Welcome to HealthnOrganicsTamil !!!

சிறு சோளம்

சோளம் என்றால் மக்காசோளமா? என்கின்றனர் பலர். இது நாட்டுச்சோளம். இன்னும் பல இன்றைய நவநாகரீகத்தினர் சோளம், சோள மாவு என்றவுடன் கடைகளில் கிடைக்கும் கொளகொளப்புத் தன்மையைக் கொடுக்கும் Corn Flour ரா? என்கின்றனர். இந்த நாட்டு சோளத்திற்கும் Corn Flour ருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அது வேறு இது வேறு.

இந்தியாவில் பயிரிடப்படும் தானியங்களில் முக்கியத்துவம் பெற்றதும், அனைத்து தரப்பு மக்களாலும் பெருவாரியாக பயிரிடப்பட்டு உட்கொள்ளப்படும் தானியம் இந்த சிறு சோளமாகும்.

உம்மியில்லாத இந்த இளவரசி இரண்டு நிறங்களில் உள்ளது. வெள்ளையாக உள்ளதை முத்து சோளம், வெண்சோளம் என்றும் சிகப்பாக உள்ளதை சிகப்பு சோளம் என்றும் அழைப்பதுண்டு. Sorghum என்ற ஆங்கில பெயரும் இதற்கு உண்டு.

நாட்டு ரக சிறு சோள பயிர் 11 அடி வரை வளரக்கூடியது. காற்றால் சோளத்தட்டைகளை வளைக்க முடியும். ஆனால் அதை ஒடிக்க முடியாது. சோளத்தட்டையின் உள்ளே ஒரு விதமான மெல்லிய சதைப்பற்று இருக்கும், சோளத்தட்டைகளுக்கு உறுதியை அளிப்பதற்கு.

பல வகையான சத்துக்களை கொண்டுள்ள இந்த சோளத்தை மனிதர்களும் சோள தட்டையை கால் நடைகளும் விரும்பி உண்கின்றனர்.

சோளத்தட்டைகளை மாடுகள் ஆசையாக தின்னக்கூடியது. சோளம் முற்றாத போது பால் கொண்ட தானியமாக இருக்கும். அதை சாப்பிடுவது ஒரு தனி ருசி. ஆனால் தொண்டையில் சிக்கி கொள்ளும் என்று பெரியவர்கள் இதனை சாப்பிட விடமாட்டார்கள். அதையும் மீறி அவர்களுக்கு தெரியாமல் அதனை ருசித்தும் அவதிப்பட்டவர்கள் பலர்.

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் கிராமங்களில் உள்ளவர்களின் விருப்பத்திற்குரிய உணவு சோளச்சோறு, சோளதோசை, சோளக்கஞ்சி. மிகவும் எளிமையான மற்றும் சத்தான உணவு இந்த நாட்டு சோள உணவு.

அனைத்து மண் வகைகளிலும் சிறிது நீரிலும் எந்த இரசாயன உரங்களும், களைக்கொல்லிகளும், பூச்சிகொல்லிகளும் இன்றி நன்கு வளரக்கூடியது. வெப்பமான பகுதிகளுக்கு ஏற்ற பயிர்.

புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், தயாமின், நயாசின், தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து கொண்டுள்ள இந்த சிறு சோளம் உடலில் உள்ள நீரினைப்பெருக்கும் சக்தியைக்கொண்டுள்ளது. இவ்வாறு நீரினை பெருக்கும் சக்தியைக்கொண்டுள்ள இந்த வெள்ளை இளவரசி உடலில் உள்ள நச்சுக்களையும், கற்களையும் கரைக்கக்கூடிய தன்மையை கொண்டிருக்கிறாள்.

சோள உணவை வாரத்திற்கு 2-3 நாட்கள் மற்ற சிறு தானியங்களுடன் அல்லது தனியாக எடுத்துக்கொள்ள – உடலில் உள்ள சிறுநீரக மற்றும் பித்தப்பை கற்கள் சீராக கரைய தொடங்கும். இந்த கற்களினால் ஏற்படும் வலியும் சில நாட்களிலேயே குறைய ஆரம்பிக்கும். நாற்பது வயதை தாண்டியவுடன் அழையா விருந்தாளியாக வரும் கற்கள், தொந்தரவுகள் எளிதில் மறையும்.

