சிறுகுறிஞ்சான் – நம் மூலிகை அறிவோம்

Gymnema Sylvestre; Gurmar; சிறுகுறிஞ்சான்

நீரிழிவுக்கு மிக சிறந்த நாட்டு மருந்து சிறுகுறிஞ்சான். சிறு கொடிவகை செடியான இந்த மூலிகை தாவரம் நீரிழிவை கட்டுப்பத்துவதற்கு மிக சிறந்த மருந்து, மேலும் செயற்கை சர்க்கரை ஈர்ப்பை எதிர்க்கும் ஆற்றலும் கொண்டது. மேலும் உடலில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் உதவும் சிறந்த மூலிகை மருந்து. குறிஞ்சான், குரிந்தை என பல பெயர்கள் இந்த சிறுகுறிஞ்சான் மூலிகைக்கு உண்டு. கிராமங்களில் குறிஞ்சா கீரை என்றும் அழைப்பதுண்டு. தமிழகத்தில் பரவலாக வேலி ஓரங்களில், புதர்களில், சிறு காடுகளில் இதனைக் காண முடியும்.

கைப்பு சுவை கொண்ட இலையும், வேரும் மருந்தாக பயன்படும் இந்த சிறுகுறிஞ்சான் செடியின் இலைகள் எதிரடுக்கில் நீள்வட்டமான இலையமைப்பைக் கொண்டிருக்கும். இதன் பூக்கள் வெளிர் மஞ்சள் நிற பூக்களாகவும், இலைக்கோணத்திலும் அமைந்திருக்கும். இதன் காய்கள் பச்சை நிறத்திலிருக்கும். இதன் விதைகள் வெடித்து பஞ்சுப்போல் பறக்கும் இயல்புடையது.

உடலுக்கு பலத்தையும் அளிக்கும் இந்த மூலிகை வாத, பித்த, கப நோய்கள், வாதத்தால் உண்டாகும் காய்ச்சல், உடல் பருமன், மாதவிடாய், ஜன்னி ஜுரம், காணாக்கடி நஞ்சு, நீர் வேட்கை, இருமல், இரைப்பு, வாயில் தோன்றும் சிறு புண்கள் முதலியவற்றைப் போக்கும் தன்மையும் இதற்கு உண்டு.

சர்க்கரை நோய்

ஒரு பங்கு சிறுகுறிஞ்சான் இலையை எடுத்து அதனுடன் இரண்டு பங்கு தென்னம்பூவைச் சேர்த்து மைய அரைத்து சிறு சுண்டைக்காய் அளவு உருட்டி மாத்திரைகளாக காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 1 மாத்திரை வீதம் வெந்நீருடன் எடுத்து வர சிறுநீரில் உள்ள சர்க்கரை நோய் விரைவில் மறையும். தொடர்ந்து சாப்பிட நல்ல பலனைப் பெறலாம்.

பெண்களுக்கு

பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளுக்கு சிறந்த பலனை இந்த சிறுகுறிஞ்சான் இலைகள் அளிக்கிறது. சிறுகுறிஞ்சான் இலை பத்து பதினைந்து எடுத்து அதனை நன்கு அரைத்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் எடுத்துவர தாமதித்து வரும் மாதவிடாய், குழந்தைப்பேறு தொந்தரவுகள், உதிரச்சிக்கல் போன்றவை மறையும்.

காச நோய்க்கு

சிறுகுறிஞ்சான் இலையைக் குடிநீரிட்டு பருக இருமல், காய்ச்சல், காச நோய் (T.B.) போன்றவை மறையும்.

விஷக்கடிகளுக்கு

விஷக்கடிகளுக்கு சிறுகுறிஞ்சான் வேர் அல்லது இலை சிறந்த மருந்தாக உள்ளது. இவற்றை நன்கு அரைத்து உள்ளுக்கு எடுப்பதாலும், பாம்பு கடித்த இடத்தின் மீது பூசியும் வர விஷம் நீங்கும்.

(2 votes)