சைனஸ், டான்சில், ஈஸ்னோபீலியா, தும்மல், இருமல், டயட், அலர்ஜி, ஆஸ்துமா நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்

காலை 6 மணிக்கு வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு ஸ்பூன் தேன் அல்லது அரை ஸ்பூன் சீரகத் தூள் கலந்து குடிக்க வேண்டும்.

காலை 6:30 மணிக்கு முருங்கை கீரை, தூதுவளை, நெல்லி, தும்பை, குப்பைமேனி, துளசி, கொத்தமல்லி போன்றவற்றில் ஏதேனும் ஒன்று ஒரு கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு டம்ளராக வற்ற காய்ச்சி வடிகட்டி பருகவும்.

காலை 7 மணிக்கு சுக்கு மல்லி ஓமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து காபி அல்லது ஒரு கப் அளவு வெஜிடபிள் சூப் தயாரித்து பருகலாம் அல்லது ஏதேனும் ஒரு பாரம்பரிய அரிசி அல்லது சிறுதானியத்தில் கஞ்சி தயாரித்து பருகலாம்.

காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் பழங்கள், காய்கள், வெஜிடபிள் சாலட், புரூட் சாலட், ஜூஸ் போன்றவை தேவையான அளவு சாப்பிடலாம். குறிப்பாக பப்பாளி, அன்னாசி, கொய்யா, ஆரஞ்சு, சாத்துகுடி, பேரிச்சை, திராட்சை, கேரட், வெள்ளரிக்காய், தேங்காய், நாவல், தர்பூசணி, தக்காளி போன்றவற்றில் ஏதேனும் இரண்டு வகைகளை தேவையான அளவு உட்கொள்ளலாம்.

பதினொன்றரை மணிக்கு தாளித்த மோர், இளநீர், தண்ணீர், லெமன் ஜூஸ் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று குடிக்கலாம்.

மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணிக்குள் முக்கால் வயிறு சமைத்த உணவு உட்கொள்ளவும். இதில் மூன்றில் ஒரு பங்கு அளவு காய்கறிகள், கீரைகள் இடம் பெறவேண்டும். சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசிகளை சேர்த்துக் கொள்வது சிறந்தது.

மாலை நான்கு – ஐந்து மணிக்கு சுக்கு காபி அல்லது ஏதேனும் ஒரு கஞ்சி வகைகளை உண்ணலாம்.

இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் இட்லி, இடியாப்பம், தோசை, ரொட்டி போன்ற உணவுகளை உணவாக வாரம் நான்கு நாட்களும் மற்ற மூன்று நாட்கள் பழங்களும் காய்களுமாக உட்கொள்ளவும். இரவு உணவை 50% சதவீதம் உட்கொள்ளவேண்டும், 25% தண்ணீரும் 25% காலியாகவும் இருக்குமாறு உணவு உட்கொள்ள வேண்டும்.

மேலும்

  • டீ, காபி, புகைத்தல், மது வகைகள், பொடி போடுதல், மாமிச உணவுகள், குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கவும்.
  • தினமும் காலை, பகல், மாலை, இரவு ஆகிய நான்கு வேளையும் உணவுக்கு முன் ஐந்து நிமிடம் மூச்சு பயிற்சி செய்தல் வேண்டும்.
  • 30 நிமிடம் தினமும் எளிய உடற்பயிற்சிகளை காலை, மாலை செய்தல் வேண்டும்.
  • நெஞ்சு பகுதியில் வெந்நீர் ஒத்தடம் தினமும் தரலாம்.
  • உடல் சூரிய ஒளியில் படும்படி காலை, மாலை இருத்தல் நல்லது.
  • மிளகு, இஞ்சி, பூண்டு சாம்பார் வாரம் ஓரிரு நாள் சாப்பிடலாம்.
  • தினமும் தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடவும்.
  • கொம்பு மஞ்சள் எடுத்து நெருப்பில் (விளக்கில்) சுட்டு நுகரவும்.
  • கால் பங்கு கட்டி கற்பூரம் அரை ஸ்பூன் ஓமத்தை ஒன்றாக கலந்து மெல்லிய துணியில் முடிந்து நுகர்ந்தால் மூச்சுத் திணறல் உடனே நின்றுவிடும்.
  • நறுமண மலர்களை நுகரலாம்.
  • வேப்பிலை, துளசி, ஓமம், சுக்கு, மஞ்சள், தனியா, கொத்தமல்லி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வாரம் ஒருமுறை ஆவி பிடிக்கவும்.
  • கொத்தமல்லித்தழை, சின்ன வெங்காயம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் முடிந்தவரை பச்சையாக உட்கொள்ளவும்.
  • வாரம் ஒருமுறை ஒருநாள் ஒருவேளை உணவை முற்றிலும் தவிர்க்கவும்.
  • தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். சாதாரண நீர் தான் குடிக்க வேண்டும். முடிந்தால் துளசி, ஓமம், சீரகம், மிளகு, மஞ்சள் தூள் போன்ற ஏதேனும் ஒன்றை சிறிது குடிநீரில் சேர்த்து அருந்தலாம்.
(1 vote)