அதிக இரசாயனங்கள் கலந்த அழகு சாதன பொருட்கள், பூச்சுக்கள், நச்சுக்கள் இரசாயனங்கள் கலந்த உணவுகள், மலச்சிக்கல் என பல பல காரணங்களால் தோலில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை மறைக்க மீண்டும் மீண்டும் இரசாயனங்கள் கலந்த மருந்துகளையும், பூச்சுகளையும் பயன்படுத்த தொந்தரவுகள் அதிகமாகும். அதனால் இயற்கை முறையில் வீட்டிலேயே சில வீட்டு வைத்திய முறைகளை மேற்கொள்ள சருமம் பாதுகாக்கப்படுவதுடன் எளிமையாகவும் விரைவாகவும் தோல் நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.
தேமல், தோல் கரும்புள்ளிகள் மறைய
கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை இவற்றை பாலில் அரைத்து முகத்தில் சுருக்கம் உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தேமல் கரும்புள்ளி நீங்கும்.
அக்கி அரிப்பு குணமாக
வேப்பிலை, நெல்லிமுள்ளி இரண்டையும் அரைத்து வெண்ணெயுடன் கலந்து பூசினால் குணமாகும்.
வேனல் கட்டி கரைய
எட்டி இலை கொழுந்தை எடுத்து சட்டியில் போட்டு வதக்கி மை போல அரைத்து அதே அளவு வெண்ணெயை அத்துடன் கூட்டி கட்டியின் மேல் கனமாகப் பூசி விட்டால் வேனல் கட்டி கலைந்து விடும்.
மேக நோய் குணமாக
சீந்தில் கொடி பொடி, அமிர்தவல்லி தண்டை சீவி உலர்த்தி பொடியாக்கி, கடுக்காய், நெல்லிக்காய், அதிமதுரம், சுக்கு, மிளகு பொடியாக்கி நாற்பத்தி ஒரு நாள் சாப்பிட குணமாகும்.
வெண்புள்ளி குறைய
குன்றின்மணி சாறுடன், வெண்கொடி வேலன் வேரும் சேர்த்து அரைத்து அதனை வெண்புள்ளி உள்ள இடங்களில் தடவி வர குணமாகும்.
உதட்டில் வெள்ளை மாற
வில்வமரத்தின் காயை உடைத்து அதன் மேல் ஓட்டை தாய்ப்பால் விட்டு தேய்க்க மைபோல் வரும். அந்த மையை உதட்டின் மீது தடவி வர வெள்ளை மாறும்.
தேமல் குணமாகும்
நாயுருவி இலையுடன், ஜாதிக்காயை வைத்து மை போல் அரைத்து தேமல் மீது தடவி வர மறையும்.