சிறியா நங்கை / நிலவேம்பு – நம் மூலிகை அறிவோம்

Andrographis paniculata; நிலவேம்பு; சிறியாநங்கை

விசக்கடிகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கும் ஒரு அற்புதமான மூலிகை சிறியா நங்கை. இந்த மூலிகையின் மற்றொரு சிறப்பு இது இருக்குமிடத்தில் பாம்பு வராது என்பது. தமிழகத்தில் பரவலாக இந்த மூலிகையைப் பார்க்கமுடியும், அதிலும் கிராமங்களில் பலர் வீடுகளின் வாசலிலும் வீட்டைசுற்றிலும் இந்த மூலிகையை பாம்பை விரட்ட வளர்ப்பதுமுண்டு. நிலவேம்பு என்றும் இதற்கு பெயருண்டு. நல்ல கசப்பாக இருக்கும் மூலிகை. நிலவேம்பு கசாயம் கேள்விப்பட்டிருப்போம் அந்த நிலவேம்பு இது தான். இது பலரும் அறியாத ஒன்று. பெரியா நங்கை என்ற ஒரு மூலிகையுமுண்டு, அது பித்த நோய்களையும், மலச்சிக்கலையும் தீர்க்கும்.

சிறியாநங்கை மூலிகை ஒரு சிறு செடி வகைத் தாவரம். இதன் இலைகள் நீண்டு முட்டை வடிவத்திலிருக்கும். இதன் தண்டுகள் நான்கு கோணத்திலும் பட்டையானவை. இதன் பூக்கள் வெண்மை நிறத்தில் நாக்கு போன்ற நீண்டு ஊதா நிற புள்ளிகளுடன் இருக்கும். இந்த செடியின் கணுக்களிலும் நுனியிலும் குறுக்கு மறுக்காக இந்த பூக்கள் இருக்கும். இதன் காய்கள் சிறிய விதைகளைக் கொண்டு மஞ்சள் நிறத்தில் வெடிக்கும் தன்மைகொண்டதாக இருக்கும்.

கசப்பு சுவைக் கொண்ட இந்த செடி முழுவதுமே அதாவது சமூலமே மருத்துவப் பயனுடையது. உடலுக்கு சிறந்த ஒரு மூலிகை, உடலைத் தேற்றும் மூலிகை இது. உடலுக்கு பலமளிப்பது மட்டுமல்லாமல் காய்ச்சல், அஜீரணம், உடல் சோர்வு, மலேரியாக் காய்ச்சல், பாம்புக் கடி நஞ்சு போன்றவற்றிற்கும் சிறந்த பலனை அளிக்கும்.

காய்ச்சலுக்கு

சிறியா நங்கை இலையுடன் சுக்கு, திப்பிலி, சீந்தில் கொடி ஆகியவற்றை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அரை லிட்டர் நீரிலிட்டு பாதியாக சுண்டக்காய்ச்சி இரண்டு ஸ்பூன் அளவு தினமும் 2 வேளைகள் கொடுத்து வர குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்துவித காய்ச்சல்களும் நீங்கும் பெரியவர்கள் சற்று அளவை அதிகரித்து எடுத்துக்கொள்ளலாம். சிறந்த பலனை விரைவாகத் தரும்.

நரம்புகள் பலம் பெற

இந்த சிறியா நங்கை இலையை மைய அரைத்து தினமும் கொட்டைப்பாக்களவு எடுத்து பாலில் கலந்து காலையில் உண்டு வர நரம்புகள் பலம் பெற்று, உடல் வலுபெறும்.

பாம்பு கடி விஷம் நீங்க

பாம்பு கடி விஷம் நீங்க சிறியா நங்கை இலையை கசப்புச் சுவை தோன்றும் வரை கடித்துத் தின்னும்படி கொடுத்துவர நீங்கும்.

(1 vote)