உப்புக்களினாலும் அமிலங்களினாலும் உருவான கற்கள் கரைய சோள உணவுடன் உயிர் சத்துள்ள குடிநீரும் அவசியம். கட்டிகளை கரைத்து வெளியனுப்ப நீர் அவசியம்.

சிறு சோளத்தில் ஒருவகை நாட்டு சோளமான இருங்கு சோளம் அன்றாடம் உணவிற்கு அரிசியைப்போல் பயன் படுத்த உகந்தது. இந்த சிகப்பு சோளமானது வைட்டமின் ஏ சத்துக்களை அதிகம் கொண்டுள்ளது. இரத்த சோகை உள்ளவர்களுக்கு ஏற்றது.

மூல நோய் உள்ளவர்கள் இந்த சிறு சோளத்தை அதிகமாக உட்கொள்ளக் கூடாது. அப்படியே உட்கொண்டாலும் பசு மோருடன் உட்கொள்வது சிறந்தது. குளுட்டன் என்னும் புரத வேதிப்பொருள் இல்லாததினால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்கள் சோளத்தை உண்ணலாம்.

பட்டை தீட்டாத சோளத்தில் அதிக நார் சத்து உள்ளது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இதனை உண்ணலாம். கோதுமையை விட அதிக புரத சத்துக்கள் நம் நாட்டு சோளத்தில் உள்ளது.

இந்தியாவில் சோள ரொட்டி என்பது பலராலும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு தேசிய உணவு. பதப்படுத்தப்பட்ட பல குழந்தைகள் உணவில் அதிகமாக சேர்க்கப்படும் தானியமும் இந்த வெள்ளை சோளம் தான்.

சிறு சோளத்தை லேசாக உடைத்து அரிசியாக பயன்படுத்தலாம். சோள சோறு, சோள களி, சோள அடை, சோள வடை, சோள பாயசம், சோள மால்ட், சோள உப்புமா, சோள இடியாப்பம், சோள பிஸ்கட் என பல உணவு பொருட்களை தயாரிக்கலாம். இன்று சோள அவல் மிகவும் பிரபலம்.

காலை உணவிற்கு அந்த அவலில் சிறிது சூடான பசும்பாலை ஊற்றி சிறிது இனிப்பிற்கு நாட்டு சக்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து உண்ண நல்ல சத்தான உணவு. உடலை குறைக்க நினைக்கும் பலருக்கு வரப்பிரசாதமான உணவு. வெளிநாட்டு மேற்கத்திய உணவுகளுடன் சிறந்த உணவும் இது.

சோளப்பால், சோளப் புட்டு, சோள தோசை போன்ற உணவுகளுக்கு ஈடு இணையே இல்லை. சோளத்தை வெறும் வாணலியில் பொரித்து மக்காசோள popcorn போல செய்து சிறிது உப்பு மிளகுதூள் சேர்த்து கொடுக்க குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

இரத்த அழுத்தம், சக்கரை நோய் போன்றவற்றிற்கும் மாமருந்து இந்த சிறு சோளம். மேலும் உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும்.

இரவு உணவினை சிறு சோளத்தாலானா ரொட்டியினை உண்பது சிறந்தது. இரண்டு பங்கு சிறு சோள மாவுடன் ஒரு பங்கு கோதுமை மாவு சேர்த்து ரொட்டி செய்து உண்ணலாம்.

மாலை வேளையில் எதாவது சிற்றுண்டி இருக்க மகிழ்வுடன் வரும் குழந்தைகளுக்கு வடை, பஜ்ஜி என்று மட்டும் செய்து கொடுக்காமல், ஆரோக்கியமாக புட்டு செய்து கொடுக்கலாம். அதிலும் எப்போதும் போல ஒரே மாதிரியாக அரிசி மாவை கொண்டு மட்டும் புட்டு செய்யாமல், வெள்ளை சோளம், சிகப்பு சோளம் அல்லது கம்பு சேர்த்து புட்டு செய்து கொடுக்க விரும்பி உண்பார்கள் குழந்தைகள்.

என்ன தான் பல மருத்துவமும் மருந்துகளும் இருந்தாலும் நிரந்தர தீர்வு என்பது உணவும் வாழ்வியல் பழக்க வழக்க மாற்றங்களினால் மட்டுமே சாத்தியம்.

மதிப்பீடு செய்யவும்
சிந்தனை துளிகள் :

சமுத்திரம் பொங்கினால் கிணறு கொள்ளுமா?

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!