6-months-baby-morning-food, complementary food for baby tamil

ஆறு மாத குழந்தைக்கு தர வேண்டிய மதிய உணவு

ஆறு மாதங்களுக்குப் பின் முதலில் காலை உணவை இரண்டு வாரங்களுக்குப் பழக்கப்படுத்தி விட்டு பின் மதிய உணவை துவங்கலாம். இவ்வாறு வீட்டு உணவுகளை குழந்தைக்கு தொடங்குவதாலும் பழக்குவதாலும் நமது உணவின் சுவை பழக்கப்படும். அதேப்போல் மென்று உண்ணும் பழக்கமும் நமது குடும்பத்தின் தனிப்பட்ட சுவையும் ஆழ்மனதில் பதியும். அதிலும் செயற்கை சுவையூட்டிகள் இல்லாத உணவுகளால் அந்த உணவின் தன்மை, சுவை, செரிமானமாகும் முறை ஆகியவை குழந்தையின் மூளையில் பதியப்படும். காலத்திற்கும் மறக்காத சுவையையும், சத்துக்களையும் நாம் எளிதில் இதனால் பெறமுடியும்.

எத்தனை மணிக்கு குழந்தைக்கு மதிய உணவை ஊட்ட வேண்டும்?

மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிக்குள் குழந்தைக்கு சாதம் ஊட்ட வேண்டும்.

6-months-baby-afternoon-food, complementary food for baby tamil

முதல் வாரம் என்ன கொடுக்க வேண்டும்

முதலில் ஒரு வாரம் சாதத்தை நன்கு குழைய வேக வைத்து கைகளால் மசித்து அதனுடன் சிறிது உப்பு அதனுடன் சிறிது ஆறிய வெந்நீர் அல்லது  பாசி பருப்பு வேகவைத்த தண்ணீர் அல்லது இளம் ரசம் மட்டும் சேர்த்து ஊட்டலாம்.

ஒரு வாரத்திற்குப் பின் குழந்தைக்கு என்ன கொடுக்கலாம்

அடுத்த வாரம் சிறிது பாசிப்பருப்பை பெருங்காயம் சேர்த்து குழைவாக வேக வைத்து மசித்த சாதத்துடன் சேர்த்து ஓரிரு சொட்டு நெய், உப்பு, சிறிது மிளகு சீரக தூள் சேர்த்து கொடுக்கலாம்.

தினமும் குழந்தைக்கு என்ன கொடுக்கலாம்

அடுத்தடுத்த நாட்கள் ரசம், இளம் சாம்பார், கீரை சாறு போன்ற ஏதேனும் ஒன்றை ஒவ்வொரு நாளும் கொடுக்கலாம். அதனுடன் மசிக்கக் கூடிய காய்களான கேரட், பீட்ரூட், பூசணி, பரங்கி, உருளை போன்ற காய்களையும் நன்கு வேகவைத்து மசித்து கொடுக்கலாம். மெதுவாக நெய்யின் அளவையும் சற்றுக் கூட்டிக் கொள்ளலாம். இவற்றுடன் புளிக்காத புது தயிரையும் அன்றாடம் கொடுக்க வேண்டும்.

எவ்வாறு குழந்தைக்கு உணவூட்ட வேண்டும்

கைகளால் அல்லது சிறிய ஸ்பூனில் ஒவ்வொரு வாயாக மெல்ல உணவூட்ட வேண்டும். இவ்வாறு செய்வதால் சிறிது நேரம் குழந்தை உணவை வாயில் மேலும் மசித்து விட்டு விழுங்கிவிடும். தொடர்ந்து தருவதால் பற்கள் முளைத்தவுடன் மெல்ல தொடங்கும். படிப்படியாக மென்று உண்ணவும் கற்றுக்கொள்ளும். தேவைப்படும் போது நாமும் சைகையில் உணவை வாயில் வாங்குவது போலவும், மெல்வது போலவும் செய்து காண்பிக்க எளிது பழகிக்கொள்ளும்.

உணவு ஊட்டிய பின்

மதிய உணவை ஊட்டிய பின் குழந்தைக்கும் சிறிது ஆறிய வெந்நீர் அருந்த கொடுக்கலாம். ஸ்பூனால் அல்லது ஒரு சிறு கிண்ணத்தில் வைத்துக்கொண்டு குழந்தையின் வாயில் வைத்து மெல்ல கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் இரண்டு மூன்று மாதங்களில் குழந்தையே உறிஞ்சி குடிக்க தொடங்கும். பால் பாட்டிலில் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். உணவிற்கு இடையில் தண்ணீர் கொடுத்து பழக்கக் கூடாது.

இவ்வாறு குழந்தைக்கு பழகுவதால் குழந்தை வாழ்நாள் முழுவதும் உணவை மென்று விழுங்கவும் தவறாமல் செய்யக் கற்றுக் கொள்ளும். எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைக்கு கடை உணவுகள், அடைக்கப்பட்ட உணவுகள், ரசாயனங்கள் கலந்த உணவுகளை அளிக்கக் கூடாது. ஒவ்வொரு வேளை உணவும் புதிதாக செய்ததாக இருக்க வேண்டும். அடுத்ததாக எப்பொழுது அதுவும் மாலையில் குழந்தைக்கு என்ன கொடுக்கலாம் என வேறொரு பகுதியில் பார்க்கலாம்.