்கத்திற்கும் இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் இடைவெளி இருத்தல் நலம். இரவு உணவிற்குப் பின் உடனே உறங்குவது கூடாது.
- இரவு தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே தொலைக்காட்சி பார்ப்பது, தொலைபேசி பார்ப்பது போன்றவற்றை தவிர்த்து விடவேண்டும். இவற்றால் சீரான தூக்கத்தை நாம் இழக்க நேரிடும். இடப்பட்ட நேரத்தில் நல்ல ஒரு இதமான இசை, பாடல்களை கேட்கலாம் அல்லது மனதிற்கு பிடித்த விஷயங்களைப் பற்றி சிந்திக்கலாம், பேசலாம்.
பற்களை சுத்தம் செய்ய
- ஆலம் விழுது, கருவேலம் குச்சி, கொய்யா இலை, கடுக்காய் போன்றவற்றை கொண்டு பற்களை துலக்கி வாயை நன்றாகக் கொப்பளித்து விட்டு உறங்கச் செல்வது மிகவும் நல்லது.
தூங்க செல்லும் முன்
- உறங்கும் பொழுது தளர்ச்சியான மெல்லிய உடைகளுடன் காற்றோட்டமான இடத்தில் உறங்குதல் வேண்டும்.
- உறங்குவதற்கு முன் உடல் முழுவதையும் தானே சில நிமிடம் லேசாக நீவி விடுவது நல்லது.
தியானமும் ஒளியும்
- நாம் உறங்கும் இடத்தில் சிறிய ஒரு ஒளி இருக்குமாறு பார்த்துக்கொள்ளவது சிறந்தது.
- உறங்குவதற்கு முன்னும், காலையில் உறக்கத்திலிருந்து எழுந்தவுடனும் சிறிது நேரம் தியானம், இறை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
பகல் தூக்கம் நல்லதா?
- பகலில் படுக்கக்கூடாது என்று விதி ஒன்றும் இல்லை. உறக்கம் வந்தால் எந்த நேரமாயினும் எந்த இடமாயினும் சிறிது உறங்கி விட வேண்டும். பகலில் வரும் NAP (பகல் தூக்கம் நல்லதா?) என்ற சொல்லக்கூடிய சிறு உறக்கத்தைப் பற்றியும் அதனுடைய அவசியத்தைப் பற்றியும் அதனுடைய நன்மை நன்மைகளையும் தெரிந்து கொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம்.
நல்ல ஒரு இரவு உறக்கம் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். உடலுக்கும், மனதிற்கும் தெம்பை அளிக்கும்.